Published : 09 Jul 2019 11:43 am

Updated : 09 Jul 2019 11:43 am

 

Published : 09 Jul 2019 11:43 AM
Last Updated : 09 Jul 2019 11:43 AM

ஆங்கில​ம் அறிவோமே 272: தொந்தரவு இல்லாத இடம்!

272

கேட்டாரே ஒரு கேள்வி

Sales என்பதும், Marketing என்பதும் வேறு வேறா என்ன?


இதற்கான பதிலைத் தோராயமாக இப்படிக் கூறலாம்.

இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ளவை. Sales என்பது ஏற்கெனவே தயாரிக்கப்பட்டப் பொருள்களைப் பொருத்ததாக இருக்கும். பெரும்பாலும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் விற்பனைக்கு வரும். ஆக இது வாடிக்கையாளர்கள் (வாங்குபவர்கள்) தொடர்பானது.

Marketing என்பது, பொருள் தயாரிக்கப்படுவதற்கு முன்பே அதை வாங்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது எனலாம். விளம் பரங்கள்கூட இதில் அடங்கும். Market என்பது பலருக்கானது (பொது மக்களுக்கானது). ஒரு நிறுவனத்துக்கு நல்லபெயரை ஈட்டித் தருவதுகூட marketing-ன் குறிக்கோளாக அமையலாம்.

“Resilence என்ற வார்த்தையின் அடிப்படை silence என்பதா? அப்படியென்றால்?”

நண்பரே, resilence என்று ஒரு வார்த்தை கிடையாது. அது resilience (அதாவது ‘l’ என்ற எழுத்துக்கு அடுத்து ‘i’ என்ற அதிகப்படி எழுத்து உண்டு).

Resilience என்ற வார்த்தை கடினமான சூழலிலிருந்து மீண்டு வரும் தன்மையைக் குறிக்கிறது. அல்லது வளைக்கப்பட்ட அல்லது அழுத்தப்பட்ட ஒரு பொருள் மீண்டும் தன் பழைய நிலையை அடையக் கூடிய தன்மையைக் குறிக்கிறது. தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை ஓர் எடுத்துக்காட்டு.

Hiroshima has risen from the ashes with admirable resilience.

Transition – Transient

Transition என்பது ஒன்று இன்னொன்றாக மாற்றமடையும் போது அதற்கு இடைப்பட்ட காலகட்டம். The transition has happened gradually. In this country there was a period of transition from an autocracy to a democracy. இந்த வாக்கியம் உணர்த்துவது இதைத்தான். சர்வாதிகாரத்திலிருந்து மக்களாட்சியை இந்த நாடு சட்டென்று அடைந்துவிடவில்லை. அப்படி மாறுவதற்கான இடைப்பட்ட காலம் ஒன்று இருந்தது.

Transient என்றால் மிகக் குறைந்த நேரமே இருக்கும் ஒன்று. அதாவது, தொடர்ந்து நீடிக்காத ஒன்று. வீடு இல்லாத ஒருவரை transient என்பதுண்டு. ஒரு நிறுவனத்தில் மிகக் குறைந்த காலத்துக்குப் பணியாற்றிய ஒருவரையும் transient என்று கூறுவதுண்டு.

“Ill gotten gains never prosper என்று ஒரு நூலில் படித்தேன். இதற்குப் பொருள் என்ன?’’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

தவறான விதத்தில் அடைந்த லாபங்கள் ஒருபோதும் வளராது (பலன் தராது) என்று பொருள். இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே தெருவில் ஒரு பெண்மணி ஓர் ஆட்டோ ஓட்டுநருக்குச் சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். “இவ்வளவு கம்மி தூரத்துக்கு எழுபது ரூபாயா? இந்தப் பணம் உனக்குச் செரிக்காது, ஒட்டாது”.

“I am always under gun” என்று I.T. துறையில் ஒருவர் தன் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். எதற்காக இந்தத் தீவிரவாத வாக்கியம்?”

அது அப்படியல்ல நண்பரே. அவரிடமிருந்து தொடர்ந்து வேலை யைச் சக்கையாகப் பிழிகின்றனர். He has to perform under a tight deadline.

போட்டியில் கேட்டுவிட்டால்

I want a place where I can work without __________

(a) boredom

(b) interruption

(c) enthusiasm

(d) music

எனக்கு ஓர் இடம் வேண்டும் - பணிபுரிவதற்கு. அது எது இல்லாத இடமாக இருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. கொடுக்கப் பட்டுள்ள பதில்களில் எதை அங்கு நிரப்பினாலும் ஆங்கில இலக்கணக் கணிப்பு தவறில்லைதான். ஆனால் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எது மிகப் பொருத்தமான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதுதான் முக்கியம்.

போரடிக்காத இடத்தைக் கொடு என்று கோர முடியாது. அது மனநிலையையும் பொருத்த விஷயம்.

உற்சாகமில்லாத ஓர் இடம் வேண்டும் என்பதும் சரியல்ல. அதேபோல இசையே இல்லாத இடத்தில் நான் பணிபுரிய வேண்டும் என்று பொதுவாக யாரும் கேட்க மாட்டார்கள் (சத்தமில்லாத இடத்தில் என்று கேட்பார்கள்). Interruption என்றால் இடையூறு. இது மிகப் பொருத்தமாக இருக்கிறது. எந்தவிதத் தொந்தரவும் இல்லாத இடத்தில் வேலை செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவது இயல்பானது. எனவே I want a place where I can work without interruption என்பதுதான் சரியான வாக்கியம்.

சிப்ஸ்

# Chest என்பதும், Heart என்பதும் ஒன்றா?

இல்லை. Chest என்றால் மார்புப் பகுதி. Heart என்றால் மார்புப் பகுதியில் அமைந்துள்ள இதயம்.

# Come down என்றால்?

வீழ்தல் - collapse. The building came down.

# Procrastination என்றால் என்ன?

Postponement – தள்ளிப்போடுதல்.

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author