Last Updated : 30 Jun, 2019 11:32 AM

 

Published : 30 Jun 2019 11:32 AM
Last Updated : 30 Jun 2019 11:32 AM

பெண்கள் 360: மரணம்தான் துணையா?

இலக்கியத்தின் ஆசிரியர்

இலக்கியவாதிகளின் மனத்துக்குள் படைப்புக்கான விதையை மட்டுமல்லாமல், வாழ்வுக்கான தடத்தையும் விதைப்பவர்களாக அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட ஆசிரியர்கள் காலங்காலமாக உள்ளனர். தியோடோரா சதர்லாண்ட் அத்தகைய ஆசிரியர்களுள் ஒருவர். இன்று கானா நாட்டில் நிறைந்திருக்கும் உன்னதமான படைப்புகளுக்கும் மறுமலர்ச்சி நாடகங்களுக்கும் அவர்தான் உந்துதல். ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் புகழப்பட்ட முதல் ஆப்பிரிக்கப் பெண் எழுத்தாளர் அவர். 1950-க்கும் 1990-க்கும் இடைப்பட்ட காலத்தில் இலக்கிய உலகில் புரட்சியையும் நாடக உலகில் மலர்ச்சியையும் தனது படைப்புகள் மூலம் ஏற்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் எண்ணற்ற நாடகங்களை அவர் அரங்கேற்றினார். ஃபோரிவா (1962),  ‘எதுஃபா’ (1967), ‘தி மேரேஜ் ஆஃப் அனன்சேவா’ (1975) போன்ற அவரது நாடகங்கள் இன்றும் உன்னதப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. கானாவில் குழந்தைகளின் பள்ளிப் பாடத்திட்டத்துக்கு அவரது படைப்புகள் செழிப்பையும் செறிவையும் அளித்தன. அரசியலிலும் ஆட்சியிலும் ஆப்பிரிக்கப் பெண்கள் பங்கேற்பது அரிதாகவே இருந்த காலத்தில் அவற்றிலும்  அவர் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கினார். குழந்தைகளின் உரிமைக்காக ஐ.நா. சபையில் அவர் மேற்கொண்ட எண்ணற்ற முன்னெடுப்புகளின் நன்மைகளை இன்றைய தலைமுறைக் குழந்தைகளும் அனுபவிக்கின்றனர். கானா நாட்டின் குழந்தைகளுக்கு இன்று கிடைக்கும் தரமான கல்விக்கு, குழந்தைகளின் உரிமைகளுக்கான இவரது தன்னலமற்ற செயலே காரணம்.  அவரது 94-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஜூன் 27 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

மறக்கடிக்கப்பட்ட இமாலய வெற்றி

பெண்கள் உலகக் கோப்பை  ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனையும் கேப்டனுமான ராணி ரம்பால் முதல் கோலைப் பதிவு செய்தார். அதற்குப் பதிலாக ஜப்பான் 11-வது நிமிடத்தில் கோல் அடித்தது. 45-வது,  60-வது நிமிடங்களில் குர்ஜித் கவுர் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. உலக ஹாக்கித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதுடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் கலந்துகொள்ளவும் இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி தேர்வாகி உள்ளது. ஆனால், இந்தியப் பெண்களின் இந்த இமாலய வெற்றி உலக கிரிக்கெட் கோப்பைக் கொண்டாட்டத்தால் மறக்கடிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டைப் போன்று மற்ற எந்த விளையாட்டுக்கும் நாம் ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற ஆதங்கம் மக்களிடையே எழுந்திருக்கிறது.

மரணம்தான் துணையா?

தனது குடும்பத்துடன் மெக்சிகோ அகதிகள் முகாமில் வசித்த எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்த மார்டினெஸ், அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்க இரண்டு மாதங்களுக்கு மேலாகக் காத்திருந்தார்.  ஆனால், விண்ணப்பம் பெறுவதற்குக்கூடத் தூதரகத்தில் அனுமதி கிடைக்கவில்லை. காத்திருந்து ஏமாந்துபோன அவர் ரியோ கிராண்டே (Rio Grande) ஆற்றை நீந்திக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இறங்கினார். முதலில்  தன்னுடைய இரண்டு வயது மகளை ஆற்றின் மறுபக்கம் கொண்டு சேர்த்தார். பின்னர் தன்னுடைய 21 வயது மனைவியை அழைத்து வர ஆற்றில் இறங்கிய நேரத்தில், குழந்தை பயந்து தண்ணீரில் குதித்திருக்கிறாள். குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோது, ஆற்றின் வெள்ளத்தால் அவரும் மகளும் மனைவியின் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பின்னர் இருவரது சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. எப்படியாவது அமெரிக்காவுக்குச் சென்று புது வாழ்வைத் தொடங்கலாம் என்ற கனவுடன் சொந்த நாட்டை விட்டு வந்த தந்தையும் மகளும் பரிதாபமாகப் பலியாகியிருப்பது உலகை உலுக்கியுள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குநர்

நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் என ஆந்திர திரைப்படத் துறையில் ஜொலித்த திரை ஆளுமை விஜய நிர்மலா. தெலுங்கில் 44 படங்களை இயக்கியுள்ளார். அதிகப் படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்று,  2002-ல் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார். தெலுங்குத் திரைப்படத் துறையில் பங்களித்தமைக்காக ‘ரகுபதி வெங்கையா’ விருதை 2008-ல் பெற்றார். நடிகர் சிவாஜி கணேசனை இயக்கிய இரண்டு பெண் இயக்குநர்களில் இவரும் ஒருவர். ‘மச்ச ரேகை’ எனும் தமிழ்ப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘எங்க வீட்டுப் பெண்’, ‘பணமா பாசமா’, ‘என் அண்ணன்’, ‘ஞான ஒளி’ போன்ற பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். 73 வயதான விஜய நிர்மலா, உடல்நலக் குறைவால் கடந்த வியாழன் அன்று காலமானார்.

ஏற்றத்தாழ்வில் ஏறுமுகம்

பாலின ஏற்றத்தாழ்வு மிகுந்த நாடுகளின்  பட்டியலில் இந்தியாவுக்கு 108-வது இடத்தை உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 144 நாடுகள் இருக்கின்றன.  அதேபோல் 2017-18 ஆண்டுகளுக்கான ‘பெண்கள், அமைதி, பாதுகாப்புக் குறியீட்டுப் பட்டிய’லின் 153 நாடுகளில் இந்தியா 131-வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆய்வு, பெண்களின் சமூகத்துடனான இணைப்பு, நீதி, பாதுகாப்பு உள்ளிட்ட 11 அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நடத்தப்பட்டது. இந்திய மக்கள்தொகையில் 49 சதவீதம் உள்ள பெண்களின் நாடாளுமன்றப் பங்கேற்பு வெறும் 12 சதவீதம்தான். அதேபோல் பெண் தொழிலாளிகளின் சதவீதம் 2006-ம் ஆண்டு 37 சதவீதமாக இருந்து, 2017-ல் 27 சதவீதமாகச் சரிந்துள்ளது என்கிறது உலக வங்கியின் அறிக்கை ஒன்று. இதன் அடிப்படையில் 181 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா வகிப்பது 163-வது இடம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x