Last Updated : 14 Aug, 2017 11:18 AM

 

Published : 14 Aug 2017 11:18 AM
Last Updated : 14 Aug 2017 11:18 AM

அழிவுக்கு வழிவகுக்கிறதா ஏஐ?

டந்த ஆண்டு தொழில்நுட்ப உலகில் அனைவரையும் பிரமிக்கும் வைக்கும் ஒரு நிகழ்வு நடந்தது. தற்போது அதை எல்லோரும் மறந்திருக்க கூடும். ஆனால் தொழில்நுட்ப உலகின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக இதை பார்த்தார்கள். ஆம், இதுவரை மனிதர்களின் அழகை எடைபோட்டு வந்ததை தொழில்நுட்பம் மாற்றியது. பியூட்டி டாட் ஏஜெய் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் அழகி போட்டியை நடத்தியது. ஆனால் இந்த அழகிபோட்டிக்கு நடுவர்கள் யார் என்று கேட்டால் வியப்பாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்களே இந்த அழகிபோட்டிக்கு நடுவர்களாக நியமித்திருந்தார்கள். அதாவது அழகிபோட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றிட வேண்டும்.

பின்பு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்களே உலக அழகிகளை தேர்ந்தெடுக்கும். இந்த அழகி போட்டியில் 6,000 பேர் பங்கேற்றனர். பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த ரோபோக்கள் உலக அழகிகளை தேர்ந்தெடுத்தன. பல்வேறு அளவுகோல்கள் இருந்தபோதிலும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் வெள்ளை நிற பெண்களையே அழகிகளாக தேர்ந்தெடுத்தது. ஒரு கருப்பின பெண்ணை கூட இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கண்டறியவில்லை. ஆனால் இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்படவில்லை.

ஆனால் சமீபத்தில் அமெரிக்காவில் இதேபோல இன்னொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த ஆண்டில் பிரிஷா பார்டன் என்ற கருப்பின பெண் சாலை விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டார். இதே போன்றொரு குற்றத்துக்காக 41-வயது நிரம்பிய வெர்னான் பிரேட்டன் என்ற வெள்ளை நிற பெண்ணும் கைது செய்யப்பட்டார். வெர்னான் பிரேட்டன் ஏற்கெனவே சிறை சென்றவர். இவர்கள் இருவரும் தண்டனைக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ முன்பு நிற்க வைக்கப்பட்ட போது பிரேட்டனை விட பார்டனே அதிக குற்றம் புரிய வாய்ப்பு இருப்பதாக ரோபோ கணித்தது.

ஆனால் ஓர் ஆண்டுக்கு பின்னர் பார்டனை விட பிரேட்டன் அதிக குற்றம் புரிந்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. சிறை தண்டனையும் பெற்றிருக்கிறார் என்பது உறுதியானது. செயற்கை நுண்ணறிவு ரோபோ, குற்றத்தை நிறத்தின் அடிப்படையில் கணித்திருப்பதை சமீபத்தில் கண்டறிந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் நமக்கு மிகப் பெரிய விஷயத்தை உணர்த்துகின்றன. நிறத்தின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் செயல்படுகிறதா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு திறன் என்பது புரோகிராம்கள் மூலம் இயங்குவது. ஒவ்வொரு செயலுக்கு அல்காரிதங்கள் பதிவேற்றப்படுகின்றன. செயற்கையாக நினைவுகளை உணர்வதற்கு உரிய அடிப்படை கூறுகள் அல்காரிதங்களாக எழுதப்பட்டு நினைவூட்டப்படுகின்றன. அதன் அடிப்படையில் பல அளவுகோல்களை வைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தீர்மானமாகிறது. ஆனால் ஒரு குழுவினருக்கு மட்டுமே சார்பாக தீர்மானிப்பது குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. இதேபோன்ற சூழ்நிலையில் செயற்கை தொழில்நுட்பம் வளர வளர சமூகத்தில் ஒரு விதமான பதற்றம் உருவாகும் என்று கூறுகின்றனர் வல்லுநர்கள்.

இந்த இரு சம்பவங்களுக்கு முன்னரும் செய ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகள் நிறைய எழுந்துள்ளன. 2009-ம் ஆண்டு ஹெச்.பி நிறுவனம் தயாரித்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கருப்பினத் தவர்களை அடையாளம் காணமுடியாமல் திணறியது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் கூகுள் அல்காரிதம் கருப்பினத் தவர்களுக்கு கொரில்லா என்று பெயரிட்டது. ஆனால் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதுவாவது பரவாயில்லை நிறப்பிரச்சினைதான். கடந்த வாரத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் நடந்த விஷயம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிர்ச்சியில் மார்க் ஜூகர்பெர்க்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த வாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் நடந்த மற்றொரு சம்பவம் நம்மை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பயனாளிகளுடன் உரையாடுவதற்கு ``சாட்பாட்’’ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ஏஜென்டுகளை ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. கடந்த வாரத்தில் இந்த சாட்பாட்கள் எந்தவித மனித உள்ளீடு இன்றி மனிதர்கள் புரிந்து கொள்ளமுடியாத தனித்துவமான மொழியை உருவாக்கி தங்களுக்குள் பேச ஆரம்பித்ததை ஃபேஸ்புக் நிறுவனம் கண்டறிந்தது. இதை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் செயற்கை நுண்ணறிவு பிரிவு மூடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இந்த சாட்பாட் உலகெங்கிலும் உள்ள கணினிகளை செயலிழக்க செய்யாவிட்டாலும், தனக்கென பிரத்யேக மொழியை உருவாக்கிக் கொண்டது அதிர்ச்சி அளிப்பதாக ஃபேஸ்புக் மென்பொருள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது கண்டுபிடிக்காவிட்டால் உலகம் முழுவதும் உள்ள கணினிகளை இந்த சாட்பாட்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை பார்த்து மார்க் ஜூகர்பெர்க் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்.

ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவை நம்மைவிட அனைத்து வேலைகளையும் சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. அரசு இது குறித்த ஆராய்ச்சிகளில் மூக்கை நுழைத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். விதிகளைப் பலப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஆபத்துதான்.

மார்க் ஜூகர்பெர்க்கு இந்த தொழில்நுட்பம் குறித்து பெரிதாக புரிதல் இல்லை என்று டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். எலன் மஸ்க் மட்டுமல்ல பல தொழில்நுட்ப வல்லுநர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மிகப் பெரிய ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு தொழில்நுட்பம் மனிதனை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும். கணினி, இணையதளம் இப்படி பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். ஆக்கப்பூர்வமான பல கண்டுபிடிப்புகள் உலகை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்மை ஆளப்போகிறது உண்மை. ஆனால் நாம் அதை எப்படி கையாளப் போகிறோம் என்பதில்தான் குழப்பம் நீடித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு ஆக்கமா? அழிவா? பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x