

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் (Employees Provident Fund-EPF) சமூகப் பாதுகாப்பு உதவியாளர் பதவியில் 2,189 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி
கணினியில் ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் சொற்களை டேட்டா என்ட்ரி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கணினி நிறுவனத்தில் சான்றிதழ் பெற்றிருப்பின் விரும்பத்தக்க தகுதியாகக் கொள்ளப்படும்.
வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்த்தப்படும்.
தேர்வுமுறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு (Computer Data Entry Test) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுவோருக்குத் திறன் தேர்வு நடத்தப்படும்.
உரிய கல்வித் தகுதி, வயதுத் தகுதி, தொழில் நுட்பத் திறன் உடையவர்கள் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் இணைய தளத்தின் (www.epfindia.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த இணையதளத்தில் மேல்புறம் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘Miscellaneous' என்பதை கிளிக் செய்து அதன்பிறகு ‘Recruitment' என்பதை கிளிக் செய்தால் முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். தட்டச்சுப் பயிற்சிப் பட்டதாரிகள் மத்திய அரசுப் பணியில் சேர இது ஓர் அரிய வாய்ப்பு.