Last Updated : 05 Aug, 2017 11:10 AM

 

Published : 05 Aug 2017 11:10 AM
Last Updated : 05 Aug 2017 11:10 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 44: சங்கிலித் தொடர் பண்ணை

ண்ணைக் கூறுகள் அல்லது அமைப்புகள் சீராக இணைக்கப்படுவதன் அவசியம் குறித்துப் பார்த்தோம்: அதன் பல்வேறு கூறுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்:

வாழிடம்

முதல் கட்டுமான அமைப்பு வீடு அல்லது இருப்பிடம் என்று எடுத்துக்கொண்டால், அதற்கான தேவைகளாக உணவு, விறகு, விளக்கு, படுக்கை, அடுக்களை முதலியவையும், பூச்சிகள் (பண்ணையில் பூச்சிகளுக்குப் பஞ்சமிருக்காது), பாம்புகள் போன்ற தொல்லை தரும் உயிரினங்கள் வராமல் இருப்பதற்கான தடுப்புகள் என்கிற அடிப்படையான தேவைகளும் உள்ளன.

வீட்டில் வீணாகும் உணவைக் கோழிகளுக்குக் கொடுப்பதாக வைத்துக்கொண்டால் அருகே கோழிக் கொட்டகை இருக்க வேண்டும். சமைப்பதற்கு நமக்குக் காய்கறிகள் வேண்டுமானால், அருகே காய்கறிப் பாத்திகள் இருக்க வேண்டும்.

மாட்டுக் கொட்டகை

தீவனம், நீர், மழை பெய்தால் ஒழுகாமல் இருக்கும் பாதுகாப்பு, நோய்த் தடுப்பு ஏற்பாடு போன்றவை மாடுகளுக்குத் தேவைப்படும். கோமயம் எனப்படும் மாட்டு மோள், சாணம் ஆகியவை முறையாக மட்கச் செய்யப்பட வேண்டுமாதலால், மட்குப் படுகை அருகே அமைய வேண்டும். சாண எரிவாயுக் கலனை மாட்டுக் கொட்டகை அருகே அமைக்க வேண்டும்.

பழத்தோட்டம்

பாசன வசதி, உரம், களைக் கட்டுப்பாடு, பூச்சிக் கட்டுப்பாடு போன்ற தேவைகள் இருக்கும். கோழிகள் மிகச் சிறப்பாகப் பூச்சிக் கட்டுப்பாட்டு வேலையைச் செய்யும். எனவே, பழத்தோட்டத்தின் அருகே கோழிக் கொட்டகையை அமைக்கலாம்.

மரக்கா : கட்டுமான மரங்கள் இருக்கும் பகுதிக்குச் சிறிய அளவு பாசனம், தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு, பூச்சிக் கட்டுப்பாடு, களைக் கட்டுப்பாடு போன்ற தேவைகள் இருக்கும். செம்மறி ஆடுகளுடன் இந்த இடத்தை இணைக்க முடியும். ஆனால் , வெள்ளாடுகளை இணைக்கக் கூடாது. அவை மரப்பட்டைகளை உரித்துவிடும், இதனால் மரம் முற்றிலும் காய்ந்துவிடுவதற்கான சாத்தியம் உண்டு. எனவே, கவனம் தேவை.

நெல் வயல்

பாசன வசதி, வடிகால், வாய்க்கால் வசதி தேவை. உழவு தேவைப்படும். இந்த இடம் பள்ளமான இடமாக இருக்கலாம். அப்போது, பருவகால மழையை வைத்துக்கொண்டே சாகுபடி செய்ய முடியும். அதிகமான நீரை வடித்துவிட வசதியாக இந்த வயல் குளத்துக்கு அருகே அமைக்கப்பட வேண்டும்.

மீன் குட்டை

நெல் வயலுக்கு அருகில் அமைய வேண்டும். மீனுக்கான உணவாக மண்புழுக்கள் மட்குப் படுகையில் இருந்து கிடைக்கும். அதற்கேற்ப அமைக்க வேண்டும்.

தொடராக இணைப்பது

இப்படியாக ஒன்றுடன் ஒன்று ஒரு சங்கிலித் தொடர் போன்ற அமைப்புகளை ஒரு தாளாண்மைப் பண்ணையத்தில் அமைத்தால், அவை விரைவில் தற்சார்புடன் இயங்கத் தொடங்கும், வேலைப் பளுவும் படிப்படியாகக் குறையும்.

இந்தச் சீரிணைக்கும் முறையை ஒரு செயல்முறைப் பயிற்சியாகவும் செய்து பார்க்கலாம். சில இணைப்புச் சொற்களைக்கொண்டு இந்தப் பயிற்சியைப் பண்ணை வடிவமைப்பில் செய்து பார்க்கலாம்.

அடிப்படையாக ஒரு சிறிய பண்ணையில் இருக்கக்கூடியவையான தீவனம் (பச்சை, உலர்), மாடுகள், ஆடுகள், கோழிகள், மீன் குளம், தேனீ, காய்கறிப் பாத்தி, பழத்தோட்டம், மரக்கா, மட்குப் படுகை, மண்புழுப் படுகை, நெல் வயல், சிறுதானியக் கொல்லை, அசோலாத் தொட்டி, சாண எரிவாயுக் கலன், வீடு, மூங்கில் குத்துகள், வாழைப் பாத்திகள், காளான் கொட்டகை, மூலிகைப் பாத்திகள், பூச்செடிப் பாத்திகள் முதலியவை.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x