Last Updated : 22 Aug, 2017 10:46 AM

 

Published : 22 Aug 2017 10:46 AM
Last Updated : 22 Aug 2017 10:46 AM

ஆளுமை மேம்பாடு: மகிழ்ச்சி தரக்கூடியது நன்னம்பிக்கை!

ரோ

ஜா செடி முள்ளைக் கொண்டுள்ளது என்று குறை சொல்லவும் முடியும், முள்செடி அழகிய ரோஜாப்பூவைக் கொண்டுள்ளது என்று சந்தோஷப்படவும் முடியும் என்றவர் பிரெஞ்சு அறிஞர் அல்போன்ஸ். முள்ளும் மலரும் உண்மையில் இருப்பதுதான். அதேபோல சந்தோஷமும் குறையும் நம் பார்வையைப் பொருத்ததே! அந்தப் பார்வை நம் நம்பிக்கையைச் சார்ந்து இருக்கிறது. சந்தோஷம் தரக்கூடியது நன்னம்பிக்கை, துன்பம் தரக்கூடியது அவநம்பிக்கை.

ஆச்சரியம் என்னவென்றால், 1970வரை நன்னம்பிக்கை ஒரு மனநலக் குறைபாடாக, பக்குவமற்ற எண்ணத்தின் அறிகுறியாக அல்லது பலவீனக் குணமாகக் கருதப்பட்டது. 1970-களின் இறுதியில் மார்க்ரெட் மாட்லின், டேவிட் ஸ்டாங் போன்ற உளவியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சியின் மூலம், நன்னம்பிக்கை பற்றிய இந்தக் குறையான பார்வையை மாற்றி அமைத்தனர்.

ஏன் நன்னம்பிக்கை கொள்ள வேண்டும்?

காந்தியடிகளின் வார்த்தைகளில் சொல்வது என்றால் “மனிதன் எதுவாக விரும்புகிறானோ, அதுவாகவே மாறுகிறான். எனக்கு நானே சில விஷயத்தைச் செய்ய முடியாது என்று விடாமல் சொல்லிக்கொண்டிருந்தேன் என்றால், கடைசியில் அதை உண்மையிலேயே செய்ய இயலாத ஒருவனாக மாறிவிடுவேன். மாறாக என்னால் முடியும் என்று நம்பினேன் என்றால், ஆரம்பத்தில் அதற்கான சக்தி இல்லாமல் இருந்தாலும், இறுதியில் அதற்குரிய சக்தியைப் பெற்று, கண்டிப்பாக அந்த விஷயத்தைச் செய்துமுடிப்பேன்.”

தோல்விகளும் பின்னடைவுகளும் சறுக்கல்களும் இல்லாத வாழ்வே கிடையாது. தோல்விகளில் துவளாமல் இருக்கவும், பின்னடைவுகளில் பின்தங்காமல் இருக்கவும், சறுக்கல்களில் சுணங்கிப் போகாமல் இருக்கவும் இந்தத் தளரா நம்பிக்கை மிகவும் அவசியம். இந்த நம்பிக்கையானது பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்து அதைத் தீர்க்கும் தெளிவான பார்வையை நமக்கு அளிக்கிறது. அது மட்டுமின்றி இந்த நம்பிக்கையானது பின்னடைவுகளில் உள்ள நல்லவற்றை மட்டும் பார்க்கும் திறனை நமக்கு அளிக்கிறது.

பொதுவாகவே நாம் சோர்ந்திருக்கும் பொழுதினில், பலதரப்பட்ட அறிவுரைகள் வாரி வழங்கப்படும். அது இன்னும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி சோர்வடையச் செய்யலாம். ஆனால் தளரா நம்பிக்கை கொண்டிருந்தால், தோல்விகளில் இருந்து மீள்வதற்குப் பிறரின் தோள்கள் தேவை இல்லை.

2002-ல் உளவியலாளர்கள், நாதன் ரேட்கிலிஃப், வில்லியம் கிலேன் ஆகியோர் மனித மனத்தை ஆராய்ந்தனர். அதில், நன்னம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் உடல்நலத்தை நல்ல பழக்கவழக்கங்கள் மூலம் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் புகைபிடித்தல், குடி போன்ற தீய பழக்கங்கள் மிக அரிதாகவே இருக்கின்றன. மேலும், இவர்கள் இரவில் ஆழ்ந்த தூக்கத்தை எளிதில் பெறுபவர்களாக இருக்கிறார்கள் எனக் கண்டறிந்தனர்.

நன்னம்பிக்கையை எப்படி வளர்க்கலாம்?

இயல்பில் அடிக்கடிதன்னம்பிக்கை தளர்ந்துபோகிறவர்கள், அதிலிருந்து மீண்டுவரப் பின்பற்றக்கூடிய எளிய வழிகள் இதோ:

1. பெரிய விஷயங்களுக்கு மட்டுமின்றி, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் சந்தோஷப்பட்டு, அதைத் தந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்தல்.

2. உதவி தேவைப்படுபவர்களுக்கு தாமாக முன்வந்து உதவுதல்.

3. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது. குறிப்பாகப் சுயசரிதை, பயணக் கட்டுரைகள் வாசிப்பு. இதன் மூலம் பலர் கடந்த வந்த பாதையையும் உலகம் எவ்வளவு பரந்துவிரிந்தது என்பதையும் உணரலாம்.

4. நம்பிக்கையுள்ள மனிதர்களுடன் நேரம் செலவழித்து, அவர்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்துகொள்தல்.

5. கடந்துபோன நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் அதே வேளையில் அதை நினைத்து வருந்துவதைத் தவிர்த்தல். ஒவ்வொரு நாளையும் புதிதாக அணுகுதல்.

நம்பிக்கையே வாழ்க்கை

நிரந்தரமற்றதே நம் வாழ்வின் நிரந்தரம். எந்த இன்னலும் பிரச்சினையும் தோல்வியும் நம்முடன் நிரந்தரமாகத் தங்கப்போவதில்லை. எனவே தோல்வியின்போது துவளவும் வேண்டாம், வெற்றியின் போது அளவுக்கு அதிகமாகத் தலைக்கனம் கொண்டு துள்ளவும் வேண்டாம். விக்டர் ஹியூகோ, தன் புகழ்பெற்ற லேஸ் மிசரபிள்ஸ் (Les Miserables) என்ற புத்தகத்தில் சொல்வது போல ‘மிகவும் இருண்ட இரவு முடிந்து, சூரியன் கண்டிப்பாக உதித்தே தீரும்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x