Published : 07 Jul 2019 09:42 AM
Last Updated : 07 Jul 2019 09:42 AM

விவாதக் களம்: திருமணம் பெண்ணின் உரிமைதான்

கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனுடைய மகள் மாளவிகா, மருத்துவர் மைக்கேல் மர்ஃபியை மணக்கவிருக்கிறார். மாற்று மதத்தவரை அவர் மணப்பது பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பலர் பதிவிட்டனர்.

இது குறித்து ஜூன் 30-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’வில், ‘திருமணம் தனி மனித உரிமையில்லையா?’ எனக் கேட்டு எழுதியிருந்தோம். கிட்டத்தட்ட வாசகியர் அனைவருமே திருமணம் பெண்ணின் உரிமைதான் என அடித்துச் சொல்லியிருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் உங்களின் பார்வைக்கு.

திருமணம் தனி மனித உரிமைதான். சாதி மறுப்புத் திருமணங்கள் தற்போது பரவலாக நடைபெற்று வருகின்றன. சுதந்திரம் இல்லாத சாதிய கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கையை இளைய தலைமுறை விரும்புவதில்லை. அதற்காகச் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்கிறவர்களைக் கண்டபடி மனம்போன போக்கில் விமர்சனம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

- ஜீவன், கும்பகோணம்.

பிறரது சொந்த முடிவில் எல்லை மீறி மூக்கை நுழைப்பது நாகரிகமற்ற செயல். இந்தக் காலத்திலும் படித்தவர்கள்கூட சாதி மீறிய திருமணங்களை எதிர்ப்பது வியப்பாக உள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் பெண்களை வசைபாடுவதும் வன்முறையே.

- இரா.பொன்னரசி, வேலூர்.

ஒரு பெண் திருமணத்தின் மூலம் ஒருவரைத் தன் வாழ்க்கையில் இணைத்துக்கொள்வது, தன் சுக துக்கங்களையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளத்தானே தவிர தான் பிறந்த சாதியையோ மதத்தையோ கட்டிக் காப்பாற்ற அல்ல. திருமணம் என்பது சாதியும் மதமும் இணைவதல்ல. அது இரு மனங்கள் இணைவது. சமூகத்தின் அனைத்து மதிப்பீடுகளையும் பெண்ணின் மீது திணித்து அவர்களைக் கட்டுப்படுத்தியதெல்லாம் போதும்; நிறுத்திக்கொள்ளுங்கள். காலம் மாறிவருகிறது.

- அருணா செல்வராஜ்.

சமூக வலைத்தளங்கள் மதப்போர் நடக்கும் களமாகிவிட்டது. கலாச்சாரக் காவலர்கள் பெருகிவிட்டனர். நாகரிகத்தில் எவ்வளவோ முன்னேறி இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இக்காலத்தில்தான் சாதி, மதப் பிரச்சினைகள் மேலோங்குகின்றன.

பொதுவெளியில், சமூக வலை தளங்களில் கருத்துச் சுதந்திரம் கட்டற்ற காட்டாற்று வெள்ளமாகக் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத் தடுப்பதற்கான அணை கட்டாயம் வேண்டும். அடுத்தவர் விவகாரங்களில் நுழைந்து பார்க்கும் போக்கு இன்னும் மாறவே இல்லை. கலாச்சாரம் என்பதன் பொருளை அறியாதவர்கள்தாம் அதன் காவலர்களாக உள்ளனர்.

ஒரு பெண் தான் விரும்பியதைச் செய்வதற்கான சுதந்திரத்தை யாராலும் தட்டிப் பறித்துவிட முடியாது. ஒருவருடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளில் நுழைந்து ஆணையிடும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. சுதா ரகுநாதனும் மாளவிகாவும் இதுபோன்ற விமர்சனங்களைப் புறந்தள்ளி ஒதுக்கிவிட வேண்டும்.

 - தேஜஸ், கோவை.

சமூகம், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றின் பெயரால் சாதி, மத, நிற வேறுபாடுகளைப் புகுத்தி, திருமண பந்தத்தில் பல்வேறு கற்பிதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இந்தக் கற்பிதங்களை உடைத்துத் திருமண பந்தத்தில் ஈடுபட நினைப்பவர்களின் தனிமனித உரிமைகளைப் பறிப்பதோடு மிகப்பெரும் குற்ற உணர்வை இந்தச் சமூகம் அவர்கள் மீது திணிக்கிறது. இதுபோன்ற அநாகரிகமான செயல்களுக்கு மதிப்பு தராமல் சாதி, மத வேறுபாடு பாராமல் மனப்பொருத்தத்தால் திருமணங்கள் நடக்க வேண்டும்.

- இ. கலைக்கோவன், தமிழாசிரியர், ஈரோடு.

பண்பாடு என்பது பண்பட்ட நிலை. சுதா ரகுநாதனின் மகளின் திருமணம் குறித்த பதிவுகள் பிற்போக்குவாதிகளின் நவீனத் தாக்குதல். திருமணம் என்கிற தனிநபரின் விருப்பத்தை வெளியாட்கள் நிர்ப்பந்திப்பது நாகரிகமல்ல. வெற்று வார்த்தை விமர்சனப் பதிவுகளைப் புறம்தள்ளிவிட்டுத் தனிமனித உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.

- முனைவர்.ம.தனப்பிரியா, கோவை.

கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் மகள், ஆப்பிரிக்க கிறிஸ்தவரை மணக்கவிருப்பது இங்குள்ள சனாதன, கலாச்சார, சாதிக் காவலர்களை உசுப்பிவிட்டது. மனித இனமும் குணங்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையவை. சாதியப் படிநிலையோ இரண்டாயிரம் ஆண்டுகளாக, அதுவும் இந்தியாவில் மட்டும் இருக்கிறது.

பாடகியாக இருப்பதாலேயே ரசிகர்களின் விருப்பத்தை ஒட்டித்தான் அவர் செயல்பட வேண்டும் என நினைப்பதும் நிர்ப்பந்திப்பதும் பண்பாடற்ற செயல். தனக்கு விருப்பமானவரைத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை 18 வயது நிறைவடைந்த எல்லாப் பெண்களுக்கும் உண்டு. அதைத் தடுக்கும் கலாச்சாரக் காவலருக்கு இங்கே இடமில்லை.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

திருமணம் என்பது இரு மனங்களின் இணைவாகக் கருதப்படும் சூழலில் மதம், சாதி போன்ற குறுக்கீடுகளை அறவே வெறுத்து ஒதுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இசைக்கு சாதி, மதம் கிடையாது. இசையை மதத்தைக்கொண்டு பிரித்துவிடாதீர்கள்.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

மதம் என்பது அவரவர் நம்பிக்கை; தனிமனித வாழ்க்கை என்பது அவரவர் தேர்வு என்பதைப் புரிந்துகொள்ள விடாமல் தடுக்கும் அரசியல் பின்புலங்கள் ஒழிந்தால் நாடும் மக்களும் ஓரளவு கடைத்தேறலாம். என் வாழ்க்கை என் முடிவு; உனக்குப் பிரச்சினை என்றால் தூரப்போ என்று சொல்லும் துணிவைப் பெண்கள் பெற வேண்டும்.

- குமரகிருஷ்ணன்.

நம் சமூகத்தில் ஆண்களின் விருப்பத்துக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாப்பிள்ளைக்குப் பிடித்துவிட்டால் போதும். பெண்ணின் கருத்துக்கு இங்கே மதிப்பில்லை. ஆனால், தற்போது நிலைமை மாறிவருகிறது. தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்குக் கண்டிப்பாக உண்டு. சாதி, மதங்களின் பெயரால் மற்றவர்கள் இதில் கருத்துச் செல்வது நாகரிகமற்ற செயல்.

- தேவகி கோவிந்தராஜன், செம்பரபாக்கம்.

பிரபலமானவர்கள் பெண்களாக இருந்து விட்டால் அவர்களை விமர்சிப்பதும் தாக்கிப் பேசுவதும் சிலருக்கு அல்வா சாப்பிடுவதுபோல். மற்ற விஷயங்களில் பிள்ளைகளின் விருப்பதை நிறைவேற்றும் பெற்றோர் திருமணம் விஷயத்தில் மட்டும் சாதி, மதம், சமூகம், அந்தஸ்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்? ஒரு சில இடங்களில் பெற்றோர் அனுமதித்தாலும் சமூகத்தின் அழுத்தம் அவர்களைத் திசைமாற்றிவிடுகிறது.

ஊர் என்ன பேசும் என்ற கேள்விக்குத்தான் அனைவரும் பயப்படுகிறார்கள். ஊர் என்ன பேசினாலும் நம் பிள்ளைகளுக்குப் பிடித்தவர்களையே அவர்களது வாழ்க்கைத் துணையாக மணம் முடிப்பதுதான் பெற்றோரின் கடமை. அந்த விஷயத்தில் பாடகி சுதா ரகுநாதன் பாராட்டுக்குரியவர்.

- பார்வதி கோவிந்தராஜன், திருத்தூரைப்பூண்டி.

நம் சமூகத்தில் சடங்கு, சம்பிரதாயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பெண்ணின் விருப்பத்துக்குக் கொடுப்பதில்லை. இங்கு பெண்ணை உயிருள்ள மனுஷியாகப் பார்க்காமல் போகப் பொருளாகத்தான் பார்க்கிறார்கள். அதனால்தான் பெண்களின் தன்னிச்சையான முடிவுகளைப் பழமைவாதிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

- எல்.துர்காதேவி, மயிலாடுதுறை.

சாதி மீறிய திருமணங்களுக்கு எதிராக வீசப்படும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் காலப்போக்கில் காணாமல் போய்விடும். அதனால் அவற்றைப் புறக்கணித்துவிட்டு நம் பாதையில் செல்வதே சிறந்தது.

- ஆர். ஜெயந்தி, மதுரை.

விரும்பியவரை மணந்துகொள்ளும் பெண்ணின் உரிமையில் அடுத்தவர் தலையிடுவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது; விரோதமானது. நம் நாட்டில் நிலவும் சாதிய கட்டமைப்பை உடைத்தெறிந்து ஆண், பெண் பேதமற்ற, சாதி, மதப் பாகுபாடற்ற சமத்துவச் சமுதாயத்தை அமைக்கவும் தனி மனித உரிமையை நிலைநாட்டவும் இதுபோன்ற சாதியை மீறிய திருமணங்கள் தேவை.

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

இரு மனங்கள் இணையும் திருமண வாழ்வில் மற்றவர்கள் தலையிடுவது வீண். பிறரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்துச் சொல்லவும் எதிர்க்கவும் விமர்சிக்கவும் யாருக்கும் உரிமை இல்லை. மதங்களும் சாதிகளும் கடந்து இரு மனங்கள் இணைவதை ஆதரிப்போம்; ஆனந்தமாக இருப்போம்.

- சோ.ராமு, திண்டுக்கல்.

பாடகி சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா தான் மணந்துகொள்கிறவரைத் தேர்வுசெய்யவும் அவரை மணம் முடிக்கவும் அவருக்கு முழு உரிமை உண்டு. இதை விமர்சிப்பது தேவையற்றது. காதலை அங்கீகரிக்கும் மனநிலையைப் பெற்றோரும் சமூகமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதுதான் பண்பாடு, நாகரிகம்.

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x