Published : 20 Aug 2017 13:56 pm

Updated : 20 Aug 2017 14:05 pm

 

Published : 20 Aug 2017 01:56 PM
Last Updated : 20 Aug 2017 02:05 PM

முகம் நூறு: சென்னை சூடிய ஆபரணங்கள்

ஒரு மாநகரத்தின் அடையாளம் என்பது கட்டிடங்களும் நெடுஞ்சாலைகளும் அது பெற்றிருக்கும் வசதிகளும் மட்டுமல்ல; அதன் அகம், பண்பாடு, தனித்துவம் ஆகியவற்றுக்கு உருவம் கொடுக்கும் கலைஞர்களும்கூட. அப்படிச் சென்னையை அலங்கரித்த கலைஞர்கள் பாலசரஸ்வதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, சந்திரலேகா உள்ளிட்டோர். இசையிலும் நடனத்திலும் அவர்கள் ஏற்படுத்திய உத்வேகமும் கொண்டிருந்த கனவுகளும் சென்னையின் கலாச்சார அடையாளத்தை உலக வரைபடத்தில் நிறுவியவை.

பரதத்தை உயிர்ப்பித்த பாலசரஸ்வதி


பாரம்பரியக் கலைஞர்களுக்கு மரபாக இருந்துவந்த புரவலர்களின் ஆதரவு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குறையத் தொடங்கியது. இத்தகைய சூழலில் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குக் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்த இசை, நடனக் கலைஞர்களின் குடும்பங்களில் பாலசரஸ்வதியின் எள்ளுப்பாட்டி காமாட்சி அம்மாவின் குடும்பமும் ஒன்று. காமாட்சி அம்மாவின் பேத்தியும் பாலசரஸ்வதியின் பாட்டியுமான வீணை இசைக்கலைஞர் தனம்மாளோடு ஜார்ஜ் டவுன் ராமகிருஷ்ணா தெருவிலுள்ள இல்லத்தில் பாலசரஸ்வதியின் பால்யம் கழிந்தது. அந்த வீட்டின் மாத வாடகை அப்போது ஏழு ரூபாய். 1918-ல் பிறந்த பாலசரஸ்வதியின் பால்யத்தோடுதான் சென்னையும் ஒரு மாநகருக்கான லட்சணங்களைப் பெற ஆரம்பித்தது.

பாலசரஸ்வதி பிறந்தபோது சென்னைக்கு மின்சாரம் வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. தேசியச் செய்தித்தாள்கள், கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள், அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட்ட காலம் அது. குழந்தைப் பருவத்தின் இயல்பான மகிழ்ச்சியை இழந்து ஏழு வயதிலேயே நாளின் பெரும்பகுதியை இசை, நாட்டியம் சார்ந்த கடுமை மிகுந்த பயிற்சியில் கழித்தவர் பாலா. மதியவேளையில் குட்டித்தூக்கம் போட்டால்கூடப் பாட்டி தனம்மாள் திட்டுவார்.

இந்த பாலசரஸ்வதிதான் 20-ம் நூற்றாண்டில் பாரம்பரியமாக நடனமாடுபவர்கள் மீது தவறான கற்பிதம் நிலவிய காலகட்டத்தில், பொது இடங்களில் நடனமாடுவதற்கே தடை இருந்த காலத்தில் பரத நாட்டியத்தின் சம்பிரதாயத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குப் பங்களித்த மேதையாக ஆனார். தனது 20 வயதுகளில் ஆடுவதற்கான மேடைகள் குறைவாகக் கிடைத்த சூழலிலும் இந்தியா அறிந்த நடனக்கலைஞராகத் திகழ்ந்தவர். சிறுவயதிலேயே ரவீந்திரநாத் தாகூரின் முன்னிலையில், தேசிய கீதமாக ஆகப்போகும் ஜனகனமணவுக்கு நடனம் ஆடிய பெருமை இவருக்குண்டு.

பத்திரிகைகளிலும் சமூகத்திலும் பரத நாட்டியம் எதிர்ப்பைச் சந்தித்துவந்த நிலையில், தொடர்ந்து நடனத்தை எதிர்த்து எழுதிவந்த கல்கியையும் ரசிகமணி டிகேசியையும் பாலாவின் நடனம்தான் பரதத்தின் ஆதரவாளராக்கியது. பாலாவின் நடனம் இருக்கட்டும், அவரது நடையே அத்தனை அபிநயங்கள் கொண்டது என்று வியந்துள்ளார் ரசிகமணி.

40 வயதுகளில் உலகப்புகழ் பெற்ற பாலசரஸ்வதிக்கும் சென்னையின் மியூசிக் அகாடமிக்கும் இடையிலான உறவு ஆத்மார்த்தமானது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாலா, ஒரு தாயாகவும் குருவாகவும் இருந்து பலருக்கும் நாட்டியப் பயிற்சியை வழங்கிய இடம் அது. பாலாவின் வாழ்விலும் கலையிலும் துணையாக இருந்த ஆர். கே. சண்முகம் செட்டி விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்.

20CHLRD_CHANDRALEKHA.1சந்திரலேகாright

1960-களிலிருந்து பாலசரஸ்வதி வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் தொடங்கினார். அவரது அபிநய பாணி, மொழிகளைக் கடந்து மேற்கத்தியப் பார்வையாளர்களை ஈர்த்தது. ஒரு மின்னல்வெட்டும் கணத்தில் ராதையாகவும் கோபிகைகளாகவும் மேடையில் மாற முடியும். பறவைகள் விலங்குகளை அரூபமாக உருவாக்க முடியும்.

தைராய்டு பாதிப்பால் பருமனாகிவிட்ட உடலை, ஆடத் தொடங்கும் சில நொடிகளில் பார்வையாளர்களிடமிருந்து மறைத்துவிடக் கூடிய ஆற்றலுடைய பாலசரஸ்வதியின் நடனங்கள் எவையுமே படமாகப் பதிவாகவில்லை. சத்யஜித்ராயின் ஆவணப்படம் மட்டுமே விதிவிலக்கு.

“தனம்மாள் எங்களை உட்காரவே விட மாட்டார். எப்போதும் பயிற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை எதிர்கொள்ள வேண்டிய தேர்வைப் போன்றதல்ல அது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் சோதிக்கப்படுவார். ஒவ்வொரு நாளும் தேர்வில் தேறியாக வேண்டும். இந்தப் பாடத்தை அவர் எல்லோருக்கும் புரியவைத்தார். சோம்பேறித்தனத்துக்குத் துளியும் இடமில்லை. பகல் பொழுதில் யாரும் படுக்கவே முடியாது. கலையில் முன்னேற்றம் காண வேண்டுமானால் உடல் ரீதியான சொகுசுகளைத் தியாகம் செய்தாக வேண்டும் என்பது அவரது கறாரான அறிவுரை.

சென்னையைத் தேடி வந்தமர்ந்த விடுதலைப் பறவை

நடனக் கலைஞர், நடன வடிவமைப்பாளர், கவிஞர், ஓவியர், பெண்ணியவாதி எனப் பல பரிமாணங்களைக் கொண்ட சந்திரலேகாவின் நினைவும் அவர் உருவாக்கிய மரபும் சென்னையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு இன்னமும் உந்துதல் அளிக்கக்கூடியவை. மகாராஷ்டிரத்தில் உள்ள சிறுநகரான வாடாவைச் சேர்ந்த மருத்துவரின் மகளான சந்திரலேகா தனது எதிர்காலம் கலை தொடர்புடையது என்று முடிவு செய்து வழக்கறிஞர் படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு, 1950-களில் தனியாகச் சென்னையில் குடியேறியவர்.

சந்திரலேகா சென்னைக்கு வந்த காலத்தில் ஜெமினி பாலம் தற்போது இருக்கும் இடத்தில் வயல்களும் சுமைதாங்கிக் கற்களும் இருந்துள்ளன. காஞ்சிபுரம் எல்லப்ப பிள்ளையிடம் முறையாக நடனம் பயின்றார். பாலசரஸ்வதி, ருக்மணி அருண்டேல் இருவரும் இளம்வயது சந்திரலேகாவின் கலை வாழ்வுக்கு ஆற்றுப்படுத்தியவர்கள். தனது நடனத்தின் கரைகளைச் செம்மைப்படுத்தியவர் பாலாதான் என்று சந்திரலேகா நினைவுகூர்ந்திருக்கிறார். பாரம்பரிய நடனத்துக்கும் சமகாலத்துக்குமிடையேயான இடைவெளியையும் தொடர்பின்மையையும் உணர்ந்த சந்திரலேகா மரபான அழகியலை மீறிப் புதிய நடன வடிவங்களைப் பரிசோதிக்கத் தொடங்கினார்.

‘மனித உடலின் கொண்டாட்டம்’ என்று தனது நடனங்களை நினைவுகூர்ந்த சந்திரலேகா, உடலுக்கும் இயற்கைக்கும் மரபுக்கும் கலைகளுக்கும் இடையிலான உறவைப் பரிசீலித்தவர். களரி போன்ற பாரம்பரியச் சண்டைக்கலை வடிவங்களையும் தனது நடனத்தில் சேர்த்துக்கொண்டார். அங்கீகா, லீலாவதி, ப்ராணா, ஸ்ரீ, சரீரா போன்ற இவரது நடனத் தயாரிப்புகள் காமத்துக்கும் ஆன்மிகத்துக்குமிடையிலான உறவை ஆராய்ந்தவை. பெசண்ட் நகரில் எலியட்ஸ் பீச் சாலையில் இவர் வாழ்ந்த வீடும் அதன் சுற்றுப்புறமும் ஒரு புராதன வனத்தையும் அதிலுள்ள ஆலயத்தையும் நினைவுபடுத்தக்கூடியவை. அங்கு நிற்கும் 70-க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் இவர் கைபட்டு வளர்ந்தவை.

அவர் செய்த அத்தனை சாதனைகளையும்விட வேப்ப மரங்களை நட்டு வளர்த்ததைத்தான் தன் சாதனையாக நினைவுகூர்ந்தவர். உலகப்புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ஹென்றி கார்ட்டியர் ப்ரெஸ்ஸான், ஓவியர் தசரத் பட்டேல் எனப் பெருங்கலைஞர்கள் வரும் இடமாகத் திகழ்ந்த சந்திரலேகாவின் வீட்டில் அவரே நாடக சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவாக்கிய ஸ்பேசஸ் நாடகக் கூடங்கள் இரண்டு இன்றைக்கும் முக்கியமான கலைஞர்களின் நிகழ்த்து தளமாகத் திகழ்கின்றன.

“மெட்ராஸில் எனது காலைகள் சீக்கிரமே தொடங்கிவிடும். விடியலின் முதல் கீற்றை நான் ஜன்னலிலிருந்து பார்ப்பேன். மக்கள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருப்பார்கள். செருப்பணிந்தவர்களும் உண்டு. செருப்பே இல்லாதவர்களும் உண்டு. நான் அன்றாட வாழ்க்கையோடு நிலைத்த ஈடுபாட்டை வைத்திருப்பவள். சென்ற வாரம் காலையில் எங்கள் வீட்டின் வாசலில் ஒரு பசு உறைந்து நின்று கொண்டிருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.

அதன் பக்கத்தில் ஒரு கார். பசுவும் அசையவில்லை. காரும் அசையவில்லை. இரண்டும் சிலைபோல நின்றன. நான் பல நிமிடங்கள் இரண்டையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த உறைதலில் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தோன்றியது”.

சென்னைக்கு வந்த மீரா

மதுரையில் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, இசைத்தட்டில் தனது பாடலைப் பதிவுசெய்து வெளியிட்டபோது அவருக்கு வயது பத்து. மகாமகம் திருவிழாவில் 16 வயதில் மேடையேறிய சுப்புலட்சுமி தனது இருபதாவது வயதில் 1936-ம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அதே ஆண்டில் ‘சேவாசதன்’ வழியாகத் திரைப்பட நடிகையாகவும் அறிமுகமானார்.

அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் உடல்நிலை காரணமாக வரமுடியாத நிலையில் சென்னை மியூசிக் அகாடமியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி தனது முதல் கச்சேரியை நடத்தினார். அந்தக் கச்சேரிக்கு வந்திருந்த மூத்த சாதனையாளர்களான செம்பை வைத்தியநாத பாகவதர், டைகர் வரதாச்சாரியார் ஆகியோர் இவரது திறனைப் புகழ்ந்தனர்.

20CHLRD_M.S.SUBU

‘குழந்தே, நீ வீணையைத் தொண்டையில் வைத்திருக்கிறாய்’என்று புகழ்ந்திருக்கிறார் காரைக்குடி சாம்பசிவ அய்யர். கல்கியின் நண்பர் சதாசிவம் தயாரித்து எல்லீஸ் டங்கன் இயக்கிய ‘சகுந்தலை’ திரைப்படம் பெற்ற வெற்றி எம்.எஸ். சுப்புலட்சுமியைச் சென்னையில் நிலைநிறுத்தியது. தயாரிப்பாளர் சதாசிவம் வாழ்க்கைத் துணைவரானார். 1945-ல் எம் எஸ் நடித்து வெளியான ‘மீரா’, இன்று வரை நினைவுகூரப்படும் கிளாசிக்காக உள்ளது.

வட இந்திய மக்களின் பிரியத்துக்குரியவராக இவரை மாற்றியது மீராவின் இந்தி வடிவம். இந்தப் படத்தின் முதல் திரையிடலுக்கு முன்னுரை வழங்கியவர் சரோஜினி நாயுடு. லார்ட் மவுண்ட் பேட்டனும் லேடி மவுண்ட் பேட்டனும் பிரதமர் நேருவும் அமைச்சர்களும் அந்த முதல் திரையிடலைக் கண்டுகளித்தனர். பக்த மீராவுக்குப் பிறகு ஏற்பட்ட புகழின் உச்சத்தில் திரையுலக வாழ்வுக்கு முடிவுரை எழுதினார்.

காந்தியடிகளுக்குப் பிடித்த பாடகி இவர். கல்கி சதாசிவம், எம். எஸ். தம்பதியினர் வசித்த கல்கி கார்டன்ஸ் வீடு முன்னர் ஸ்லேடன் கார்டன்ஸ் என்ற பெயரில் புகழ்பெற்றிருந்தது. அதன் உரிமையாளர் பிரிட்டிஷ் அதிகாரி ஸ்லேடன். கீழ்ப்பாக்கத்தில் சதாசிவம் எம்.எஸ். தம்பதியினர் வாழ்ந்த கல்கி கார்டன் இல்லம் நண்பர்களுக்கும் கலைஞர்களுக்கும் திறந்த வீடாக இருந்தது. அங்குதான் கல்கி பத்திரிகை அலுவலகமும் அச்சகமும் செயல்பட்டுவந்தது. மதிய உணவுக்குக் குறைந்தபட்சம் 40 விருந்தினர்களாவது அங்கே இருப்பார்கள். நாள் முழுக்க நான்கு சமையல் கலைஞர்கள் பணியிலிருக்க, அணையாத அடுப்பங்கரையாக அவர்கள் சமையலறை விளங்கியது. ராஜாஜி, இங்கு அடிக்கடி வரும் விருந்தினர்.

அவரது ஸ்வராஜ்யா பத்திரிகை இங்கேதான் தொடங்கப்பட்டது. சங்கீத கலாநிதி, பத்மவிபூஷன், மகசசே விருது தொடங்கி பாரத் ரத்னா வரை பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமி தனது பெரும்பாலான கச்சேரிகளைப் பல்வேறு சமூகக் காரியங்களுக்காக நிதிதிரட்டல் நிகழ்ச்சிகளாகச் செய்திருக்கிறார். இந்தியப் பெண்மையின் உயரிய அடையாளமாகத் திகழ்பவர். குடும்பப் பின்னணி தொடர்பாக ஒதுக்கல் நிலவிய சமூகச்சூழலில் பாலினப் பாகுபாடும் அதிகமாக இருந்த நிலையில் 16 வயதில் சென்னைக்குத் தனியாக வந்து தனது குரலாலும் அர்ப்பணிப்பாலும் எளியவர்களையும் மகத்தான தலைவர்களையும் ஒருங்கே ஈர்த்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் முகத்தை சென்னை என்றும் மறக்காது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

the-hundred

இனி செஞ்சுரிதான்!

இணைப்பிதழ்கள்
weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

milkha-singh

ஓடு மில்கா ஓடு

கருத்துப் பேழை
x