Published : 28 Aug 2017 10:24 am

Updated : 28 Aug 2017 10:24 am

 

Published : 28 Aug 2017 10:24 AM
Last Updated : 28 Aug 2017 10:24 AM

சபாஷ் சாணக்கியா: உங்கள் பிரச்சினை... உங்களோடு...!

ஒரு கல்யாண வீட்டில் நண்பர்கள் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம். தாமதமாக வந்து சேர்ந்தார் மற்றுமொரு அன்பர். அவர் முகம் வாடி இருந்தது. `என்னப்பா, என்னாச்சு' என்றோம். அவரோ சுரத்தில்லாமல் `எல்லாம் என் நேரம்' என்றார். மற்ற நண்பர்கள் விடவில்லை. அவரைத் தொடர்ந்து கேள்விகள் கேட்க, அவர் தன் மனக்குமுறல்களைக் கொட்டத் தொடங்கினார்!

அவரது நூற்பாலைத் தொழில் படுத்து விட்டதாம். நூல் விற்ற இடங்களில் பணம் மாட்டிக் கொண்டு விட்டதாம்.எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களாலும், அலுவலர்களாலும் ஏமாற்றப்பட்டார் என்பதை அவர் சொல்லச் சொல்ல, சுற்றியிருந்தவர்கள் ஏதோ கதை போல ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்!


வாங்கிய வங்கிக் கடனைத் திருப்பிக் கட்ட முடியவில்லை என்று அவர் கூறியதும், ஒருவர் அப்படியென்றால் தொழிற்சாலையை ஏலம் போட்டு விடுவார்களே என ஆர்வமாகக் கேட்டார்! கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் கேட்பது போல இருந்தது! மற்றவர்களை நம்பி அவர் மோசம் போனார் என்பது தெரிந்தது. ஆனால் அவரது கஷ்டங்களைக் கேட்டு யாரும் அனுதாபப் படவுமில்லை, அதிலிருந்து மீண்டு வர எந்த யோசனையும் சொல்லவுமில்லை!

அவர்களுக்கு அது கொஞ்ச நேரப் பொழுது போக்கு! அவ்வளவுதான்! `அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், பிறர் சொல்லிய கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான் ' என்கிறார் சாணக்கியர்!

பின்னே என்னங்க? இந்த மாதிரி தன் பெயரைத் தானே கெடுத்துக் கொள்ளலாமா? ஐயா, இதனால் என்ன பலன்? உங்களைப் பற்றிய தவறான அபிப்பிராயம் தேவையில்லாமல் பரவும்! மற்றவர் பார்வையில் உங்கள் மதிப்பு குறையும்!

யாரும் உறவினர்கள் நண்பர்கள் உங்கள் தொழிலில் முதலீடு செய்திருந்தால் , அவர்களும் சீக்கிரம் கழட்டிக் கொள்ளவே வழி பார்ப்பார்கள்! மற்றவர்களிடம் சொன்னால் மனப்பாரம் குறையும் என நினைத்தால், உங்கள் மேல் உண்மையான அக்கறை உள்ள ஓரிருவரிடம் மட்டுமல்லவா சொல்ல வேண்டும்? இப்படியா தேவையற்றவர்களிடம் விளம்பரப் படுத்துவது?

மேலும் நடந்து முடிந்த கெட்டவைகளை அடிக்கடி பேசுவது அவைகளை மீண்டும் உங்களுக்கு ஞாபகப் படுத்தும்! இது உளவியல் ரீதியாக ஒருவரது தன்னம்பிக்கையை அல்லவா பாதிக்கும்? தான், ஏமாந்து போனவன் தோற்றுப் போனவன் எனும் எண்ணம் அடுத்த காரியத்தில் தைரியமாக இறங்க விடாதே?

மற்றவர்களிடம் போய் தமது சொந்தப் பிரச்சனைகளை இறக்கி வைப்பவர்களுக்கு இன்னொரு பரிமாணமும் உண்டு!அலுவலகமோ,வீடோ தங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும், அவர்கள் அதைத் தாமே எதிர்கொள்ள மாட்டார்கள். அடுத்தவர்களிடம் சொல்லிச் சொல்லி அங்கலாய்ப்பார்கள்!

உதாரணமாக, அலுவலகத்தில் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், அப்பிரச்சினையை அதற்கான அதிகாரியே தீர்க்கணுமில்லையா? மேலாளர் வரை எடுத்துச் செல்லலாமா? அப்பிரச்சினைக்கு அவர்கள் இருவருமே செய்யக்கூடிய தீர்வு ஒரே மாதிரித் தானே இருக்கும்?

இந்த மாதிரி சிறிய விஷயங்களுக்கும் தேவையில்லாமல் நச்சரிப்பவர்களுக்குக் கட்டுமானத் துறையில் கோலோச்சிய எனது நண்பர் ஒருவர் சொல்வதைப் பாருங்கள். `உங்கள் பிரச்சினைகளைக் கொண்டு வந்து என் மேசையில் வைத்து விட்டு ஓடாதீர்கள்.

இது என் பிரச்சினை அல்ல ; நம் பிரச்சினை! எனவே அதற்கான தீர்வையும் நீங்களே யோசியுங்கள். முடிவை நடைமுறைப் படுத்த எனது ஒப்புதல் வேண்டுமெனில் மட்டுமே என்னிடம் வாருங்கள். மேலும் எல்லாப் பிரச்சினைகளையும் நானே தீர்க்க வேண்டுமென்றால் நீங்கள் எதற்கு? உங்களுக்கு சம்பளம் எதற்கு?

கல்லூரியில் படித்த பொழுது ஒரு சம்பவம்.விடுதி அறையில் நானும் எனது நண்பனும். ஒரு ஞாயிறு மாலை வேறு சில நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பும் வேளையில் எனக்குப் பயங்கரத் தலைவலி. பினாத்திக் கொண்டே இருந்தேன்.விடுதி நண்பன் சொன்னதை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை!

`உனக்குத் தலைவலி வந்தவுடன் காப்பி போட்டுக் கொடுத்தேன். மாத்திரை வாங்கி வந்து சாப்பிடச் செய்தேன். இதற்கு மேல் உன் வலியை நானா வாங்கிக் கொள்ள முடியும்?'

மேலோட்டமாகப் பார்த்தால் நண்பன் எரிச்சல் பட்டதாகத் தோன்றும். ஆனால் அவர் அதிக பட்சம் ஆறுதல் வார்த்தைகள் சொல்லலாமே தவிர, எனக்கு வந்த வலியை நானே தானேங்க பொறுத்துக்கணும்?

சுயநலவாதியாக இருப்பவர்களைப் பார்த்து இருப்பீர்கள். அண்ணே , சிலர் அதை விட மோசம். அவர்களுக்கு எல்லாமே அவர்களை மையமாக வைத்துதான்! அத்தகையவர்கள் சர்வகாலமும் தங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எப்போது பசிக்கும், என்ன குடிப்பார்கள், ஏன் தூக்கம் வராது என்பன போன்றவற்றைச் சொல்லி நம்மை வதைப்பார்கள்! எனவே அவர்களைக் கண்டாலே மற்றவர்கள் ஓடி ஒளிவார்கள்!

தேவையில்லாமல் நமது வேதனைகளையும், தோல்விகளையும் மற்றவர்களிடம் சொல்லக் கூடாது என சாணக்கியர் சொல்வது சரி தானே?

-


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x