Published : 11 Aug 2017 10:27 AM
Last Updated : 11 Aug 2017 10:27 AM

நூற்றாண்டு விழா: எம்.ஜி.ஆரின் பெயரில் ஏழு சேவைகள்

டிகர், முதல்வர் ஆகிய அடையாளங்களைத் தாண்டி மனிதநேயர் என்ற அடையாளத்துடன் மக்களால் பார்க்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். அதற்கேற்றபடி சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கில் மனிதநேயத்துடன் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நடந்தது. முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்.கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த முழுநாள் நிகழ்வில், எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட வரிகள் அச்சிடப்பட்ட பதாகைகள், அவரது சாதனைகளை விளக்கும் சரித்திரக் குறிப்புகள், அரிய ஒளிப்படங்கள் என்று விழா அரங்கு முழுதும் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடந்தன.

சைதை துரைசாமி தலைமையேற்ற இந்நிகழ்ச்சி, பிரபல வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை வில்லிசையாகத் தயாரித்து அளித்த உற்சாகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சமூக சீர்த்திருத்தப் பாடல்களை லக்ஷ்மண் ஸ்ருதி இசைக் குழுவினர் இசைக்கத் தொடங்கியதும் அரங்கத்தில் கூட்டம் நெருக்கித் தள்ளியது. இசை நிகழ்ச்சியின் நடுவில் நடந்த முக்கியமான அம்சம் அங்கீகார விழா.

பழகியவர்களுக்குப் பாராட்டு

எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகிய, பணிபுரிந்த முன்னாள் அமைச்சர்கள், அன்றைய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த செய்தியாளர்கள், எம்.ஜி.ஆர். உடல்நலம் காத்த மருத்துவர்கள், எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், முதல்வராகப் பொறுப்புவகித்தபோது, அவருடன் பணிபுரிந்த உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், திரை உலகில் எம்.ஜி.ஆருடன் பணிபுரிந்தவர்கள் பலரையும் சிறப்பு அழைப்பாளர்களாக மேடையேற்றிக் கவுரவித்தனர்.

பின்னர் ‘மனிதநேய’ அறக்கட்டளையைத் தொடங்கிவைத்த சைதை துரைசாமி, அதன் மூலம் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி ஏழு சமூகநல சேவைகளைத் தொடங்கினார். அவற்றில் எம்.ஜி.ஆர். அன்னம் அறக்கட்டளை மூலம் தேவைப்படும் ஏழைகளுக்கு உணவு அளித்தல், எம்.ஜி.ஆர். இலவசத் திருமண மண்டபம், எம்.ஜி.ஆர். இலவச சட்ட உதவி மையம், எம்.ஜி.ஆர். ரத்த வங்கி ஆகியவையும் அடக்கம்.

வேர்களுக்கு வெளிச்சம்

எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்கு வேர்களாக இருந்த அவருடைய உண்மைத் தொண்டர்கள், எம்.ஜி.ஆரை முன்மாதிரியாக ஏற்று, அவருடன் பழகியும் பயணித்தும் வந்த பலர், இன்று சமூகத்தில் பல நிலைகளில், பல மட்டங்களில் வாழ்ந்துவருகிறார்கள். அப்படிப்பட்ட அவரது அபிமானிகளின் எம்.ஜி.ஆர். உடனான அவர்களின் அனுபவங்களைத் தக்க ஒளிப்பட ஆதாரங்களுடன் ஒழுங்குபடுத்தி ‘வேர்களுக்கு வெளிச்சம்’ என்ற தலைப்பில் ஒளிப்பட ஆவணத் தொகுப்பாக உருவாக்கும் திட்டத்தையும் சைதை துரைசாமி தொடங்கிவைத்தார்.

மாநில அரசு ஒருபுறம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தி வரும்போது நீங்கள் ஏன் தனியாக ஒரு விழா நடத்துகிறீர்கள் என்று சைதை துரைசாமியிடம் கேட்டபோது, “எம்.ஜி.ஆர் .மாபெரும் மக்கள் சக்தி உள்ள தலைவர். எம்.ஜி.ஆருக்கு விழா எடுத்தால், விழா எடுப்பவருக்குத்தான் பெருமை. எம்.ஜி.ஆர். புகழ் தானாக வளருகிறதே தவிர, யாரும் தண்ணீர் ஊற்றி வளர்க்கவில்லை. அவர் ஒரு அதிசயம். எம்.ஜி.ஆரின் நேர்மை, தூய்மை, சேவை, மக்கள் நலன் இவைதான் நாங்கள் அவரிடம் கற்றுக்கொண்ட பண்பு. என்னைப் போன்ற பலர் அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம்” என்று சைதை துரைசாமி கூறினார்.

கட்சி வேறுபாடுகளைக் கடந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், சி.பி.ஐ. சார்பில் தா.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் செ. மாதவன், ஜி.விஸ்வநாதன், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், மூத்த நட்சத்திரங்கள் சரோஜா தேவி, லதா உட்பட, அரசியல், சமூக, திரையுலகப் பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

தொகுப்பு: ரசிகா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x