Last Updated : 20 Aug, 2017 01:48 PM

 

Published : 20 Aug 2017 01:48 PM
Last Updated : 20 Aug 2017 01:48 PM

கண்ணீரும் புன்னகையும்: பெண் உரிமை வீடியோ

இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி ஏராளமாகப் பேசப்படுகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் பெண்களின் அதிகாரத்தை அதிகரிப்பதைத் தனது முழக்கமாகவே வைத்துள்ளன. ஆனால், இந்தியாவில் பெண்களின் உரிமைகள் என்னவென்பது குறித்து அடிப்படைத் தகவல்களைச் சொல்லும் வீடியோவை ‘வைட்டமின் ஸ்த்ரீ’ யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான சுபாரி ஸ்டுடியோஸின் தயாரிப்பான இந்த வீடியோ சட்டம், அரசு நிர்வாகம், கல்வி, பாதுகாப்பு, வேலை ஆற்றல் ஆகியவற்றில் பெண்களின் நிலை பற்றிய தகவல்களை வரலாற்றுரீதியாகத் தருகிறது.

சட்டரீதியாக இந்தியாவில் பெண்களுக்கான சட்டங்கள் முற்போக்குத்தன்மை கொண்டதாகவும் நடைமுறையளவில் அவர்களின் நிலை மோசமாகவும் இருக்கும் முரண்பாட்டை இந்த வீடியோ தீர்க்கமாகச் சொல்கிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களான பாலியல் வல்லுறவு தண்டனைச் சட்டம் (375), குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் (498 ஏ) ஆகியவை இந்த வீடியோவில் குறிப்பிடப்படவில்லை.

வீடியோவைக் காண: https://www.youtube.com/watch?v=MT6HoFa8ZDk

நேபாளத்தில் ‘தீட்டுக்குத் தடை’

மாதவிடாயின்போது பெண்களைத் தனிக்குடிசைகளில் தனிமைப்படுத்தும் பழக்கத்தைத் தடைசெய்து நேபாள அரசு புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. மாதவிடாய் வந்த பெண்களைத் தொழுவங்களில் ஒதுக்கிவைக்கும் சவுபாடி வழக்கத்துக்கு நேபாள உச்ச நீதிமன்றம் 2005-ம் ஆண்டு ஏற்கெனவே தடைவிதித்திருந்தது. ஆனாலும் நேபாளத்தின் குக்கிராமங்களில் இன்றும் நீடிக்கும் இந்தப் பழக்கத்தால் 19 வயது பெண் ஒருவர் தொழுவத்தில் தூங்கும்போது பாம்பு கடித்து இறந்துபோனார். இதையடுத்து நேபாள பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அமலான சட்ட மசோதாவின் அடிப்படையில் சவுபாடி வழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் மூன்றாயிரம் நேபாள ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமில வீச்சுகள், வரதட்சணைக்கு எதிரான அம்சங்களும் இந்த சட்ட மசோதாவில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x