Last Updated : 06 Jul, 2019 10:50 AM

 

Published : 06 Jul 2019 10:50 AM
Last Updated : 06 Jul 2019 10:50 AM

சிகிச்சை டைரி 12: அப்பாவின் அவதி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஊரிலிருந்து அப்பா வருகிறார் என்பதால், தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். வழக்கத்தைவிட 30 நிமிடங்கள் தாமதமாக ரயில் வந்தது. ரயிலிலிருந்து அலுப்புடன் அம்மா முதலில் இறங்கினார். அதன்பின் அப்பா இறங்கினார். பேத்தியைப் பார்க்கும் உற்சாகத்தில் மலர்ந்திருக்கும் அவருடைய முகம் அன்று ஏனோ வாடி இருந்தது.

அவரிடமிருந்து பையை வாங்கிக்கொண்டு “என்ன, உடம்பு ஏதும் சரியில்லையா?” என்று கேட்டேன். “அதெல்லாம் ஒன்றுமில்லை. ரயிலில் ஏதோ பூச்சி கடித்துவிட்டது என்று நினைக்கிறேன். இங்கே வலிக்குது” என்று சொன்னபடி இடதுகை பெருவிரலைக் காட்டினார். நானும் விரலைப் பிடித்து நன்கு பார்த்தேன். வீக்கம் ஏதும் இல்லை. பூச்சி கடித்த தடமும் இல்லை. “ஒன்றும் இருக்காது சரியாகிவிடும்” என்று சொன்ன படி அவரை வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

இதுக்கெல்லாமா டாக்டர்?

வீட்டுக்கு வந்தவுடன், பேத்திக்கு வாங்கி வந்த துணிகள், பண்டங்கள் போன்றவற்றை எல்லாம் பிரித்து உற்சாகத்துடன் கொடுத்தார். ஆனால், அவர் முகத்தில் தெரிந்த வாட்டம் எனக்கு உறுத்தலாகவே இருந்தது. “இப்போ வலி எப்படி இருக்கு?” என்று கேட்டேன். “வலி குறையவில்லை. இப்போது இங்கிருந்து வலிக்குது” என்று சொன்னபடி இடதுகை மணிக்கட்டைக் காட்டினார்.

“டாக்டரிடம் வேண்டுமானால் போகலாமா?” என்று கேட்டேன். “இதுக்கெல்லாமா டாக்டரிடம் போவார்கள்” என்று சிரித்தபடி பேத்தியுடன் விளையாடத் தொடங்கிவிட்டார். சரியென்று நானும் குளித்துப் புறப்பட்டு  அலுவலகத்துக்குச் சென்றுவிட்டேன்.

அன்று மாலை நான் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தேன். அப்பாவின் முகம் காலையைவிட மிகவும் வாடியிருந்தது. “ஏன் தூங்க வில்லையா?” என்று கேட்டேன். “உன் மகள் எங்க தூங்கவிட்டா” என்று சொன்னபடி சிரிக்க முயன்றார். அவரால் சிரிக்க முடியவில்லை. அவருக்கு ஏதோ செய்கிறது என்று புரிந்தது. அவரது நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன், காய்ச்சல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. “இல்லடா. கைதான் இங்கேயிருந்து வலிக்குது” என்றபடி இடதுகை முழங்கையைக் காட்டினார்.

எலும்பில் தேய்மானமா?

அப்பாவை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த எலும்பு மருத்துவரிடம் அழைத்துச்சென்றேன். வலி தாங்க முடியாமல் அப்பா பிதற்றத் தொடங்கினார். நான் உள்ளே சென்று “ரொம்ப அவசரம். உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும்” என்று உதவியாளரிடம் கூறினேன். அந்த உதவியாளர், அப்பாவின் வயதைக் கருத்தில்கொண்டு உடனடியாக உள்ளே அனுமதித்தார்.

அந்த மருத்துவர் அப்பாவின் சட்டையைக் கழற்றச் சொன்னார். கையைத் தூக்கிப் பார்த்தார், மடக்கிப் பார்த்தார், சற்று முறுக்கிப் பார்த்தார். பின்பு “ஒரு எக்ஸ்ரே எடுக்க வேண்டும். உடனடியாக எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்றார். அந்த மருத்துவமனையிலேயே எக்ஸ்ரே வசதி இருந்தது.

எக்ஸ்ரே எடுத்துக்கொண்டு மீண்டும் டாக்டரைச் சென்று சந்தித்தோம். எக்ஸ்ரேயை உற்றுப் பார்த்த டாக்டர் “ஒண்ணுமில்லை ஐயா. வயது காரணமாகக் கழுத்து எலும்பில் ஏற்பட்டிருக்கும் தேய்மானத்தால்தான் உங்களுக்கு வலி ஏற்பட்டு உள்ளது” என்றார். மருத்துவர் கழுத்தெலும்பை எனக்குப் படமாக வரைந்து காண்பித்து விளக்கம் அளிக்க முயன்றார்.

அவர் அளித்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தாலும் “ஒரு நாளில் எப்படி இந்த அளவு வலி?” என்று எனக்குள் கேள்வி எழுந்தது. அப்பாவின் வலிக்கு ஊசி போட்டு விட்டார். கழுத்துக்கு பெல்டும் கொடுத்தார். இதை எப்போதும் அணிந்துகொள்ளுங்கள் என்று சொன்னபடி, மாத்திரை எழுதிக்கொடுத்தார்.

தைலம் ஏதும் போட வேண்டாம் என்று சொன்னபடி எங்களை அனுப்பிவைத்தார். வலி நிவாரண ஊசி கொடுத்த நிவாரணத்தில் அப்பா சற்று அசந்து தூங்கிவிட்டார். சரி, இனி சரியாகிவிடும் என்ற நிம்மதியில் நானும் தூங்கிவிட்டேன்.

முடங்கிப்போன கை

காலையில் அப்பாவின் வலி முன்பை விட அதிகரித்து இருந்தது. இடதுகை தோள்பட்டையிலிருந்து வலிப்பதாகச் சொன்னார். தன்னால் கையை அசைக்க முடியவில்லை என்றும் சொன்னார். அவரது இடதுகையை அவரால் இயக்க முடியவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன், நண்பர்களுடன் ஆலோசித்து அப்பாவை உடனடியாக ஒரு புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்.

அப்பாவை நன்கு சோதனை செய்த அவர், “எலும்புத் தேய்மானம் போன்றுதான் உள்ளது. எதற்கும் ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிடுவோம்” என்று சொன்னார். சரியென்று புறப்பட்டபோது, அவருக்குப் பக்கத்து அறையிலிருந்த எலும்பு மருத்துவரை ஆலோசித்துவிட்டு மீண்டும் வந்து என்னைப்  பாருங்கள் என்றார்.

வழிகாட்டிய மருத்துவர்

அந்த எலும்பு மருத்துவருக்கு 55 வயது இருக்கக்கூடும். அப்பாவின் சட்டையைக் கழற்றச் சொன்னார். கையை நன்கு பரிசோதித்தார். எக்ஸ்ரேயை உற்றுப் பார்த்தார். பின்பு மீண்டும் அப்பாவின் கையைப் பரிசோதித்தார்.

கழுத்தைத் திருப்பிப் பார்த்தார். அப்பாவின் தோள்பட்டைக்கு அருகில் சிவந்து இருந்ததைப் பார்த்த அவர், “இது என்ன? எப்போதும் இப்படித்தான் இருக்குமா?” என்று கேட்டார். “தெரியவில்லையே” என்று அப்பா முணுமுணுத்தார். அந்த மருத்துவருக்கு ஏதோ பிடிபட்ட மாதிரி தெரிந்தது.

“ஸ்கேன் எல்லாம் இப்போ எடுக்க வேண்டாம். முதலில் இங்கி ருக்கும் தோல் சிகிச்சை மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்து என்னைச் சந்தியுங்கள்” என்று அந்த மருத்துவருக்குச் சீட்டு எழுதிக்கொடுத்தார்.

நோயைக் கண்டறிந்த மருத்துவர்

அந்தத் தோல் சிகிச்சை மருத்துவர் இளம் வயதினராக இருந்தார். அவசரம் இல்லாமல், முதலில் எல்லா ரிப்போர்ட்டையும் படித்து முடித்தார். அதன்பின் அப்பாவின் சட்டையைக் கழற்றச் சொன்னார். அப்பாவின் தோளில் தெரிந்த சிவப்பு தடத்தைப் பார்த்ததும் அவரது முகம் மலர்ந்தது.

“இந்த வலிக்குக் காரணம் எலும்பு தேய்மானம் அல்ல; அதற்குக் காரணம் ஹெர்பஸ் ஸோஸ்டர் (herpes zoster). தமிழில் அதை  ‘அக்கி’ என்போம். இது அம்மையில் ஒரு வகை. சிறுவயதில் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு வயதான காலத்தில் இது ஏற்பட சாத்தியம் உண்டு.  இந்த அம்மை பொதுவாக நரம்புகளுக்குள் ஏற்பட்டு, அதன் செயல்பாட்டைப் பாதிக்கும்.

கண் நரம்பில் இது ஏற்பட்டால், பார்வை இழக்கும் அபாயம் உண்டு.  தோள் நரம்பில் ஏற்பட்டு உள்ளதால், இது கையின் இயக்கத்தைப் பாதித்து, கையை முடங்கச் செய்யும்” என்றார். மேலும் “இனிப் பயப்படத் தேவையில்லை. ஆறு நாட்கள் மருந்து சாப்பிடுங்கள், கூடவே பிஸியோதெரபியும் செய்யுங்கள், எல்லாம் சரியாகிவிடும்” என்று நம்பிக்கையளிக்கும் குரலில் சொன்னார்.

நீயும் மருத்துவர் ஆகணும்

மாத்திரை உட்கொள்ளத் தொடங்கிய வுடன், அப்பாவின் வலி குறையத் தொடங்கியது. மூன்று நாட்களில் வலி முற்றிலும் விலகியது. பிஸியோதெரபி மட்டும் கிட்டத்தட்ட ஒரு மாதம் தொடர்ந்தது. ஆனால், அப்பாவின் கை பழைய நிலைக்குத் திரும்ப ஆறு மாதங்களுக்கு மேலானது.

“உன்னைத் தூக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்தேன் தெரியுமா? நீயும் நல்லா படித்து நல்ல மருத்துவர் ஆகணும்” என்று என்னுடைய மகளிடம் அவர் நேற்று சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது எனது கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

தொடர்புக்கு:

mohamed.hushain@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x