Published : 08 Jul 2019 10:52 AM
Last Updated : 08 Jul 2019 10:52 AM

கியாவின் அடுத்த அறிமுகம் ‘கார்னிவல்’

இந்திய சந்தையில் இன்னும் ஒரு புதிய மாடல் காரை அறிமுகப்படுத்த தயாராகி இருக்கிறது கியா மோட்டார்ஸ். தென் கொரியாவைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டரஸ் இதுவரையில் இந்திய சந்தையில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதில்லை. வரும் ஆகஸ்ட் மாதம்தான் இந்திய சந்தைக்கென தயாரிக்கப்பட்ட ‘செல்டோஸ்’ மாடலை முதன் முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்நிலையில் அடுத்த வருடம் இன்னும் ஒரு புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தப் போகிறது.

கார்னிவல் என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. முதல் மாடலான செல்டோஸ் எஸ்யுவி மாடலாக வர இருக்க, கார்னிவல் எம்பிவி மாடலாக வர இருக்கிறது.

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்பான இனோவா க்ரெஸ்டா காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்கு போட்டியாகத்தான் கார்னிவலை அறிமுகப்படுத்துகிறது கியா.

11 இருக்கைகள்

இனோவா க்ரெஸ்டா உடன் ஒப்பிடுகையில் கார்னிவல் அதிக இட வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் நீளம் இனோவா க்ரெஸ்டாவை விட 380 மில்லி மீட்டர் அதிகம். அதேபோல் இதன் அகலம், இனோவா க்ரெஸ்டாவை விட 155 மில்லி மீட்டர் அதிகம். 7 முதல் 11 இருக்கைகள் வரை பொருத்தக்கூடிய அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

வெளிப்புறத் தோற்றம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்னிவலின் மொத்த நீளம் 5,115 மிமீ; அகலம் 1,985 மிமீ; உயரம் 1,740 மிமீ என உள்ளது. இதனுடைய வீல்பேஸ் மூன்று மீட்டருக்கும் அதிகம். இதனால் கார்னிவலின் அளவு அனைத்து விதத்திலும் இனோவா க்ரேஸ்டாவை விட பெரியதாக உள்ளது.

உட்புறம் மிக நவீன தொழில் நுட்பங்கள் பொருத்தப்பட்டு சந்தைக்கு வர இருக்கிறது. டச் ஸ்க்ரீன், திறக்கும் தன்மையிலான இரண்டு மேற்கூரைகள் என இதன் உள்வடிவமைப்பும் புதிய அனுபத்தை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

நான்கு சிலிண்டர் டர்போ சார்ஜ் டீசல் என்ஜினைக் இது கொண்டிருக்கும். இதன் என்ஜின் 3800 ஆர்பிஎம்-ல் 202 ஹெச்பி பவரை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 6 ஸ்பீட் கியர் பாக்ஸை கொண்டிருக்கும். ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் என இரண்டு ஆப்ஷன்களும் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் என்ஜின் இந்தியாவில் தயாரிக்கப்படாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் இதன் விலை ரூ.25 லட்சம் முதல் ரூ.26 லட்சமாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x