Published : 15 Aug 2017 12:10 pm

Updated : 15 Aug 2017 12:10 pm

 

Published : 15 Aug 2017 12:10 PM
Last Updated : 15 Aug 2017 12:10 PM

புரிந்துகொண்டு மதிப்பளிக்கும் வேலை வேண்டும்!

மா

ற்றுப் பாலினத்தவர்களில் திருநங்கைகளைப் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் அதிகரித்துவருகின்றன. குடும்பம், சமூகம் முதற்கொண்டு அத்தனை புறக்கணிப்புகளையும் கடந்துவந்தாலும், பொருளாதாரரீதியாகத் திருநங்கைகளின் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பாலின மாற்றத்தால் பெரும்பாலானவர்களின் கல்வி தடைபடுகிறது. அப்படியே படித்துமுடித்து வந்தாலும் சான்றிதழ்களில் இருக்கும் பெயரையும் தற்போதைய அவர்களின் திருநங்கைத் தோற்றத்தையும் காரணம் காட்டித் தகுதி இருந்தாலும் அவர்களுக்கான பணிகள் மறுக்கப்படுகின்றன.

உறவுப் பாலமாகும் இணையதளம்

போதிய கல்வியறிவு இல்லாததாலும் படித்தவர்களுக்கும் அதற்கேற்ற வேலை கிடைக்காததாலும் வாழ்வாதாரத்துக்கு வேறு வழி இல்லாமல் பிச்சையெடுத்தல் அல்லது பாலியல் தொழில் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குப் பெரும்பாலான திருநங்கைகள் தள்ளப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் படித்த திருநங்கைகளுக்கும் அவர்களுக்கான பணிகளைத் தருவதற்குத் தயாராக இருக்கும் நிறுவனங்களுக்கும் இடையே உறவுப் பாலம் அமைத்துவருகிறது ‘பெரிஃபெரி’இணையதளம்.

ajitha tg அஜிதா

பெங்களூரில் உள்ள பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர் நீலம். சமூக நலனுக்காக எந்த மாதிரியான திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்று ஊழியர்களிடம் ஆலோசனை கேட்டது அந்நிறுவனம்.

மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில், திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தலாமே என்னும் யோசனையை அப்போது நீலம் வழங்கியிருக்கிறார்.

ஆனால், சில காரணங்களுக்காக அதை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. பிறகு, அந்தப் பணியிலிருந்து விலகிய நீலத்துக்கு, நிறுவனத்துக்குக் கொடுத்த யோசனையைத் தானே செயல்படுத்தினால் என்ன என்று தோன்றியது. உடனே அந்த எண்ணத்தைச் செயல்படுத்தவும் தொடங்கினார்.

“மாற்றுப் பாலினத்தவருக்கு வேலை தர முன்வரும் நிறுவனங்களின் அறிவிப்புகளை ஃபேஸ்புக், ட்விட்டரில் பின்தொடர்கிறோம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்புகளை மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கிறோம். அங்குள்ள பணி வாய்ப்புகள் மாற்றுப் பாலினத்தவருக்குக் கிடைக்க முதலில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாற்றுப் பாலினத்தவர் குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்த பயிலரங்கம் நடத்துவோம்.

இந்தப் பயிற்சி முகாம்களை நடத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எங்களுக்குக் கட்டணம் அளிக்கும். இதைக் கொண்டுதான் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு சேவையை இலவசமாக அளிக்கிறோம்” என்றார் பெரிஃபெரியின் நிறுவனர் நீலம்.

அவர்களுக்கும் தேவை பொருளாதாரச் சுதந்திரம்!

பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் திருநங்கை என்ற காரணத்தாலேயே தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டிருக்கிறார் அஜிதா. என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருக்கும்போதுதான், பெரிஃபெரி இணையதளம் பற்றித் தெரியவந்தது. அதில் தன்னைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்திருக்கிறார்.

“படிப்புக்கேற்ற வேலையைவிடத் திருநங்கையாகிய என்னைப் புரிந்துகொண்டு மதிப்பாக நடத்தும் இடத்தில் வேலை செய்தால் போதும் என்னும் அவருடைய நிலையை அறிந்தோம். அதற்கேற்பதான் அவருக்கு ‘கொலபசி’ உணவகத்தில் குல்பி பிரிவில் வேலையை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

அவர்களுக்கும் தேவைதானே பொருளாதாரச் சுதந்திரம்!” என்கின்றனர் பெரிஃபெரி அமைப்பினர்.

குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்தவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள்வரை மாற்றுப் பாலினத்தவர் யார் வேண்டுமானாலும் இந்த இணையதளத்தில் தங்களின் விவரங்களைப் பதிவேற்றலாம். அலுவலகங்களில் கடைநிலைப் பணியிலிருந்து அவர்களின் படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற பணியிடங்களை மாற்றுப் பாலினத்தவர்களின் முழுமையான சம்மதத்துக்குப் பிறகே ஏற்படுத்தித் தருகின்றனர்.

இதற்காக, இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருக்கும் பெருநிறுவனங்களில் மாற்றுப் பாலினத்தவரைப் பணியில் அமர்த்துவதற்கு விரும்பும் நிறுவனங்களின் மனிதவள அதிகாரிகளுடனும் பெரிஃபெரி இணையதள அமைப்பினர் தொடர்ந்து பேசிவருகின்றனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author