Last Updated : 01 Aug, 2017 10:20 AM

 

Published : 01 Aug 2017 10:20 AM
Last Updated : 01 Aug 2017 10:20 AM

துறை அறிமுகம்: பொறியியல் தெரியும், அதென்ன கருவியியல்?

பொ

றியியல் படிப்பு என்றாலே சிவிலும் இயந்திரவியலும்தான் உடனடியாக நினைவுக்கு வரும். அதை அடுத்து மின்னியல், கணினி, வேதியியல், கப்பல் துறை, உயிரி மருத்துவம் என ஏகப்பட்ட பொறியியல் படிப்புகள் வந்துள்ளன. இப்படிப்பட்ட எல்லாப் பொறியியல் கல்வி பாடத் திட்டத்திலும் கருவியியல் (Instrumentation) துறைக்கு முக்கிய இடம் உள்ளது.

பெரிய தொழிற்சாலைவரை

அப்படியென்ன முக்கியத்துவம் கருவியியலுக்கு உள்ளது? எங்கெல்லாம் அளவீட்டுக்கான (measurement) தேவை இருக்கிறதோ, கண்காணிப்பு நடைபெறுகிறதோ (monitoring), தானியங்கி (automation) செயல்படுகிறதோ, கட்டுப்படுத்தும் முறை உள்ளதோ (controlling) அங்கெல்லாம் கருவியியல் துறையும் இருக்கும். இந்த நான்கில் ஒன்று இல்லாமல் எந்தவொரு பொருளையும் தொழிற்சாலையிலிருந்து தயாரிக்கவோ விற்பனை செய்யவோ முடியாது. சிறு, குறு தொழிற்சாலை முதல் பெரிய தொழிற்சாலைவரை இவை இல்லாமல் ஒரு ஆணி, போல்ட்கூடத் தயாரிக்க முடியாது.

உதாரணத்துக்கு, மின்விசிறியின் வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ ரெகுலேட்டர் தேவைப்படுகிறதல்லவா! அது கருவியியல் துறையைச் சார்ந்ததுதான். ஆங்கிலத்தில் அது POT (Potentiometer) என அழைக்கப்படுகிறது. இரு சக்கரவாகனத்தில் உள்ள ஸ்பீடோமீட்டர், anti lock breaking system கூடக் கருவியியல் துறைசார் கருவிகள்தான்.

ஆனால், தானியங்கி முறைக்கு இதில் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆகையால் ஆள் குறைப்புக்கு முக்கியக் காரணம் இத்துறைதானா எனக் கேட்கலாம். ரோபோட் ஒன்றை இயக்க வேண்டுமானாலும் புரொகிராம் செய்ய வேண்டும். அதற்கு PLC & SCADA மென்பொருள் அவசியம். அதை உருவாக்க இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்தான் தேவைபடுகிறார்கள். அது மட்டுமில்லாமல் Robotics, Bio Medical, Control System, Analytical Instruments என எல்லாப் பிரிவுகளிலும் இந்தத் துறை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

சர்க்கரை ஆலை, சிமெண்ட் உற்பத்தி ஆலை, காகிதத் தயாரிப்பு ஆலை, அணுமின் நிலையம், கப்பல், விமானத் தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவத் துறை ஆகியவற்றில் கருவியியல் இன்றியமையாதது.

வேலை நிச்சயம்

1970-களிலேயே மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் இந்தப் படிப்பு வந்துவிட்டது. ஆனாலும், போதுமான விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்தில் சிறிய அளவில் மட்டுமே இத்துறை இயங்கிவருகிறது. அகில இந்திய அளவிலேயே இந்தப் பிரிவைப் படித்தவர்கள் மிகக் குறைவாக இருப்பதால் எல்க்ட்ரிகல் பொறியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு இத்துறையில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

பன்னாட்டுப் பெருநிறுவனங்களான, Emerson, ABB, E & H, Forbs Marshall, Aker, L&T, Toyo, Pricol, SR Turbo Energy Pvt Ltd, TCMS India Group Ltd, Inovonz Engineering Pvt Ltd., Technip, Macro Automation ஆகியவை கருவியியல் துறையை மையமாக வைத்து இயங்குபவை. புதுச்சேரியில் உள்ள CHEMIN C & I நிறுவனம் கருவியியல் துறையில் போதிய ஆட்கள் இல்லாததால் பயிற்சியும் கொடுத்து, அவர்களை வேலைக்கும் எடுத்துக்கொள்கிறது.

பயிற்சிக்குப் பின்னர் பணியும் போதிய அனுபவமும் பெற்ற பின்னர் அரபு நாடுகளில் நல்லதொரு பணியும் பதவியும் கிடைக்கும் என்பது நிச்சயம். அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும் பணியில் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கலாம்.

அபாயமும் மீட்பும்

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயேதான் பொறியியல் கல்லூரிகளில் இந்தத் துறை இருக்கிறது. அதிலும் மிகக்குறைவான மாணவர்கள் மட்டுமே இந்தத் துறையைத் தேர்வுசெய்கிறார்கள். ITI (Instrument Mechanic Trade), Diploma in Instrumentation and Control Engineering மற்றும் B.E., ( Instrumentation and Control Engineering), B.E., (Electronics and Instrumentation Engineering), M.E (Control and Instrumentation), M.Tech (Instrumentation) என வெவ்வேறு வடிவங்களில் படிப்புகள் இருந்தாலும் மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருப்பதால் சிவில், இயந்திரவியல் போல லாபம் ஈட்ட முடியாததால் இந்தத் துறைக்கு மூடுவிழா காணவே கல்வி நிறுவனங்களும் முனைப்புகாட்டுகின்றன.

இந்தத் துறையை மீட்டெடுக்க, தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக வருடந்தோறும் நடத்தும் ஒற்றைச் சாளர முறையின்போது மாணவர்களுக்கு இந்தப் படிப்பைத் தேர்வுசெய்ய ஒரு விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தலாம். அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் உள்ள ஆலைகளில் இந்தக் கருவியியல் படித்த நபர்களையே நேரிடையாகப் பணியில் அமர்த்தலாம். தொழில், வளர்ச்சித் துறையின் கீழ் இதற்கென ஒரு பிரிவை ஏற்படுத்தி வருடந்தோறும் இந்தக் கருவியியல் துறைக்கு மட்டுமென ஒரு வேலைவாய்ப்பு முகாம் நடத்தலாம்.

இப்படிப் படித்து வெளிவரும் மாணவர்களும் சரி இந்தக் கருவியியலும் சரி நல்ல முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

- கட்டுரையாளர், இணைப் பேராசிரியர் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x