Last Updated : 30 Jun, 2019 11:35 AM

 

Published : 30 Jun 2019 11:35 AM
Last Updated : 30 Jun 2019 11:35 AM

இனி எல்லாம் நலமே 12: பருவ வயதில் மட்டும்தான் பருக்கள் தோன்றுமா?

நான் சொல்லப்போவது உங்களுக்கு அதீதமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், இது உண்மை. கொஞ்சம் பருமனான பெண் என்னிடம் அழைத்துவரப்பட்டார். மணிக்கட்டில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். முதலில் கவுன்சலரிடம் அழைத்துச் சென்றிருக்கின்றனர். பருமனாக இருப்பது, பதற்றம், பருக்கள் போன்றவையே பிரச்சினைக்குக் காரணம் எனத் தெரிய வந்தது. மாதவிடாய்ச் சுழற்சி சீரற்று இருந்தது. பரிசோதனைகள் செய்து பார்த்ததில் ஹார்மோன்கள் சுரப்பதில் பிரச்சினை இருப்பது தெரிந்தது. அவருடன் விரிவாகப் பேசியபோது வெளிப்படையாகப் பேசினார்.

பருமனாக இருப்பதுடன் முகம் முழுவதும் பருக்களும் அதனால் வந்த கரும்புள்ளிகளும் அவரைக் கஷ்டப்படுத்திவிட்டதாகச் சொன்னார். முகம் முழுவதும் பருக்களுடன் அசிங்கமாக இருப்பதாக உடன் படிப்பவர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள். இதனால் வந்த மன அழுத்தத்தால் அதிகப்படியாகச் சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்; பருமனாகிவிட்டார். பருக்களோடு பருமன் குறித்த கேலியும் சேர்ந்துகொள்ள மன அழுத்தம் மேலும் அதிகமாகிவிட்டது. ஹார்மோன் குளறு படிகளும் ஏற்பட்டன.

மூன்று முனைகளில் இருந்து அந்தப் பெண்ணின் பிரச்சினையைக் கையாள வேண்டியதாயிற்று. மன அழுத்தத்தைச் சரிசெய்ய கவுன்சலர், இனப்பெருக்க உடற்கூறு/ பொதுநல உடற்கூறு இரண்டையும் பராமரிக்க மகளிர் நல மருத்துவர், பருக்கள், அதனால் எழுந்த தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கையாளத் தோல் மருத்துவர் என அனைவரும் சேர்ந்து சிகிச்சை அளித்தோம். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என உடல் எடையைக் குறைப்பதற்கான திட்டம் ஒரு பக்கம், பருக்கள் வருவதைக் குறைத்துக் காயங்கள் தெரியாத வண்ணம் சிகிச்சை மறுபுறம் என மூன்று மாதம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று மாதத்துக்குப் பிறகு பார்த்தால், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். இதற்காகச் சிலர் பாராட்டியதும் அவருக்குள் தன்னம்பிக்கையும் வந்துவிட்டது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான ஆணிவேரைக் கண்டுபிடிக்க வேண்டும். பருக்கள் வருவது இவ்வளவு பெரிய விஷயமா என்று சிலருக்குத் தோன்றலாம். பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்குதான் அந்தப் பிரச்சினையின் ஆழம் புரியும். குறிப்பாக வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களுக்கு இது தன்னம்பிக்கையைக் குறைக்கிறது. நட்பு, காதல் போன்ற உறவுகளில் பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி விடுகிறது.

பருக்கள் என்றால் என்ன?

ஆண்ட்ரோஜன் ஹார்மோனின் தூண்டு தலால், நம் தோலின் இரண்டாம் அடுக்கில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளிலிருந்து சீபம் என்ற எண்ணெய் சுரக்கிறது. இந்த சீபம் எண்ணெய்ச் சுரப்பால்தான் நம் தோலும் முடியும் பளபளப்பாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கின்றன.

ஆனால், வளரிளம் பருவத்தில் சீபம் சுரப்பு அதிகமாக இருக்கிறது. இதனால், முகம் அதிகப்படியான எண்ணெய்ப் பசையுடன் இருக்கிறது. காற்றில் உள்ள தூசும் அழுக்கும் எண்ணெய்ப் பசையுடன் சேரும்போது எண்ணெய்ப் பசை வெளிவரும் சுரப்பிகளின் வாயை அடைத்துவிடும். இப்படி மூடிவிடுவதால் உள்ளே சுரக்கும் சீபம் வெளிவர முடியாமல் உள்ளேயே தங்கிவிடும். இப்படி சீபம் சேர சேரத் தோலில் வீக்கம் உண்டாகும். இந்த வீக்கத்தைத்தான் பரு என்கிறோம்.

பருக்களில் நான்கு வகைகள் உள்ளன. வெள்ளைத் தலைப் பருக்கள், கறுப்புத் தலைப் பருக்கள், முகப்பருக்கள், நீர்க் கட்டிகள் அல்லது முடிச்சுகள். வீக்கம் மூடியிருந்து தோலின் மேல் பக்கம் வீங்கினால் வெள்ளைத் தலையுடைய பருக்கள். திறந்து இருந்து தலைப் பகுதி கறுப்படைந்து இருந்தால் அவை கறுப்புத் தலை பருக்கள். சில நேரம் துளைவழியாக சீபம் நுண்கிருமிகளும் இறந்த செல்களும் தோலின் அடிப்பகுதிக்குச் சென்றால் வருபவை முகப்பருக்கள். மூடிய துளைகள் தோலில் ஆழமாகச் சென்றால் கட்டிகள் முகப்பருக்களைவிடப் பெரிதாகும்; வலிக்கும். இவையே முடிச்சுகள். பருக்கள், முகம், நெற்றி, மார்பு, தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் தோன்றலாம்.

பருக்கள் ஏன் வருகின்றன?

வளரிளம் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோனின் சுரப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிகமாகும். இது சீபம் உற்பத்தியை அதிகப்படுத்துவதால் பருக்கள் தோன்றலாம். வளரிளம் பருவத்தினருக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினருக்கும் மன அழுத்தம் அதிகமாகும்போதும் பருக்கள் தோன்றலாம். குறைந்த நேரம் தூங்குவது, எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளையும் பதப்படுத்தப்பட்ட உணவையும் அதிகமாகச் சாப்பிடுவது போன்றவையும் பருக்கள் தோன்ற காரணம்.

விளம்பரங்களில் வரும் தோல் பராமரிப்புப் பொருட்களை மருத்துவரை ஆலோசிக்காமல் பயன்படுத்துவதாலும் பருக்கள் தோன்றலாம். சுகாதாரமற்ற பழக்கவழக்கங்கள், அழுக்கான ஆடைகள், தலையணைகள், போர்வை களைப்  பயன்படுத்துவது, மாசுபடிந்த சூழலில் இருந்துவிட்டு முகத்தைக் கழுவாமல் விடுவது, போனை வெகுநேரம் தோலில் படும்படி வைத்துப் பேசுவது, வெப்பமான அல்லது குளிர்ச்சியான தட்பவெப்பநிலை போன்றவற்றாலும் பருக்கள் வரக்கூடும்.

கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்து வதாலும் கர்ப்ப காலத்திலும் சிலருக்குப் பருக்கள் வரலாம். எந்த வகைத் தோல் உடையவர்களுக்கும் பருக்கள் வரலாம் என்றாலும், எண்ணெய்ப் பசை தோல் உடையவர்களை இது அதிகம் பாதிக்கிறது.

பருக்கள் பிரச்சினையைச் சரிசெய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட தோல் தன்மை உடையவர்களுக்குப் பருக்கள் வர சாத்தியம் அதிகம் என்பதால் பருக்கள் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்ளவேண்டும்.

பருக்கள் வராமல் தடுப்பது எப்படி?

முதலில் உணவு வகைகளில் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகை களைத் தவிர்க்க வேண்டும். புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புச் சத்து நிறைந்த வற்றைச் சாப்பிடலாம். உதாரணமாகக் கொட்டைகளில் இருப்பது ஆரோக்கியமான கொழுப்புச் சத்து.

துரித உணவை அதிகம் சாப்பிடக் கூடாது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது தோலை ஈரப்பசையுடன் வைத்திருக்கும். கறுப்புத் தலைப் பருக்கள் தோன்றாது. ஹார்மோன் கோளாறு இருந்தால் சரி செய்து கொள்ளவேண்டும். மன அழுத்தத்திலிருந்து வெளிவர முயல வேண்டும். நாம் சுகாதாரமான பழக்கவழக்கங்களோடு இருப்பதோடு நம் சுற்றுப்புறமும் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நல்ல தோல் பராமரிப்புப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். உணவில் வைட்டமின் நிறைந்த இணை உணவை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும். எப்போதும் சோப்புப் போட்டு முகத்தைப் பரபரவென்று தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. மென்மையாகக் கழுவினாலே போதும். பருக்கள் அதிகமாக வந்துவிட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் தோலின் மேல் தடவ வேண்டிய கிரீமைப் பயன்படுத்தலாம்.

மிதமான மேக்கப் நல்லது. படுக்கப் போகும் முன் கண்டிப்பாக மேக்கப்பைக் கழுவ வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும்போது வெளியே போவதைத் தவிர்ப்பது நல்லது. போக நேர்ந்தாலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

(நலம் நாடுவோம்)

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.

தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x