Last Updated : 28 Aug, 2017 10:24 AM

 

Published : 28 Aug 2017 10:24 AM
Last Updated : 28 Aug 2017 10:24 AM

இந்தியாவை அச்சுறுத்தும் எலெக்ட்ரானிக் கழிவுகள்

உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப உலகம் நம்மை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 7 வெளியானதுமே அதை வாங்குவதற்கு துடித்த மனங்கள் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ஐபோன் 8-ஐ வாங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்றன. வந்ததும் எளிதாக 7ஐ தூக்கிபோட்டுவிட்டு ஐபோன் 8க்கு பழகிவிடுவோம். ஐபோனுக்கு மட்டுமல்ல.

எலெக்ட்ரானிக் சந்தைகளில் எந்த கேட்ஜெட்டுகள் சில தொழில்நுட்ப மாறுதல்களுடன் கவர்ச்சிகரமாக வந்துவிட்டால் நமது மனது அதை வாங்கியே தீர வேண்டும் என்று மனநிலைக்கு மாறி வருகிறது. பழைய கேட்ஜெட்டுகளை, எலெக்ட்ரானிக் பொருட்களை குப்பையில் போட்டுவிடுவதுடன் நமது வேலை முடிந்துவிடுகிறது. ஆனால் இந்த பழைய எலெக்ட்ரானிக் கழிவுகள் எங்கே கொட்டப்படுகிறது. அதனால் சூழலியலிலில் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. எப்படி கையாளப்போகிறோம் என்பது குறித்து நாம் ஒருநாளும் யோசித்தது கிடையாது. ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் எலெக்ட்ரானிக் கழிவுகளை சரியாக இந்தியா கையாளவிட்டால் மிகப் பெரிய சூழலியல் பாதிப்புகள் ஏற்படும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

பொதுவாக எலெக்ட்ரானிக் கழிவுகள் என்றால் எதை எதையெல்லாம் கூறுவோம். ஸ்மார்ட்போன்கள், பேட்டரிகள், பிரிட்ஜ், கம்ப்யூட்டர் சாதனங்கள் இவற்றையெல்லாம் எலெக்ட்ரானிக் கழிவுகள் என்று சொல்லுவோம். நம் வாழ்வோடு கலந்துவிட்ட ஸ்மார்ட்போனை எடுத்துக் கொண்டால் அவற்றின் சராசரி ஆயுட்காலம் 3 ஆண்டுகள்தான்.

பிரிட்ஜின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் மட்டுமே, பிரிண்டர்ஸ் மற்றும் கேட்ரிஜஸ் ஆகியவற்றின் ஆயுட்காலமும் 10 ஆண்டுகள்தான். அதாவது 2014-ம் ஆண்டு வாங்கிய பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இன்று குப்பைக்கு போயிருக்கலாம். குப்பைக்கு போன இந்தப் பொருட்கள் அங்கு இருக்கும் திடக் கழிவுகளோடு வினைபுரிந்து அபாயகரமான கதிர்வீச்சுகளை உண்டாக்கி வருகிறது.

நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களில் காரீயம், ஆர்சனிக், பாதரசம், கேட்மியம், குரோமியம், பாலிபுரோமைடு பைபீனல் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன. அதிலும் இந்தியாவில் உள்ள எலெக்ட்ரானிக் கழிவுகளில் 40 சதவீதம் காரீய வேதிப் பொருட்கள் உள்ளன. மற்ற வேதிப் பொருட்கள் மீதம் உள்ளன. குறிப்பாக பாதரசம், ஆர்சனிக் போன்ற வேதிப் பொருட்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மேலும் மூச்சு சம்பந்தப்பட்ட வியாதிகள், தோல் புற்றுநோய் வரும் என்கின்றனர் வல்லுநர்கள். இதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டுமென்று கேட்டால் இந்தியா எலெக்ட்ரானிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாறி வருகிறது.

இந்தியாவின் நிலை?

உலகளவில் அதிகமாக எலெக்ட்ரானிக் கழிவுகளை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. அதாவது 2009-ம் ஆண்டு கணக்குபடி இந்தியாவில் 4,34,000 டன் எலெக்ட்ரானிக் கழிவுகள் இருந்தன. 2020-ம் ஆண்டில் இந்திய எலெக்ட்ரானிக் சந்தை 400 பில்லியன் டாலருக்கு அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப கழிவுகளும் 2020-ம் ஆண்டில் 5,20,000 டன்னாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரண்டு இடங்களில் எலெக்ட்ரானிக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகின்றன. ஒன்று புதுடெல்லியில் உள்ள சீலாம்பூர் மற்றும் மும்பையில் உள்ள அந்தேரி. இங்குதான் இந்தியாவின் 90 சதவீத எலெக்ட்ரானிக் கழிவுகள் வந்து சேர்கின்றன. தெலங்கானாவில் மட்டும் கடந்த ஆண்டு 10,000 டன் எலெக்ட்ரானிக் கழிவுகள் சேர்ந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, மும்பைக்கு அடுத்து பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அதிக எலெக்ட்ரானிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

என்ன பிரச்சினை?

எலெக்ட்ரானிக் பொருட்கள் அதனுடைய ஆயுட்காலம் முடிந்த பின்னர் குப்பையில் தூக்கிப் போடுவதை தவிர்க்க முடியாது. ஆனால் அதனை மறுசுழற்சி செய்யமுடியும். நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகளை 99 சதவீதம் மறுசுழற்சி செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். ஆனால் தயாரிப்பாளர்கள், கழிவுகளை சேகரிப்பவர்கள், பெரிய நுகர்வோர்கள், மறுசுழற்சி செய்யக்கூடியவர்கள் யாரும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்தியாவில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட 178 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. நிறைய நிறுவனங்கள் அமைப்புசாராமல் இயங்கி வருகின்றன. பொதுவாக மறுசுழற்சி செய்யக்கூடிய நிறுவனங்களில் பெரிய அளவுக்கு தரமான இயந்திரங்களும் தொழில்நுட்பங்களும் இல்லை. மேலும் இந்த நிறுவனங்களில் வேலைப்பார்க்கும் ஊழியர்களின் திறன் குறைவாக உள்ளதால் எலெக்ட்ரானிக் கழிவுகளை மேலாண்மை செய்யும் ஆற்றல் குறைவாக இருக்கிறது என்று சென்டர் பார் சயின்ஸ் அண்ட் என்விரான்மன்ட் மையம் கூறுகிறது. மேலும் இங்கே வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு புற்றுநோய்கள் அதிகம் வருவதாகவும் இவர்களுக்கான பாதுகாப்பு முறைகள் குறைவாக உள்ளன.

மத்திய அரசின் நிலை?

எலெக்ட்ரானிக் கழிவுகளை அகற்றுவதற்கான மற்றும் மறுசுழற்சி விதிமுறைகளை உருவாக்கியது. அதன் பிறகு கடந்த 2016-ம் இந்த விதிமுறைகளில் சீர்திருத்தம் கொண்டுவந்தது. இதன்படி எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் தங்களது 30 சதவீத எலெக்ட்ரானிக் பொருட்களை நுகர்வோர்களிடமிருந்து சேகரித்து அதை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று அந்தக் கொள்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நிறுவனமும் அதற்கான முயற்சியில் கூட இறங்கவில்லை. மாறாக நிறுவனங்கள் பொருட்களை சேகரிப்பது கடினம் என்று மத்திய அரசிடம் முறையிட்டு வருகின்றன. மேலும் இந்த விதிமுறைகளை தளர்த்துவதற்கு நிறுவனங்கள் லாபியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு அரசு செவி சாய்க்கக் கூடாது. இந்தியா முழுவதும் துப்புரவு தொழிலாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். நிறுவனங்கள் நினைத்தால் இதுபோன்று வீடு வீடாகவோ அல்லது ஒரே அறிவிப்பின் மூலமாகவோ பழைய எலெக்ட்ரானிக் கழிவுகளை சேகரிக்க முடியும். ஆனால் நிறுவனங்கள் தயாரிப்பது அதை விற்பது என்ற அளவிலேயே தங்களது வேலையை நிறுத்திக் கொள்கின்றன. இதை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே கடலில் மிதந்துக் கொண்டிருக்கும் கழிவுகளில் 7 சதவீதம் பிளாஸ்டிக் இருக்கிறது. மீன்களும் பிளாஸ்டிக்கை உண்பதற்கு பழகி விட்டன என்று ஆய்வுகள் கூறுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக நமது உடலிலும் அது கலக்கும். தற்போது அதே போல எலெக்ட்ரானிக் கழிவுகளின் குப்பை கிடங்காக இந்தியா மாறி வருவதை பார்க்கமுடிகிறது. இதை சரியாக மேலாண்மை செய்யாவிடில் எலெக்ட்ரானிக் கழிவுகள் இந்தியாவை அச்சுறுத்தும். இந்தியர்களின் சுவாசத்தை அச்சுறுத்தும். அரசும் மக்களும் விழித்துக் கொள்ளும் நேரமிது.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x