Last Updated : 12 Jul, 2019 11:05 AM

 

Published : 12 Jul 2019 11:05 AM
Last Updated : 12 Jul 2019 11:05 AM

மற்றும் இவர்: பாதை மாறிய பயணம்

சில நடிகர்கள் சினிமாவில் அடி மேல் அடி வைத்துத்துதான் முன்னேறுவார்கள். அது போலக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் விவேக் பிரசன்னா.

சினிமாவில் சிறு சிறு வேடங்களில் வாழ்க்கையைத் தொடங்கிய விவேக் பிரசன்னா, வில்லன், குணச்சித்திரம் ஆகிய கதாபாத்திரங்களைத் தாண்டி அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

விவேக் பிரசன்னாவின் சொந்த ஊர் சேலத்தில் உள்ள சின்னனூர். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். அப்போது கல்லூரி நண்பர்களின் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கல்லூரிப் படிப்பை முடிக்கும்போது சினிமா கேமரமேன் ஆக வேண்டும் என்று விவேக் பிரசன்னாவுக்கு ஆசை.

அதனால், ஒளிப்பதிவாளர் சித்தார்த்திடம் உதவியாளராகச் சேர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினார். ‘அரவான்’, ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ உள்பட 3 படங்களில் உதவி கேமராமேனாகப் பணிபுரிந்திருக்கிறார். அதன்பிறகு தனியாக கேமராமேன் ஆக வேண்டும் என்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார்.

கவனிக்கப்பட்ட குறும்படம்

அப்போதுதான் அவருடைய நண்பர் விஜய் கார்த்திக் மூலம் இயக்குநர் ரத்னகுமார் அறிமுகமாகியிருக்கிறார்.

ரத்னகுமாரின் ‘மது’ என்ற குறும்படத்தில் விவேக் பிரசன்னா நடித்திருக்கிறார். அது யூடியூப்பில் ஹிட் அடித்தது. அதில் விவேக் பிரசன்னா நடிப்பும் பேசப்பட்டிருக்கிறது. பல குறும்படங்களின் தொகுப்பை, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் திரையரங்குகளில் வெளியிட, அதில் இடம்பெற்றிருந்த ‘மது' குறும்படம் இன்னும் பேசப்பட்டது.

குறும்படம் வழியே திரையில் மிளிர்ந்துவரும் விஜய் சேதுபதி அந்தக் குறும்படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார். அதுவே இவருக்கு விளம்பரமாக அமைந்துவிட, நிறையக் குறும்பட வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. இதன்பிறகு நடந்தவற்றை பிரசன்னாவே சொல்கிறார்.

“நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த பலரும் அறிவுரை சொன்னார்கள். அந்த நேரத்தில்தான் விஜய் சேதுபதி அண்ணா, இயக்குநர் ரத்னகுமாரிடம், ‘என்னை கேமராமேன் வேலையை விட்டுவிட்டு நடிக்க வரச்சொல்லுங்க’ என்று சொல்லியிருக்கிறார். சேது அண்ணா சொன்ன பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவுசெய்தேன்” என்கிறார்.

சினிமாவில் நடிக்க முடிவெடுத்த பிறகு விவேக் பிரசன்னாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு, ‘டார்லிங் 2’ படம். சின்ன வேடத்தில் நடித்த விவேக், பட வாய்ப்புகளைத் தேடி பல பட கம்பெனிகளுக்கு ஏறி இறங்கியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ‘இறைவி’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘மாநகரம்’ போன்ற படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் வந்துபோயிருக்கிறார்.

திடீர் திருப்பமாக ‘சேதுபதி’ படத்தில் நடிக்க இயக்குநர் அருண்குமார் அழைத்திருக்கிறார். விஜய் சேதுபதிக்கு எதிராகச் சற்று வயதான தோற்றத்தில் மதிவாணன் என்ற துணை வில்லன் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடித்தார். “இந்தப் படம்தான் எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது.” என்கிறார் விவேக்.

திருப்புமுனை

‘விக்ரம்-வேதா’ படத்தில் முக்கிய வில்லனாக ‘லார்ட் ரவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தது விவேக் பிரசன்னாவுக்குத் தனி அடையாளத்தைக் கொடுத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் ரத்னகுமார் ‘மது’ குறும்படத்தை ‘மேயாத மான்’ என்ற பெயரில் வெள்ளித் திரையில் உருவாக்கினார்.

அந்தக் குறும்படத்தில் விநோத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், திரைப்படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். ‘மேயாத மான்' அவரைத் திரையில் பாய்ந்து செல்லும் மானாக மாற்றிவிட்டது.

“சின்ன வேடங்களிலும் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருந்த எனக்கு, ‘மேயாத மான்’ படத்தில் ஜோடியும் இருந்தது. குணச்சித்திர நடிகர் என்ற பெயரையும் இந்தப் படம் எனக்கு வாங்கிக்கொடுத்தது. படமும் ஹிட். நல்ல நடிகர் என்ற பெயரும் கிடைத்தது” என்கிறார் விவேக் பிரசன்னா.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்திலும் நடித்திருந்தார். அந்தப் பட வாய்ப்பு கிடைத்தது பற்றி ஒரு கனவை போல விவரிக்கிறார்.

ரஜினியுடன் நடித்தேன்

“கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே, எப்போதுமே ஆடிஷன் இருக்கும். ‘பேட்ட’ படத்துக்கும் ஆடிஷன் டெஸ்ட் மூலம்தான் கல்லூரி விரிவுரையாளர் வேடம் கிடைத்தது. சூப்பர் ஸ்டார் ஒவ்வொரு ஷாட்டையும் ஒரு புதுமுகம்போலவே நினைத்துச் செய்கிறார். ரஜினியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்”என்கிறார்.

அண்மையில் வெளியான ‘சிந்துபாத்’ படத்திலும் விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியுடன் இணைந்து மூன்றாவது முறையாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது எப்படி என்றதும் “எனக்கு மிகவும் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் சேது அண்ணாவை வைத்து படம் பண்ணும்போது எனக்கும் கிடைத்துவிடுகிறது என்பதுதான் உண்மை.” என்கிறார் விவேக் பிரசன்னா.

அடுத்த கதாநாயகன் அவதாரமா என்று கேட்டால் சிரிக்கிறார் விவேக் பிரசன்னா. “தற்போது 24 படங்களில் நடித்து முடித்துவிட்டேன். என் நடிப்பை வைத்து ஒரு பெரிய ப்ரொபைலை உருவாக்க வேண்டும் என்பதில் மட்டுமே என் கவனம் உள்ளது. சினிமா என்பதே நாயகனை வைத்துதான் வர்த்தகமே.

எனக்கு எந்த அளவுக்கு மார்க்கெட் இருக்கிறது? தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களா? இதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். வாய்ப்பு கிடைத்தது என்று நான் நாயகனாக நடித்து பிறகு யாரும் கஷ்டப்பட்டுவிடக் கூடாது.

தியேட்டர் கிடைக்காமல் போய்விடக் கூடாது. கலெக்‌ஷன் இல்லாமல் போய்விடக் கூடாது. கதைக்கான நாயகன் என்ற ரோல் கிடைக்கும்போது எதைப் பற்றியும் யோசிக்காமல் நான் நடிப்பேன்” என்று யதார்த்தமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பேசுகிறார் விவேக் பிரசன்னா.

மறக்க முடியாதவர்கள்?

இயக்குநர்கள் ரத்னகுமார், அருண்குமார், கார்த்திக் சுப்புராஜ், நடிகர் விஜய் சேதுபதி. இவர்கள் இல்லாவிட்டால் என் சினிமா வாழ்வே கிடையாது.

விருது?

‘மேயாத மான்’ படத்துக்காக விஜய் டிவி விருது கிடைத்தது.

லட்சியம்?

எல்லோருக்கும் பிடித்த மாதிரி நடிக்க வேண்டும். அவ்ளோதான்.

அடுத்த படங்கள்?

ஜீவா நடிப்பில் ‘கொரில்லா’, ரத்னகுமார் இயக்கத்தில் ‘ஆடை’, கதிர் நடிப்பில் ‘சர்பத்’, சூர்யாவுடன் ‘சூரரை போற்று’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x