Published : 10 Jul 2019 11:52 am

Updated : 10 Jul 2019 11:52 am

 

Published : 10 Jul 2019 11:52 AM
Last Updated : 10 Jul 2019 11:52 AM

இந்தப் பாடம் இனிக்கும்: தமிழ்நாட்டில் காந்தியின் தடங்கள்

ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. இது சார்ந்து பாடத்தைத் தாண்டிய மேலும் பல சுவாரசியத் தகவல்களைப் பார்ப்போம்

‘தி இந்து’ நாளிதழை நடத்திய கஸ்தூரிரங்கனின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டை கதீட்ரல் சாலையில் இருந்தது. சேலத்தைச் சேர்ந்த ராஜாஜி சென்னையில் அந்த வீட்டில் வசித்துவந்தார். ஆங்கிலேய அரசு இயற்றிய கொடுங்கோன்மையான ‘ரௌலட் சட்ட’த்துக்கு எதிரான இயக்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அணிதிரட்ட காந்தி சென்னை வந்திருந்தார்.

அந்த வேளையில் ராஜாஜியின் வீட்டில் காந்தி தங்கியிருந்தபோதுதான் மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவரைச் சந்தித்தார். 1919 மார்ச் மாதம் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. காந்தி தங்கியிருந்த அந்த வீடு இன்றைக்குத் தனியார் சொகுசு விடுதியாக இருக்கிறது (முன்பு சோழா ஷெரட்டன், தற்போது மை பார்சூன்). அந்த இடத்தில் காந்தி தங்கிச் சென்றதன் வரலாற்றுச் சிறப்பை, அந்த விடுதியின் வெளியே வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்தச் சந்திப்பின் பொன்விழா ஆண்டான 1968-ல் திறக்கப்பட்ட அந்தக் கல்வெட்டை இப்போதும் பார்க்கலாம்.

மாறிய உடை

காந்தி-ராஜாஜி-பாரதியார் என மூன்று வரலாற்று ஆளுமைகள் சந்தித்த முக்கியமான வரலாற்றுச் சம்பவம் இது. இதேபோல, தமிழகத்துக்கு வந்து சென்ற பின்னரே காந்தி தன் ஆடை அணியும் பழக்கத்தை மாற்றிக்கொண்டார். தென்னாப்பிரிக் காவில் இருந்து திரும்பியிருந்த காந்தி வழக்கமாக குஜராத்தி உடை, அலுவல் வேலைக்கு கோட், சூட் என உடுத்திவந்தார்.

1921-ல் மதுரைக்கு ரயிலில் வந்தபோது சோழவந்தான் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் உழவரை ஜன்னல் வழியாக காந்தி பார்த்தார். நாட்டின் சாதாரண மக்கள் முழு உடை அணிய வசதியில்லாதபோது, தான் மட்டும் எப்படி முழு உடை அணியலாம் என்ற கேள்வி காந்திக்கு எழுந்தது.

அதன் காரணமாக இனி சாதாரண மக்களைப் போலவே உடை அணிவது என்ற முடிவை காந்தி எடுத்தார். மதுரையில் தங்கியிருந்த காலத்திலேயே இந்த முடிவை நடைமுறைப்படுத்தவும் செய்தார். அப்படி மாறிய அவருடைய உடை அணியும் வழக்கம் அவருடைய வாழ்நாளின் இறுதிவரை தொடர்ந்தது.

காந்தி மார்கெட்

திருச்சி நகரின் முக்கிய அடையாளம் ‘காந்தி மார்கெட்’. 1927-ல் இந்தச் சந்தை விரிவுபடுத்தப்பட்டபோது, திருச்சி நகராட்சித் தலைவராக இருந்தவர் ரத்னவேல். அவருடைய அழைப்பின் பேரில் இந்தச் சந்தையைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? காந்தியேதான்.

இந்தச் சந்தையின் முகப்புப் பகுதியில் உள்ள காந்தியின் சிலையைப் பிற்காலத்தில் ராஜாஜி திறந்து வைத்தார். திருச்சி மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கியச் சந்தைகள், திடல்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு எல்லாம் காந்தி சென்றிருக்கிறார்.

தலித் மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி 1934-ல் தமிழகத்தில் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது திண்டுக்கல் கோட்டைக்குளம் சாலையில் உள்ள திடலில் காந்தி பேசினார். பிற்காலத்தில் ‘காந்தி மைதானம்’ என அழைக்கப்படத் தொடங் கிய அந்த இடத்தில் நகராட்சி காய்கறிச் சந்தை உருவானது. காந்தி பேசிய மேடையும் அந்தக் காய்கறிச் சந்தையின் ஒரு பகுதியாகிவிட்டது.

அதே ஆண்டில் குன்னூர் நடுவட்டம் பகுதிக்கு காந்தி வந்து பேசிச் சென்றார். அந்தப் பகுதியிலேயே நடுவட்டம் பேருந்து நிலையம் தற்போது அமைந்துள்ளது. இப்படித் தமிழகத்தின் பல்வேறு ஊர்களும் காந்தி கால்தடம் பட்ட இடங்களும் அவருடைய நினைவை இன்றும் போற்றி வருகின்றன.

 

இந்த வாரம்

ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில், ‘நாடு, சமூகம், அரசு, நிர்வாகம்’ என்ற இயலின்கீழ் ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற உரைநடை உலகம் பகுதி.

 

மகாத்மா காந்தி பற்றி மகாகவி பாரதியார் எழுதிய தேசியப் பாடல்களில் ‘வாழ்க நீ எம்மான்’ என்று தொடங்கும் பாடல் ‘மகாத்மா காந்தி பஞ்சகம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

குற்றாலம் அருவியில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், அருவியில் குளிக்க அங்கு சென்றிருந்த காந்தியும் மறுத்துவிட்டார். இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் சிறார் எழுத்தாளர் ரேவதி (ஈ.எஸ். ஹரிஹரன்) ‘கொடி காட்ட வந்தவன்’ என்ற நாவலை எழுதியுள்ளார்.

இந்தப் பாடம் இனிக்கும் காந்திதமிழ்நாட்டில் காந்திகாந்தியின் தடங்கள்மாறிய உடைகாந்தி மார்கெட்

You May Like

More From This Category

janu

ஜானுவின் ஹலோ காதல்!

இணைப்பிதழ்கள்

More From this Author