Published : 09 Jul 2019 11:17 AM
Last Updated : 09 Jul 2019 11:17 AM

சந்திரயான் 2 என்ன செய்யும்?

நிலவை ஆராய்வதற்கான சந்திராயன் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஜூலை 15 அன்று விண்ணில் ஏவ உள்ளது.

சந்திரயான்-1 நிலவைச் சுற்றி 100 கி.மீ. துருவ வட்டப் பாதையில் 11 அறிவியல் கருவிகளுடன் தனது பணியை ஒன்பது மாதங்களுக்கு மேற்கொண்டது. அந்த விண்கலம் எடுத்துச்சென்ற  35 கிலோ எடை கொண்ட ஒரு மோதும் கலன் (impactor), மூன்று அறிவியல் கருவிகளுடன் தாய்க்கலனிடமிருந்து பிரிந்து சென்று நிலவில் மோதி உடைந்து சிதறுவதுபோல வடிவமைக்கப்பட்டிருந்தது.

 அப்படிச் சிதறுவற்குமுன், நிலவின் மேற்பகுதியிலுள்ள மெல்லிய நுண் வளிமண்ட லத்தில் நீர் இருப்பதைக் கண்டு, அது தெரிவித்தது. சந்திரயான்-1 தாய்க்கலத்தின் மற்ற கருவிகளைக் கொண்டு நிலவில் நீர் இருப்பதைத் துல்லியமாகக் கண்டறிவதற்கு விதை போட்ட முதல் சமிக்ஞை இது.

நிலவில் நீர் இருப்பதைத் தாண்டி நிலவின் முப்பரிமாணப் படம், கனிம வரைபடம், துருவங்களில் பனிப்பாறை வடிவில் நீர் உள்ளது எனப் பல தகவல்கள் சந்திரயான்-1 மூலம் கிடைத்தன. இவ்வாறு நிலவின் தரையிலிருந்து 100 கி.மீ. தொலைவிலிருந்து சந்திரயான்-1 கண்டறிந்தவற்றை, நிலவின் தரையில் இறங்கி சந்திரயான்-2 உறுதிப்படுத்த உள்ளது.

சந்திரயான் 2-வில் என்ன புதுமை?

தொழில்நுட்பரீதியாக நிலவின் தரையில் மெதுவாக இறங்கித் தரையை ஆய்வு செய்வது ஒரு சவாலான செயல்தான். அதற்காக சந்திரயான்-2 மூன்று அங்கங்களைக் கொண்டிருக்கும்.

1. சந்திரயான்-1 போல் ஒரு தாய்க்கலன்

2. சந்திரயான்-1-ல்  இருந்த ஒரு மோதல் கலனுக்குப் பதிலாக மெதுவாக நிலவில் இறங்கும் கலன் – அதன் பெயர் விக்ரம்

3.  புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆறு சக்கர வண்டி – அதன் பெயர் பிரக்யான்

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ஏவுகலம் மூலம் ஜூலை 15 அன்று மேற்கண்ட மூன்று அங்கங்களையும் ஒன்றாகச் சுமந்துகொண்டு ஹரிகோட்டாவிலிருந்து பூமியைச் சுற்றி 200 கி.மீ.  X 36,000 கி.மீ. என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான்-2  அனுப்பப்படும்.

சந்திரயான்-2 தாய்க் கலனில் பொருத்தப்பட்டுள்ள திரவ இயந்திரத்தைப் பல முறை இயக்கி 36,000 கி.மீ. உயரத்திலிருந்து 3,85,000 கி.மீ.க்குத் தாய்க்கலத்தின் நிலை உயர்த்தப்படும். பின் நிலவைச் சுற்றிய 100 கி.மீ. துருவ வட்டப்பாதைக்கு அது கொண்டுசெல்லப்படும்.

செயல்படும் விதம்

தாய்க்கலத்திலிருந்து விக்ரம் பிரிந்து சென்று நிலவின் சுற்றுப்பாதையில் தனது பயணத்தைத் தொடரும். செப்டம்பர் 6 வாக்கில் சரியான ஒரு தருணத்தில் விக்ரம் பிரிந்து, உயர்நிலைத் தானியங்கி முறையில் தான் இறங்க வேண்டிய இடத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கும். இந்தப் பயணத்தில் விக்ரமில் பொருத்தப்பட்டுள்ள ஐந்து 800 நியூட்டன் விசையுள்ள திரவ இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். நிலவில் விக்ரம் மெதுவாக இறங்கி, தூசுப்படலம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்யும்.

அதன் பிறகு விக்ரமிலிருந்து பிரக்யான் வெளிவந்து, நிலவின் தரையில் பயணிக்கத் தொடங்கும். தன்னுள் பொருத்தப்பட்டுள்ள இரு அறிவியல் கருவிகள் மூலம் நிலவின் தரையில் உள்ள கனிம வளங்களை அது கண்டறியும்.  தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் இது சார்ந்த செய்திப் பரிமாற்றங்களை விக்ரமின் துணையுடன் பிரக்யான் மேற்கொள்ளும். இதுவே சந்திரயான் 2 செயல்படும் அடிப்படை விதம்.

இந்த வாரம் வெளியாக உள்ள ‘இந்து தமிழ் பொது அறிவு 2019’ நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரையின்  சுருக்கமான வடிவம். போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள், திருப்புதல் செய்துவருபவர்களுக்கு உதவும் இதுபோன்ற பல கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

 

- மயில்சாமி அண்ணாதுரை

கட்டுரையாளர்,

இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர்

தொடர்புக்கு: mylswamy.annadurai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x