Last Updated : 15 Aug, 2017 12:08 PM

 

Published : 15 Aug 2017 12:08 PM
Last Updated : 15 Aug 2017 12:08 PM

கல்வி ஒளி பாய்ச்சும் அகல் விளக்கு!

சூ

ழ்ந்திருக்கும் இருட்டை எதிர்த்துப் போராடுவதைவிட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவது சிறந்தது என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு காரியத்தைத்தான் அகல் விளக்கு அறக்கட்டளை தாம்பரம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்குச் செய்துவருகிறது.

கேள்விக்கென்ன பதில்?

வசதி குறைந்த சூழ்நிலையில் படிக்கும் மாணவர்களால் சராசரியான மதிப்பெண்களைத்தான் பெறமுடிகிறது. அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும், மேற்கொண்டு நன்றாகப் படிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலும் தனியாகப் பயிற்சி எடுப்பதற்கு அவர்களுக்கு வசதி இருக்காது. தாம்பரம் நகர்ப் பகுதியைப் பொறுத்தவரை பிளஸ் டூ (இயற்பியல், வேதியியல், கணிதம் மூன்று பாடங்களுக்கு) குறைந்தபட்சத் தனிப்பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு 25 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்புக்கும் கிட்டத்தட்ட அதே செலவுதான்.

“படிச்சுட்டு என்ன பண்ணப்போறான், சுக்கு காப்பி வித்து கஷ்டப்படுற எனக்கு ஒத்தாசையா வாடான்னா வரமாட்டேங்கிறான்” என்பதுபோல் பிள்ளைகளைத் தங்களின் தொழிலுக்கு இழுப்பதிலேயே குறியாக இருப்பவர்களால் தனியாகப் பணம் செலவு செய்து டியூஷனுக்கு அனுப்புவதெல்லாம் நடக்காத காரியம். இந்நிலையிலும் எப்படியாவது படிக்க ஆசைப்படும் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டதுதான் ‘அம்மா சிறப்பு பயிற்சி மையம்’” என்கிறார் அகல் விளக்கு அறக்கட்டளையின் நிறுவனர் தாம்பரம் நாராயணன்.

மூன்று தகுதிகள்

அம்மா சிறப்பு பயிற்சி மையத்தில் மாணவர்கள் சேர்வதற்கு மூன்று தகுதிகளை நிர்ணயித்துள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். குடும்பத் தலைவரின் மாத வருமானம் 15 ஆயிரத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. பெண்களுக்கு முதலிடம் ஆகியவைதான் அந்த மூன்று தகுதிகள்.

IMG_20170616_085113 தாம்பரம் நாராயணன் பொதுவில் பெண்கள்?

“வீட்டு வேலை செய்யும் பெண்கள், சிறிய கடைகளில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்கவைப்பதற்கு நல்ல மனம் கொண்ட கடையின் முதலாளிகளோ, வேலைசெய்யும் வீட்டைச் சேர்ந்தவர்களோ பணம்கட்டிச் சேர்த்துவிடுவார்கள். ஆனால் கூடுதலாகப் பயிற்சிகளைப் பெறுவதற்கு அவர்களின் குடும்பத்தினரால் செலவு செய்ய முடியாது.

அப்படிப்பட்ட தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளும் பயன்பெற வேண்டும் என்பதற்குத்தான் `பொதுவில் பெண்கள்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

இந்த அடிப்படையில் வசதி குறைந்த ஆனால் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலரும் இங்கு இலவசமாகப் பயிற்சி பெறுகின்றனர்”என்கிறார் நாராயணன்.

நல்ல உள்ளங்களின் மூலமாக தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதிகம் பணம் வசூலிக்கும் டியூஷன் சென்டர்களில்கூட இல்லாத ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள்கூட இங்கு இருக்கின்றன. இது தவிர வரும் காலத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளையும் எடுப்பதற்கு யோசித்து வருகிறோம் என்றார் ஆசிரியர்களுக்கான ஆலோசகரான தாமரைக்கண்ணன்.

தங்கப் பதக்கம் பரிசு

“தஞ்சாவூரின் வடசேரி அரசுப் பள்ளியில் 10, 12-வது வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்குத் தங்கப் பதக்கத்துடன், தங்க நாணயங்களையும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆகஸ்ட் 15 அன்று வழங்குவேன். இந்தாண்டும் வடசேரியில் மாணவர்களுக்கு இந்தப் பாராட்டு விழா நடக்கும்.

அதோடு இந்தாண்டு தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 12 அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்களை வழங்க இருக்கிறோம். அறிவை ஆயுதம் என்றார் பாரதியார். எங்களின் எளிய முயற்சிகளின்மூலம் கல்வி எனும் ஒளியை மாணவர்களுக்குப் பாய்ச்சுகிறோம்” என்றார் தாம்பரம் நாராயணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x