Last Updated : 27 Aug, 2017 02:51 PM

 

Published : 27 Aug 2017 02:51 PM
Last Updated : 27 Aug 2017 02:51 PM

கண்ணீரும் புன்னகையும்: செவிலியரின் சமயோசிதம்

ரயில் பயணத்தின்போது வலிப்பு வந்த குழந்தை, சரியான சமயத்தில் நர்ஸ் செய்த உதவியால் மீட்கப்பட்டது. ஆகஸ்ட் 23-ம் தேதி, சென்னை கும்மிடிபூண்டியிலிருந்து எண்ணூரில் தான் வேலைசெய்யும் மருத்துவமனைக்குச் செல்ல நர்ஸ் கோமதி ரயிலில் பயணித்தார். பொன்னேரியில் ஜெயசித்ரா என்பவரும் அவருடைய ஒருவயது மகன் யுவனேஷும் கோமதி இருந்த பெண்கள் பெட்டியில் ஏறினர். திடீரென்று குழந்தை யுவனேஷுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ந்து நின்ற தாய் ஜெயசித்ராவிடம் குழந்தையை வாங்கி, இன்னொரு பயணி ஷர்மிளாவிடம் தலைகீழாகக் குழந்தையைப் பிடிக்கச் சொன்னார் கோமதி. குழந்தையின் முதுகில் சில முறை தட்டி, வாயில் காற்றை ஊதிய பிறகு குழந்தை சகஜ நிலைக்கு வந்து அழத் தொடங்கியது. அதன் பிறகே பெண்கள் பெட்டியில் எல்லாரும் நிம்மதியடைந்தனர். சரியான நேரத்தில் கோமதி செய்த உதவி, அந்தக் குழந்தையின் உயிரை மீட்கக் காரணமாக இருந்தது.

பாகிஸ்தானின் அன்னை தெரசா

24chsrs_pakteresa 

சமீபத்தில் மறைந்த பாகிஸ்தானின் அன்னை தெரசா ரூத் கத்ரீனா மர்தா ஃபாவுக்கு அரசு மரியாதையும், மக்கள் அஞ்சலியும் ஒரேசேரக் கிடைத்தது. ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவரான ரூத், பாகிஸ்தானில் 57 ஆண்டு காலமாகத் தொழுநோய், காசநோய் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்தவர். 1929-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள லீப்ஸிக் நகரில் பிறந்த இவர், 1960-ல் கராச்சியில் உள்ள தொழுநோயாளிகள் குடியிருப்பில் சேவை செய்வதற்காக வந்தார். அங்கே கொடுக்கப்பட்ட சிகிச்சையால் சிதைந்துபோயிருந்த நோயாளிகளின் கைகளையும் கால்களையும் பார்த்து மனம் நொந்து, அங்கேயே பணியாற்ற முடிவுசெய்தார். ‘அடிலெய்ட் தொழுநோய் மையம்’ என்ற அமைப்பை ரூத் உருவாக்கினார். ரூத்தின் தன்னலமற்ற சேவை குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் காகான் அப்பாஸி தன் அஞ்சலிக் குறிப்பில் நினைவுகூர்ந்துள்ளார்.

கருக்கலைப்பு கோரியவரின் குழந்தை மரணம்

கருவில் போதிய வளர்ச்சியின்றி இருந்த குழந்தையைக் கலைப்பதற்கு உச்ச நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் பிறந்த குழந்தை, சமீபத்தில் பிரசவத்துக்குப் பின்னர் இறந்தது. மும்பைக்கு அருகே பரேல் நகரத்தில் 28 வயதான சகரிகா காட்கேவுக்கு, கருவுற்றிருக்கும் தன் குழந்தைக்கு ‘அர்நால்ட் சியாரி டைப் 2’ குறைபாடு இருப்பது தெரியவந்தது. 27-வது வாரக் கருவைக் கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னர் அவர் தொடர்ந்த வழக்கில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி காட்கேவுக்குக் குழந்தை பிறந்தது. பிறந்து சில நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்ட பின்னர், வீட்டுக்குக் குழந்தையை அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. குழந்தையின் நிலை மேம்படாது என்றும் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் அக்குழந்தை இறந்துபோனது. சகரிகா காட்கேவின் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்த மகப்பேறு நிபுணர் நிகில் தத்தார், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அந்தத் தாய்க்குத்தானே துயரம் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய சட்டத்தின்படி, 20 வாரங்கள்வரை வளர்ந்த சிசுவை கருக்கலைப்பு செய்யலாம். தற்போது மருத்துவர்கள் சமூகம், குறைபாடுள்ள சிசுக்களைக் கருக்கலைப்பு செய்வதற்கு 24 வாரங்கள்வரை நீட்டிப்பு வழங்க வேண்டுமென்று கோரி வருகின்றனர். பிறந்த பிறகு கண்ணுக்கு முன்னால் குழந்தை இறக்கும்போது தாய்க்கு உண்டாகும் பெருந்துயரம் இதனால் தவிர்க்கப்படும் என்பதே அவர்கள் கூறும் நியாயம்.

கழிப்பறை இல்லாததால் விவாகரத்து

ராஜஸ்தானில் மனைவிக்குக் கழிப்பறை கட்டித் தராத கணவனிடமிருந்து பிரிந்து வாழ விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. 2011-ல் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சோட்டு லாலுக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடப்பதற்கு முன்பே கழிப்பறை வசதி செய்துதரப்படும் என்று சோட்டு லால் குடும்பம் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு நாளும் இருள் வருவதுவரை காத்திருப்பதும் அதிகாலையிலேயே திறந்த வயல்வெளிகளைத் தேடிப் போவதும் சங்கீதாவுக்கு மிகுந்த சங்கடத்தை அளித்துவந்தது. இதனால், கடந்த ஆண்டு விவாகரத்து கோரி அவர் வழக்குப்பதிவு செய்தார். சங்கீதா மாலிக் தொடர்ந்த வழக்கு வடஇந்திய நாளிதழ்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ராஜேந்திர குமார், விவாகரத்து வழங்கினார். “மது, புகையிலை, மொபைல் போன்களுக்குச் செலவழிக்கப் பணம் உள்ள நிலையில், வீட்டில் கழிப்பறை கட்ட முடியாதது முரண்பாடானது” என்றும் தனது தீர்ப்பில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x