Last Updated : 29 Jun, 2019 01:01 PM

 

Published : 29 Jun 2019 01:01 PM
Last Updated : 29 Jun 2019 01:01 PM

காயமே இது மெய்யடா 39: அச்சம் தவிர் பெண்ணே

பெண்மையின் அடையாளம் கர்ப்பப் பையோ குழந்தை பெறுவதோ அல்ல. தனது ஆளுமையை நிரூபிக்கப் பல்வேறு துறைகள் இன்று பெண்ணுக்காகத் திறந்துவிடப்பட்டுவிட்டன. விண்வெளிக்குச் செல்கிறார்கள்; ஆட்டோ ஓட்டுகிறார்கள், இப்படி இன்று எத்தனையோ வகைகளில் பெண்கள் ஆண்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்.

படுக்கையில் சிறுநீர்

பெண் நீர்மூலக ஆதிக்கம் உடையவள் என்பதைப் பார்த்தோம். நீர் மூலகம் பலவீனமுற்றிருந்தால் பய உணர்வு அதிகமாகத் தலைதூக்கும். பெண்கள் சிலருக்கு 22 – 24 வயதுவரை கூடப் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நீடிக்கிறது. இதை உடல்ரீதியான குறைபாடாக மட்டும் பார்க்க முடியாது; பயத்தின் வெளிப்பாடாகவும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல்ரீதியான சிகிச்சையுடன் மனநல சிகிச்சையும் தேவைப்படும். அதே அளவுக்குப் பெண்ணின் பெற்றோருக்கும் மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டி உள்ளது. அத்தனை வயதுக்குப் பின்னரும் பெண், படுக்கையை நனைப்பது சோம்பலாலோ கட்டுப்பாடு இன்மையாலோ இருக்காது என்ற அடிப்படை உண்மையை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றோருக்குத் தேவை.

தோல்வியால் மடியும் பெண்கள்

பல பெற்றோரிடத்தில் தம் பிள்ளைகளை எதிர்நிலையில் வைத்துப் பார்க்கும் போக்கு இருப்பது போலவே, வேறுசிலரிடம் இதற்கு நேர் எதிரான தன்மையும் உண்டு. ஆண் – பெண் இருபால் பிள்ளைகளுக்கும் கல்லூரிப் பருவம் வரைக்கும்கூடச் சாப்பாடு ஊட்டிவிடுவதைப் பாசத்தின் அடையாளமாகவும் பெருமையாகவும் கருதுகிறவர்கள் உண்டு.

இந்த இரண்டுமே அவர்களது ஆளுமைப்பண்பு வளர்ச்சிக்கு எதிரானது என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். பள்ளித் தேர்வில் தோல்வி அடையும்போது, விரும்பிய மதிப்பெண் பெறாதபோது, விரும்பிய மேற்படிப்புக்கு இடம் கிடைக்காதபோது தற்கொலை செய்து கொள்பவர்களில்  அநேகர் பெண் பிள்ளைகளே.

உடலுழைப்பு சாராத வகுப்பினருக்குத் தன்னம்பிக்கை குறைவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும் எவ்வளவு படித்தாலும் ஆணைச் சார்ந்திருப்பது மட்டுமே பெண்ணின் வாழ்க்கை என்ற கருத்தோட்டம் நமது பெண்களை மேலும் பலவீனப்படுத்திவிடுகிறது. இதிலிருந்துதான் உயிரை மாய்க்கும் எண்ணம் உருவாகிறது.வளர்ந்த நாடுகளில் இருப்பதைப் போன்ற சமூகப் பாதுகாப்பு உத்தரவாதமும் பெரிய பொருட் செலவு தேவைப்படாத கல்விக்கு அரசு ஆதரவும் இருக்குமானால் நமது பிள்ளைகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற உண்மை விளங்கும்.

சமூகப் பாதுகாப்பு அவசியம்

மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்காசியச் சமூக நல அரசுகள் உள்ள நாடுகளில் பெண்கள் எந்த வயதினரும் பின்னிரவில் சாலைகளில் சென்றுவர முடியும். பாலியல் சார்ந்த குற்றங்கள் அறவே இல்லை என்று கூறலாம்.

அத்தகைய நாடுகளில் பதின்ம வயதுப் பெண் பிள்ளைகள் காலையில் பள்ளிக்குப் போய்விட்டு மாலைகளில் வேலைக்குச் செல்கின்றனர். நமது நாட்டைக் காட்டிலும் ஒற்றைப் பெற்றோருடன் வசிக்கும் பிள்ளைகள் பெரும் மன நெருக்கடியைச் சந்தித்தாலும் தற்கொலை எண்ணம் அவர்களிடையே தலைதூக்குவதில்லை.

பெண்கள் வேலைக்குச் செல்லும் வீடுகளில் இளம் கணவன்மார்கள் வீடு சுத்தம் செய்வது முதல் சமையல்வரை வீட்டு வேலைகள் அனைத்திலும் பொறுப்பெடுத்துக் கொள்கின்றனர். எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும் வீட்டு வேலைகளுக்கு ஆள் வைத்துக் கொள்பவர்கள் குறைவு.

அவர்களுக்கும் கணிசமான சம்பளம் பெறும் வேலைக்குப் போக வேண்டும்; வீடு வாங்க வேண்டும். அதற்குள் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டால் எதிர்கால வாழ்க்கைத் திட்டத்துக்கு அது இடையூறாகிவிடும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், அங்கே பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போடுவதோ பிள்ளையே பெற்றுக்கொள்ளாததோ சமூகத்தால் குடையப்படும் கேள்வியாக மாறுவதில்லை.

சீர்குலையும் உதிரப்போக்கு

சொல்லப்போனால் 90 சதவீதக் காதல் திருமணங்கள் நடக்கும் அந்நாடுகளில் காதல் இணையர் நிச்சயம் மட்டும் செய்து கொள்கின்றனர். இரண்டு, மூன்று ஆண்டுகள் வேலைசெய்து வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் உத்தரவாதப்படுத்திக்கொண்ட பின்னர் திருமணம் செய்து கொள்கின்றனர்.

நமது நாட்டின் வேளாண்மை சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து ஏற்பட்ட தாவலுக்கும் வாழ்க்கை உத்தரவாதமின்மைக்கும் பதின்ம வயதுப் பெண்களின் மாதாந்திர உதிரப்போக்கின் சீர்குலைவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதற்குச் சற்றும் குறைவில்லாமல் முக்கியப் பங்கு வகிக்கிறது நமது சமூகத்தின் இறுக்கமான சிந்தனை முறை.

இது அப்படியே வளர்ந்து வரும் பிள்ளைப் பேறின்மைக்கும் முதன்மைக் காரணியாக இருக்கிறது. பாதுகாப்பு உணர்வற்ற பெண்ணுடலில் ஏற்படும்  இறுக்க உணர்வுக்கும் மாதாந்திர உதிரப் போக்குக்கும் தொடர்பு இருப்பது போலவே திருமணத்துக்கு முன்னும் பின்னும் பெண்ணின் மனதில் தோன்றும் உணர்வுகளுக்கும் கருவுறுதலுக்குத் தேவையான பிட்யூட்ரி போன்ற சுரப்புகளின் தடுமாற்றத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அதே நேரத்தில் மாதாந்திரப் போக்கில் ஏற்படும் சீரின்மையோ கர்ப்பப்பை நீர்க்கட்டிகளோ கருவுறுதலைத் தடுக்குமோ என்ற அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

கருவுறுதலுக்கான முதன்மை உடலியல் - உளவியல் காரணிகள் என்ன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்...)

கட்டுரையாளர்,

உடல்நல எழுத்தாளர்

தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x