Last Updated : 29 Jul, 2017 11:51 AM

 

Published : 29 Jul 2017 11:51 AM
Last Updated : 29 Jul 2017 11:51 AM

விதவிதமான காபி மேசைகள்!

வீ

ட்டில் அதிகமான நேரத்தை வரவேற்பறையில்தான் நாம் செலவிடுகிறோம். விருந்தாளிகளுடன் அமர்ந்து பேசுவதற்கு, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு, வாரயிறுதிகளில் ஓய்வெடுப்பதற்கு எனப் பலவகைகளில் வரவேற்பறையைப் பயன்படுத்துகிறோம்.

அதனால், வரவேற்பறையின் மையத்திலிருக்கும் காபி மேசை அலங்கரிப்பதற்கு இயல்பாகவே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். காபி மேசையின் மீது வைக்கப்படும் பொருட்களை வைத்தே வரவேற்பறையின் தோற்றத்தை விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.

வரவேற்பறையில் நுழைந்தவுடன் காபி மேசை, சோஃபா என்ற இரண்டு விஷயங்கள்தான் கவனத்தை ஈர்க்கும். காபி மேசை அறையின் மையத்தில் அமைந்திருப்பதால் அதைக் கூடுதல் கவனம் செலுத்தி அலங்கரிப்பது அவசியமாகிறது. காபி மேசையை அலங்கரிப்பதற்கான ஆலோசனைகள்...

காதல் காபி மேசை அலங்காரம்

இந்த அலங்காரம் மரத்தாலான மேசைகள், மென்மையான வண்ணங்களைக் கொண்ட மேசைகளுக்குப் பொருந்தும். மெழுகுவர்த்திகள், மெழுகுவர்த்தி பிடிப்பான்களை விதவிதமான வடிவங்களிலும் அளவுகளிலும் பயன்படுத்தலாம்.

‘நார்டிக்’ காபி மேசை அலங்காரம்

‘நார்டிக்’ பாணி காபி மேசை அலங்காரத்தில் நவீன காபி மேசைகள், குறைவான பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இந்த காபி மேசையில் மூன்றிலிருந்து ஆறு நவீன அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தலாம். மேசையை அலங்கரிக்க கறுப்பு, வெள்ளை, சாம்பல், மரம் போன்ற நிறங்களை உபயோகிக்கலாம். மேசையின்மீது பூக்கள், சிறிய செடிகள் போன்றவற்றை வைக்கலாம். அடர்த்தியான வண்ண அட்டைகளையும் பெரிய எழுத்துகளையும் கொண்ட புத்தகங்களை காபி மேசைமீது வைக்கலாம்.

தங்க நிற காபி மேசை அலங்காரம்

தங்க நிறத்தில் காபி மேசையை அலங்கரிக்கும்போது வரவேற்பறையின் தோற்றத்தையே அது மாற்றிவிடும். தங்க நிறக் கால்களைக் கொண்ட காபி மேசைகளை வாங்கலாம். அதன் மேற்பகுதி வெள்ளை, பளிங்கு அல்லது கண்ணாடியில் அமைந்திருப்பது பொருத்தமாக இருக்கும். ஒன்றிலிருந்து மூன்று தங்க நிறத்தாலான பொருட்களை வைத்து இந்த மேசையை அலங்கரிக்கலாம். மெல்லிய மெழுகுவர்த்திகள், வண்ண மலர்களையும் இந்த காபி மேசையின்மீது வைத்து அலங்கரிக்கலாம்.

‘போஹோ’ காபி மேசை அலங்காரம்

வண்ணங்கள், பேட்டர்ன்களைச் சுதந்திரமாகப் பயன்படுத்துவது ‘போஹோ’ பாணியிலான நாடோடி அலங்காரம். இந்த அலங்காரத்தில் காபி மேசையைப் பல வண்ணங்களையும் கலந்து அலங்கரிக்கலாம். வண்ணங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதனால் அலங்காரத்தை மேலும் சிறப்பானதாக மாற்றலாம். அலங்கரிக்க பெரிய செடிகளையும் பயன்படுத்தலாம். ‘மிக்ஸ் அண்ட் மேட்ச்’ பாணி இந்த அலங்காரத்துக்குப் பொருத்தமாக இருக்கும்.

பாரம்பரிய காபி மேசை அலங்காரம்

மரம், உலோகம் என இரண்டிலும் பாரம்பரியமான காபி மேசையை உருவாக்கலாம். மரம், உலோகத்தில் நேர்கோடுகள் இருக்கும் மேசைகளை இந்த அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம். உலோகம், இரும்பு என இரண்டு வகையான அலங்காரப் பொருட்களை இந்த மேசையில் வைக்கலாம். செடிகள், வண்ணப் புத்தகங்களை இந்த அலங்காரத்திலும் பயன்படுத்தலாம்.

நவீன காபி மேசை அலங்காரத்தில் எளிமையான அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தலாம். சாம்பல், பச்சை போன்ற நிறங்களை இந்த காபி மேசைக்குப் பயன்படுத்தலாம். சிறிய செடிகளையும் வித்தியாசமான உயரத்தில் இருக்கும் அலங்காரப் பொருட்களை இதற்குப் பயன்படுத்தலாம்.

தாமிர காபி மேசை அலங்காரம்

தங்கத்தைப் போலவே தாமிரமும் இப்போது பிரபலமான வீட்டு அலங்காரப் பொருளாக மாறியிருக்கிறது. மரம், கண்ணாடி, வெள்ளை என எல்லாவகையான காபி மேசைகளிலும் தாமிர அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தலாம். தாமிரத்துடன் வெள்ளை நிறத்தை இணைத்துப் பயன்படுத்தும்போது கூடுதல் பொலிவைத் தரும். மெழுகுவர்த்திப் பிடிப்பான்கள், பூஞ்சாடிகள், கிண்ணங்கள், தட்டுகள் என காபி மேசையில் பயன்படுத்தும் அனைத்திலும் தாமிரத்தைப் பயன்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x