Published : 01 Jul 2019 11:18 AM
Last Updated : 01 Jul 2019 11:18 AM

பட்ஜெட் -19 : மிளிர்வாரா நிர்மலா?

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த 48 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கியுள்ளது. தொழில்துறையில் மந்த நிலை. ஆட்டோமொபைல் விற்பனையில் கடும் சரிவு போன்ற பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. இத்தகைய இக்கட்டான சூழலில் இம்மாதம் 5-ம் தேதி தாக்கல்செய்யப்படும் பட்ஜெட் நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான பட்ஜெட்டாகும்.

பெரும்பான்மை வெற்றியோடு இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்திருக்கும் மோடி அரசு நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்துவதற்காக அதிக முயற்சிகள் எடுத்து வருவதை தேர்தலுக்குப் பின் உணர முடிகிறது. மேலும் தமிழ் பேசும் பெண் ஒருவர் இந்தியாவின் முதல் முழுநேர நிதி அமைச்சராகப் பொறுப்பெற்றிருப்பதும் இந்த பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் கூடுதலாக்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பொருளாதார அறிஞர்கள், வல்லுநர்கள், தொழில் அமைப்புகளின் ஆலோசனைகளுக்கு செவி சாய்த்திருப்பது அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

பட்ஜெட் என்பது தனிநபர் முதல் தொழில் துறை வரை என அனைத்தையும் உள்ளடக்கியது. இதனால் அனைத்துத் தரப்பினரும் நமக்கு இந்த பட்ஜெட்டில் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.  முதல் தேர்தலை விட அடுத்த தேர்தலில் கூடுதல் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்ததால் துணிச்சலான சீர்திருத்தச் சட்டங்கள் குறிப்பாக பொருளாதாரம் சம்பந்தப்பட்ட சட்டங்களை இந்த அரசிடம் எதிர்பார்க்கலாம்.

விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு

இந்தியாவின் மக்கள்தொகையில்  54.6% பேர் ஈடுபட்டுள்ள விவசாயத் துறையை மேம்படுத்தி, புதிய தொழில்நுட்பம் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் அரசின் இன்றைய இன்றியமையாத கடமைகளில் ஒன்று.   நாட்டின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 17 சதவீதமாக உள்ளது. “ஆலைகள் செய்வோம்” என்று பாரதியார் கூறியது போல உற்பத்தி அதிகரிக்க வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் சிறு மற்றும் குறுந்தொழில் அமைப்புகளுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்திக் கொண்டு இருந்தாலும், தொழில் அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் தேவையான கடன் வசதி கிடைப்பதில் நடைமுறைச் சிரமங்கள் இருந்து வருவது மறுக்க முடியாதது. இந்தியாவில் பெரிய கம்பெனிகளுக்கு கொடுக்கப்படும் கடனில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வாராக்கடனாக கருதப்பட்டு  நஷ்டக் கணக்கில் எழுதப்பட்டு வருகிறது. 

இதனால் ஏற்படும் அச்சத்தால் வங்கி மேலாளர்கள் தகுதியான சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளுக்கு கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். இதை சரிசெய்வதன் மூலம் நாட்டின் உற்பத்தி பெருகுவதுடன் வேலைவாய்ப்பும்  அதிகரிக்கும். தற்போது வருமான வரிச் சட்டப் பிரிவு 80JJAA படி புதிதாகத் தொழிலில் அமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு சம்பளம் ரூ.25,000 வரை இருந்தால் நிறுவன உரிமையாளருக்கு  30% வரை வரிக் கழிவு கிடைக்கும். இந்த வரம்பை உயர்த்தினால் அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை நியமிக்க முன்வருவர். இதனால் புதிய வேலைவாய்ப்புகள் பெருகும்.

எஸ்டேட் வரி அல்லது பரம்பரை வரி

1955-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட எஸ்டேட் வரி மீண்டும் புதிய வடிவம் பெறலாம். குறிப்பிட்ட வரம்புக்கு மேல் சொத்து வைத்திருப்போர் மறைவுக்குப் பிறகு வாரிசுதாரர்கள் பெறும் சொத்துக்கு  வரி செலுத்த வேண்டும். தற்போது அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த வரி இருந்து வருகிறது. 

அமெரிக்காவில் 11 மில்லியன்  டாலர் வரம்புக்கு மேல்  இருக்கும் சொத்துக்கு 40%  வரி செலுத்த வேண்டும். ஜப்பானில் 55% தென்கொரியாவில்  40% ஆகும். வருமான வரி செலுத்திய தனிநபர் தனது ஆயுளுக்குப் பின், தான் ஆண்டு அனுபவித்ததுபோக மீதமுள்ள சொத்துகளை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கும் போது அந்த சொத்தின் மீது செலுத்தப்படும் வரி.  இந்தியாவில் இது அறிமுகப்படுத்தப் படும்போது  சொத்து வரம்பு மற்றும் வரி விகிதம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த வரி அதிக சொத்து உள்ளவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.  மேலும் அறக்கட்டளை,  ஒன்றுபட்ட இந்திய குடும்பங்கள் (HUF) போன்றவற்றுக்கு  எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எஸ்டேட் வரி அறிமுகப்படுத்தும் பட்சத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தாங்கள் வெளிநாட்டில் சம்பாதித்த சொத்தை இந்தியாவிற்கு கொண்டு வராமல் போக வாய்ப்பு உண்டு.

கருப்புப் பண ஒழிப்பு

மோடி ஆட்சியில் இருந்து வரும் முக்கிய முயற்சிகளில் கருப்புப் பண ஒழிப்பு, எளிதாக வியாபாரம் செய்தல், திறன் மேம்படுத்தல், ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்தல் போன்றவை ஆகும். நிதி அறிக்கையில் இது குறித்து மேலும் பல தகவல்கள், நடைமுறைகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.  வருமானவரித் துறையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த நான்கு ஆண்டுகளில் மாற்றங்களும் செயல்பாடுகளும் நடந்துள்ளன. 

அதேபோல கருப்புப் பண ஒழிப்புக்கான சீர்திருத்த சட்டங்களும் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களும் பெறப்பட்டுள்ளன. இவை அரசின் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

ரொக்கப்பண பரிவர்த்தனை வரி

வங்கிகள் மூலமும் டிஜிட்டல் முறையிலும் பணப்பரிவர்த்தனை செய்ய ஏதுவாகும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. வங்கிகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டுக்கு ரொக்கமாக டெபாசிட் செய்பவர்கள உபரி  வரி செலுத்த நேரிடலாம். உதாரணமாக ஆண்டுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்பவர்கள் 4% முதல் 6% வரை உபரியாக  வரி செலுத்த நேரிடலாம். இதனால் கூடுதல் விரயமாக ரூபாய் 50,000 செலுத்துவதைவிட டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யலாம் என்கிற முறைக்கு மக்கள் மாற இந்த முயற்சி என்று சொல்லலாம்.

ரியல் எஸ்டேட்

இந்தியாவில் கருப்புப் பணத்தை முதலீடு செய்ய ஏதுவாக இருப்பதில் முக்கிய இடம்பிடிப்பது ரியல் எஸ்டேட் முதலீடுகள். அதிலும் குறிப்பாக விவசாய பூமி, காலி மனைகள் உள்ளிட்டவைதான்.  பெரும்பான்மையான இடங்களில் மார்க்கெட் மதிப்பை விட வழிகாட்டுதல் மதிப்பு குறைந்த அளவில் உள்ளதால் காலி மனைகளில் கருப்புப் பணம் அதிக அளவு முதலீடு செய்யப்

பட்டு வருவது காலம் காலமாக இருந்து வருகிறது. காலியாக உள்ள இடத்தின் மீது வரி விதிக்கப்படும் பட்சத்தில்  தேவை இல்லாத இடங்களை மக்கள் முன்வந்து விற்பார்கள் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது. இது 5% முதல் 9% இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன்மூலம் ரியல் எஸ்டேட் விலைகள் வரும் ஆண்டுகளில் குறையவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மோடி அரசு 2015-ம் ஆண்டு சொத்து வரி(wealth tax)  ரத்து செய்து அதற்கு பதிலாக  அதிக வருமானம் ஈட்டுவோருக்கு உபரி வரி விதித்தது குறிப்பிடத்தக்கது

ஜிஎஸ்டி

இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரம், பல்வேறு வியாபார முறைகள், பல்வேறு மாநிலங்கள் உள்ள நாட்டில் அதிக அளவு சிரமங்கள் இல்லாமல் ஜிஎஸ்டியை  நடைமுறைப்படுத்துவது சாத்தியமாக முக்கிய காரணம் ஜிஎஸ்டி கவுன்சில் அடிக்கடி கூட்டங்கள் நடத்தி விவாதித்து, அதன் மூலம் நடைமுறை பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தீர்வுகளை எடுத்துவருவதுதான்.

தற்போது ஜிஎஸ்டி நடைமுறைக்குள் இல்லாத பொருட்களான பெட்ரோலிய கச்சா, மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்) மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

வருமான வரி வரம்பில் அல்லது வரி விகிதத்தில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வாக்களித்த நடுத்தர வர்க்க மக்களையும்  சம்பளதாரர்களையும் குளிர்விக்கும் வகையில் சில வரி சலுகைகளும் சேமிப்புக்கான திட்டங்களும் இருக்கலாம். ஏற்கெனவே வணிக அமைச்சராகவும் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டவர் நிர்மலா சீதாராமன். தற்போது கொடுக்கப்பட்டுள்ள  சவால் மிகுந்த நிதித் துறையிலும்   மிளிர்வாரா  என்பது விரைவில் தெரியும்.

ஆடிட்டர் ஜி கார்த்திகேயன்

karthikeyan.auditor@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x