Last Updated : 18 Aug, 2017 10:22 AM

 

Published : 18 Aug 2017 10:22 AM
Last Updated : 18 Aug 2017 10:22 AM

சினிமாலஜி 17: பாட்டுப் புத்தகப் பாணி விமர்சனங்கள்!

மா

லையில் செமத்தியான மழை. சினிமாலஜி மாணவ நண்பர்கள் ஹோட்டலுக்குள் ஒதுங்கினர். சில போண்டாக்களும் மெதுவடைகளும் ஆர்டர் செய்யப்பட்டன. பார்த்தா மொபைலில் ஃபேஸ்புக் மேய்ந்துகொண்டிருந்தான்.

"கொஞ்ச நேரம் எங்களோட பேசேண்டா... எந்த நேரமும் ஃபேஸ்புக்கு" என்று ப்ரியா நொந்துகொண்டாள்.

"'தரமணி', 'விஐபி டூ', 'பொதுவாக எம்மனசு தங்கம்' மூணு படத்துல 'தரமணி' பத்திதான் நிறைய வியூஸ் இருக்கு. அதான் பார்த்துட்டு இருக்கேன்" என்ற பார்த்தாவிடம், "வியூஸா? ரிவ்யூஸா?" என்று கேட்டான் ப்ரேம்.

"படம் பார்க்குற எல்லாருமே க்ரிட்டிக்ஸுன்ற ரேஞ்சுல பதிவு போடுறது எல்லாம் ஓவரு. சினிமா பற்றிய எந்த மேதமையும் இல்லாம இப்படி ஏன் போடுறாங்கன்னு புரியலை" என்று வெகுண்டான் ஜிப்ஸி.

போண்டா ஒன்றைப் பக்குவமாகப் பிய்த்து தேங்காய் சட்னியில் தோய்த்து வாயிலிட்ட பார்த்தா சொன்னது:

"சினிமா பார்க்குற எந்த ரசிகருக்கும் படம் எப்படி இருக்குன்னு சொல்ல உரிமை இருக்கு. 'செம்மயா இருக்கு', 'மொக்கைப் படம்', 'நல்லா இருக்கு', 'நல்லா இல்லை'-ன்னு சொல்றது கருத்து. அதேபோல, தனக்கு எழுதத் தெரியும்ன்றதாலேயே சினிமா குறித்து எழுதுறவங்களும், ரீச் அதிகம் போகும்னு படம் குறித்து விரிவா எழுதுறவங்களும் செய்றதை விமர்சனம்னு நாம பார்க்குறதே தப்பு. அதெல்லாம் வெறும் கருத்துகள், பார்வைகள்ன்ற ரேஞ்சுல மட்டும் பாக்கணும்.

இதெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்துதான்னு கேட்டா, ஆமாம்னு தான் சொல்வேன். சமூக வலைத்தளங்களில் புதுப் படங்கள் குறித்த கருத்துகளும் பார்வைகளும்தான் மக்களோட குரலா இருக்கு. ஸ்டார் வேல்யூவோட வெளிவந்த எத்தனையோ மொக்கைப் படங்களைக் கவுத்துருக்கு. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத நல்ல படங்களைக் கைதூக்கிவிட்டுருக்கு. இப்ப வெளிவந்த மூணு முக்கியப் படங்களில் 'தரமணி' பத்தி அதிகம் பேசப்படுறதுக்கும் இதெல்லாம்தான் காரணம்."

பார்த்தாவின் பார்வையில் திருப்தி கொள்ளாத கவிதா, "சோஷியல் மீடியாவுலயும் நான் நிறைய விமர்சகர்களை ஃபாலோ பண்றேன். அவங்களை எல்லாம் நீ வெறும் கருத்தாளர்கள்னு சொல்றதை ஏத்துக்க மாட்டேன்" என்று கொந்தளித்தாள்.

"ஆமா, சிலர் ரொம்ப நல்லாவே விமர்சனம் பண்றாங்க. ஆனா, அதில் மிகச் சிலரின் நோக்கம், கவன ஈர்ப்பு மட்டும்தான் முக்கியமா இருக்கு. எல்லாத் தரப்பும் கொண்டாடுற உருப்படியான படங்களில் பிரச்சினைகளை நோண்டியே விவாதப் பொருளா மாத்துறாங்க. இன்னும் சிலரோ விசு வகையறா படமா இருந்தாலும் ஈரான் படம்னா இளிக்கிறாங்க; உள்ளூர்ல செம்மயா படத்தை எடுத்தால் கிராமர் மிஸ்டேக்னு லிஸ்டு போட்டு ஆபரேஷன் பண்ணி, ஃபாலோயர்ஸ் எனப்படும் பேஷண்ட் எண்ணிக்கையை கூட்டிக்கிறாங்க.

ஆனாலும், மெயின் ஸ்ட்ரீம் மீடியாவைவிட பெட்டரா ரிவ்யூ பண்ணக் கூடியவங்க சோஷியல் மீடியாவுல இருக்குறாங்கன்றதுதான் ஆறுதலான விஷயம். சில சினிமா சார்ந்த ஃபேஸ்புக் குழுக்கள் ரொம்ப தீவிரமாவே சினிமாவை அணுகுறாங்க" என்றான் பார்த்தா.

"ஃபேஸ்புக், ட்விட்டர்ல வர்ற சினிமா பார்வைக்கு இப்போதைக்குப் பெரிய லெவல்ல மதிப்பு இருக்கு. ஆனா, எனக்குத் தெரிஞ்சு சிலர் பெய்டு ரிவ்யூ - பெய்டு புரொமோஷன்லாம் பண்றதைப் பார்க்கும்போது எரிச்சலா இருக்கு. சினிமா சார்ந்த தகவல்களைப் போட்டுப் போட்டே ட்விட்டர்ல ஆயிரக்கணக்கான ஃபாலோயர்ஸைச் சேர்த்துக்க வேண்டியது. அதை மூலதனமா வெச்சே புதுப் படங்களை ப்ரொமோட் பண்றாங்க. போலியான விமர்சனம் போட்டும் காசு பாக்குறாங்க. இது எங்க போய் முடியுமோ?" என்று அலுத்துக்கொண்டான் ரகு.

"என்னதான் ஆனாலும் என்னதான் பண்ணினாலும் சோஷியல் மீடியாவில் நேர்மையும் உண்மையும்தான் ஜெயிக்கும். எல்லாத்துலயும் இருக்குற மாதிரி இங்கேயேயும் இருட்டான பக்கங்கள் இருக்கு. அவ்ளோதான்" என்று தத்துவ லாஜிக் உதிர்த்தான் மூர்த்தி.

"யூடியூப்ல லட்சக்கணக்குல வியூஸ் வர்ற சினிமா விமர்சனங்களைப் பார்க்க முடியுதே. அந்த வியூஸுக்கு எல்லாம் காரணம் ரிவ்யூவோட தரம்தானா?" என்று அப்பாவியாக கேட்டாள் மேனகா.

"ஹா ஹா... அது ஆன்லைன் மீடியா நம்பர் கேம். அல்கரித அவலம். யூடியூப் சேனல்ல யாரு முதல்ல துண்டு போட்டுட்டு சேனல் நடத்துறாங்களோ அவங்களை டீஃபால்டாவே யூடியூபும் கூகுளும் தேடல்களில் முதன்மைப்படுத்தும். வியூஸ் ஆட்டோமேட்டிக்கா அதிகம் கிடைக்கும். ஒருத்தர் முன்னாடியே இடம் போட்டு வெச்சுட்டாருன்றதாலேயே அவர் எக்ஸ்பர்ட்டா ஆக முடியாதுல்ல. சோ, வியூஸை பேஸ் பண்ணி யூடியூப் விமர்சனத்தோட தரத்தை நிர்ணயிக்குறது முட்டாள்தனம்" என்றாள் ப்ரியா.

"சரி, என்னதான் இப்ப அவசியம்?" என்று அழுத்தமாகக் கேட்டாள் கீர்த்தி.

"போன வாரம் நமக்கு இயக்குநர் ராம் க்ளாஸ் எடுக்க வந்தார்ல, அப்ப அவர்கிட்ட தனியா கொஞ்சம் பேசினேன். அப்ப அவர் சொன்ன மேட்டர் இதுக்குப் பதிலா இருக்கும்னு நினைக்கிறேன். ‘மெயின் ஸ்ட்ரீம்’ மீடியா விமர்சனம், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாறும். பெரிய ஹிட்டான படத்தை இன்னிக்கு வரைக்கும் எந்த மெயின் ஸ்ட்ரீம் மீடியாவும் நல்ல படம் இல்லை-ன்னு எழுதலை. ஆனால், சீரியஸ் லிட்டரேச்சர்ல எழுதுறதுதான் கொடுமையா இருக்கு. விமர்சனத்தை விட ஃபிலிம் அப்ரிசியேஷன்தான் சினிமாவுக்கு முக்கியம்.

எது சரி, எது தப்புன்னு விவாதத்தையும் உரையாடலையும் கொண்டிருக்கிற ஃபிலிம் அப்ரிசியேஷன் என்ற ஒன்றே இல்லாதது தமிழ் சினிமாவின் நிஜமான சாபக்கேடு. ஃபிலிம் மேக்கிங் மாதிரியே ஃபிலிம் அப்ரிசியேஷனும் ஒரு ஆர்ட். அது உருவாகணும். வளரணும்'னு சொன்னார். எனக்கும் அதேதான் தோணுது. திரைப்படத் திறனாய்வுக் கூட்டங்கள் நிறைய நடக்கணும். நிறைய விவாதிக்கணும். இதுதான் ரசனை மேம்படவும், நல்ல படைப்புகளை அடையாளம் காணவும் உதவும்" என்றான் ரகு.

"நீ சொல்றது ஓகே. முன்னெல்லாம் பாட்டு புக்கு நிறைய வரும். அதோட முதல் பக்கத்துல கதையை முழுசா எழுதிட்டு, கடைசி லைன்ல 'இது நடந்துச்சா இல்லையான்றதுதான் கதை'-ன்னு முடிச்சிருப்பாங்க. அப்படித்தான் இன்னைக்கும் நிறைய விமர்சனங்கள் வருது" என்றாள் மேனகா.

"அந்தப் பாட்டுப் புக் கதைச் சுருக்கத்தோட, ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது; இசை ரசிக்கும்படி இருந்தது; இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்-ன்ற மாதிரி சில வாக்கியங்கள் சேர்த்தால் அதுதான் இன்றைய பெரும்பாலான மெயின் ஸ்ட்ரீம் மீடியாவின் விமர்சன டெம்ப்ளேட்" என்றாள் ப்ரியா.

"ஆமா, தமிழில் மிகச் சில மெயின் ஸ்ட்ரீம் பத்திரிகைகள்தான் உருப்படியா சினிமா விமர்சனம் பண்ண ட்ரை பண்றாங்க. சினிமா தகவல்களையும், பேட்டிகளையும் எடுக்குற சினிமா ரிப்போர்ட்டர்களை விமர்சனம் எழுதச் சொன்னா இப்படித்தான் இருக்கும். ஃபிலிம் க்ரிட்டிக்குக்கும் ஃபிலிம் ரிப்போர்ட்டருக்கும் உள்ள வித்தியாசத்தை உணரணும். ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் மூலமா விமர்சனம் வரணும். அதுவரைக்கும் நமக்கு பாட்டு புக் விமர்சனம்தான் அதிகம் வரும்" என்று கூறிய பார்த்தா இன்னொரு பிளாக் டீ ஆர்டர் செய்தான்.

தொடர்புக்கு siravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x