Last Updated : 04 Aug, 2017 11:44 AM

 

Published : 04 Aug 2017 11:44 AM
Last Updated : 04 Aug 2017 11:44 AM

மொழி கடந்த ரசனை 42: பூட்டிய அறையில் மாட்டிக்கொண்டோம்

தி

ரைப்படங்களின் பிரிக்க முடியாத அம்சமாகப் பாடல்கள் விளங்குகின்றன. கதைக்கருவின் தேர்வைப் பொருத்துத் திரைக்கதையில் கையாளப்படும் முக்கிய உணர்வுகளான காதல், மகிழ்ச்சி, சோகம் போன்றவற்றுக்கு உயிர்கொடுக்கும் முக்கியக் கலையம்சங்கள் இசையும் பாடல்களும். கவித்துவம் மிக்க வரிகள், பாடல் இடம்பெறும் பொருத்தமான சூழல் ஆகியவை மூலம் நடிகர்களின் நடிப்பைக் கடந்து வெற்றியடையும் அத்தகைய சில பாடல்கள் சாகா வரம் பெற்றவை. அப்படிப்பட்ட பாடல்கள் திரைப்படங்கள் வெளிவந்து மறக்கப்பட்ட பல வருடங்களுக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

காதல் வயப்படும் நாயகன்- நாயகியின் காதலை வெளிப்படுத்தும் திரைக்காட்சிகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டு வந்திருக்கின்றன. நந்தவனத்தில் மரத்தைச் சுற்றிவந்து பாடிய கதாபாத்திரங்கள் மெல்ல மெல்ல கார், படகு, மாளிகை, விருந்து மண்டபம் என்று முன்னேறினர். பாடல் வரிகளும் மாறிவரும் இளைஞர்களின் ரசனைக்கு இணையாகப் புதிய புதிய வடிவங்களில் எழுதப்பட்டன. இப்படிப்பட்ட பரிவர்த்தனைகளின் மணி மகுடமாகத் திகழ்ந்தன ‘பாபி’ படப் பாடல்கள்.

குறிப்பாக, ‘ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த் ஹோ, அவுர் சாவி கோஜாய்’ என்று தொடங்கும், ஷைலேந்திர் - லதா பாடிய இந்தப் பாடல், இதற்கு முன்பு மட்டுமின்றி இதற்குப் பின்னரும் இது போன்ற ஒரு அழகிய பாடல் இதுவரை வரவில்லை என்று சொல்லும்படி விளங்குகிறது. காதலில் வீழ்ந்த பதின்பருவக் காதலர்களாக இப்பாடலைப் பாடும் ரிஷி கபூர்- டிம்பிள் கபாடியா ஜோடியைப் பார்க்கும் ரசிகர்கள், அது திரைக்காட்சி அல்ல, நம் முன் நடக்கும் ஒரு நிஜக் காட்சி என்றே நினைப்பார்கள். அதற்கேற்ற விதத்தில் அவர்களின் உடல் மொழி அமைந்துவிட்டது.

கேட்டவரும் பார்த்தவரும் திருப்பிப் பாடும்விதமாக, எளிய, வித்தியாசமான மெட்டுடன் கூடிய பாடல். இளைஞர்களை ஈர்க்கும் வரிகளும் இசைக் கோவையும் கூடிய பாடலாக இது அமைந்துவிட்டது. அக்கால திரை நாயகர்களுக்கு இல்லாத ஒரு கல்லூரி மாணவனின் அச்சான முகவெட்டு ரிஷிகபூரிடம் அமைந்திருந்தது. முழுவதுமான இந்தியத்தன்மை இல்லாத, தென் அமெரிக்க அழகிகளின் சிறு சாயலும் சன்ட்ரா பார்பெராவுடன் ஒப்பிடத் தக்க முக வசீகரமும் ஒருங்கே சங்கமிக்கும் டிம்பிள் கபாடியாவின் தனித்த எழில் தோற்றமும் இப்படலை எட்டாத உயரத்துக்கு இட்டுச் சென்றன.

பொருள்.

வெளியிலிருந்து யாரும் உள்ளே வர முடியாது

உள்ளேயிருந்து யாரும் வெளியே போக முடியாது

இப்படி ஆகிவிட்டால் எப்படி இருக்கும் நினைத்துப்பார்

-(ரிஷி கபூர்) இவ்வரிகளைப் பாடியவுடன் டிம்பிள் அதுவரை திறந்திருந்த அந்த அறையின் எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு அவர் மீது ஒரு பார்வையை வீசுவார். மூடிய அறையில் இருவருக்கும் ஏற்படப் போகும் நேர்மறைக் காதல் உணர்வை எதிர்மறை வரிகளில் விளக்கும் விதம் ஆனந்த பக்ஷி எழுதிய தொடக்க வரிகள் அழகுடன் காட்சியாக்கப்பட்டிருக்கும்)

நானும் நீயும் பூட்டிய அறையில் மாட்டிக்கொண்டோம்

சாவி வேறு எங்கோ தொலைந்துவிட்டது.

இப்படி ஆகிவிட்டால் எப்படி இருக்கும் நினைத்துப் பார் - ரிஷி

உன் பார்வையின் கிறக்கத்தில் பாபி (நாயகியின் திரைப் பெயர்) தொலைந்துவிட - டிம்பிள்

பூட்டிய அறையில் எப்படி இருக்கும் நினைத்துப் பார்

(ஒரு மலைப் பள்ளத்தாக்கில் நாம் இருக்க நேர்ந்த சமயம்)

முன்னால் (மேலே)பயங்கர இடியுடன் கூடிய கரு மேகம்

அய்யோ எனக்குப் பயமாய் இருக்கிறது — டிம்பிள்)

பின்னால் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன் – ரிஷி

(ம்ம்... ஏன் என்னை இப்படிப் பயமுறுத்துகிறாய் — டிம்பிள்)

மேலேயும் போக முடியாது கீழேயும் இறங்க முடியாது

நினைத்துத் பார் என்னவாகும் நிலை இப்படி என்றால் -ரிஷி

(அதுவும் இன்றி)

நானும் நீயும் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம்

அப்பொழுது (செல்லும்) பாதையை மறந்துவிட்டோம்

நினைத்துப் பார் என்னவாகும் நிலை இப்படி என்றால்-ரிஷி

அரவணைப்பு என்னும் உனது ஊஞ்சலில்

ஊஞ்சலாடுவாள் உன் அன்பு பாபி — டிம்பிள்

ஊரைவிட்டுத் தொலைவில், உயரமான மலைக்கு அடியில்

உல்லாசமாகப் பாடிக்கொண்டு சேர்ந்த ஒரு மரத்தின் கீழே

இருட்டிய அப்பொழுதில் என்னையும் காற்றையும் தவிர

எதுவும் தெரியாத அந்த ஏதோ ஒரு இடத்தில்

எப்படி இருக்கும் நிலை இப்படி ஆகிவிட்டால் - ரிஷி

(அதோடு)

நீயும் நானும் ஒரு காட்டில் போய்க்கொண்டிருக்கிறோம்

பாய்ந்து வருகிறது எதிரில் ஒரு சிங்கம்

நினைத்துப் பார் என்னவாகும் நிலை இப்படி என்றால் -ரிஷி

சிங்கத்திடம் சொல்லுவேன் உன்னை விட்டு விட்டு

என்னை இரையாக்கிக் கொள் என்று –பாபி

நானும் நீயும் இப்படியே சிரித்து மகிழ்ந்துகொண்டிருக்கும்

தேனிலவு நேரத்தில் திடீரென என் கண்கள் மூடி விட—ரிஷி

உன் மீது சத்தியம் உனக்கு முன்பு பாபி இறந்துவிடுவாள் - டிம்பிள்

காதலின் ஆழத்தை வழக்கமான உருவகங்களும் கனமான வார்த்தை பிரயோகங்களும் இல்லாமல், கல்லூரி மாணவர்களுக்கேற்ற காதல் பாடலாகக் காலம் காலமாக இப்பாடல் விளங்கி வருவதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x