Published : 27 Aug 2017 03:01 PM
Last Updated : 27 Aug 2017 03:01 PM

உனக்கு மட்டும்: ஒரு மூதாட்டி, ஒரு குழந்தை, ஒரு ரயில்

வயோதிகம் தவிர்க்க முடியாத ஒரு வியாதி. உடலின் பலவீனத்துக்கும் மனதின் உறுதிக்கும் இடையே இடைவெளி இன்றி நடக்கும் ஒரு யுத்தம் அது. சிலர் உடல் உபாதைகளின் காரணமாக வீட்டினுள் முடங்கிவிடுவார்கள். சிலர் வீட்டினுள் முடக்கிவைக்கப்படுவார்கள். வெகு சிலர் உடல் தரும் வலிகளைப் புறந்தள்ளி, தாங்கள் விரும்பும் வேலையில் ஈடுபட்டு, கடைசிவரை மகிழ்வுடன் வாழ்வார்கள். மங்களூருவில் இருந்து சென்னை வந்த ரயிலில் நான் சந்தித்த 83 வயது மூதாட்டி, அந்த வெகு சிலரில் ஒருவர்!

ரயில் குறித்த நேரத்தில் சரியாக 6.50 மணிக்குக் கிளம்பியது. ஜன்னலோர இருக்கையில் அந்த மூதாட்டி அமர்ந்திருந்தார். அவர் அருகில் சுமார் 60 வயதுடைய ஒரு பெண் மிகவும் சோர்வாக, தூக்கம் ததும்பிய விழிகளுடன் அமர்ந்திருந்தார் (அது அவருடைய மகள்). ஆனால், இவரோ மிகவும் உற்சாகத்தோடு, ஒரு குழந்தையின் குதூகல மனநிலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார். வாழ்வில் மீந்திருக்கும், ஒரு நொடியைக்கூட வீணடிக்க விரும்பாத உறுதி அவர் பார்வையில் தென்பட்டது.

அது ஒரு மழைக்காலம். ஆனாலும் ரயிலுக்குள் வெப்பமே நிறைந்திருந்தது. வெப்பத்தாலும் தூக்கத்தாலும் சோர்ந்துபோய்ப் படுக்க விரும்பிய மகள், தன் அம்மாவைத் தூங்கச் சொன்னார். அம்மா அதை மறுக்கவே, சற்றே கடிந்துகொண்டு, வற்புறுத்தி அவரைப் படுக்கவைத்தார். பின் தானும் மேல் படுக்கையில் ஏறிப் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து, தன் மகள் உறங்கியதை உறுதிசெய்த பின், உடலைக் குறுக்கி ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் படலத்தை அந்த மூதாட்டி தொடர்ந்தார்.

எதிர் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த என் மகளிடம், ‘என்னடி பார்க்கிறே’ என்று பேச்சை வளர்த்தார். ‘ஒண்ணுமில்லையே’ என்ற அவள் பதிலில் ஏமாற்றமடைந்தாலும், விடாமல், ‘என்னடி வயசு உனக்கு’ என்று தொடர்ந்தார். ‘எட்டு வயது’ என்றவளிடம், ‘இந்தா எடுத்துக்கோ’ என்று பிஸ்கட்டை நீட்டினார். ‘தெரியாதவர்கள் தரும் பிஸ்கட்டை வாங்கிச் சாப்பிடக் கூடாதென்று எங்கள் மேடம் சொல்லியிருக்காங்க’ என்று அவள் சொன்னதைக் கேட்டு, வாய்விட்டுச் சிரித்தார். ‘என்னைப் பார்த்தால், உனக்குப் பிள்ளை பிடிக்கிறவ மாதிரியா இருக்கு’ என்று செல்லக் கோபத்துடன் கேட்டார். ‘தெரியலையே’ என்று அவள் மீண்டும் சொல்ல, சிரித்தபடி என்னிடம், ‘நீயாவது அவளிடம் சொல்லேன்’ என்றார். நான் சிரித்தபடியே, கண்ணசைக்க, பிஸ்கட்டை அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டாள்.

என் மகளுக்கும் அந்தப் பாட்டிக்கும் இடையே உரையாடல் நீண்டது.

“பாட்டி, நீங்கள் ஏன் தூக்கம் வராதபோது அந்த ஆன்ட்டி சொன்னதற்காகப் படுத்தீர்கள்? தூக்கம் வரவில்லை என்று சொல்ல வேண்டியது தானே” 

“உனக்கு அது இப்போது புரியாது. நீயும் அந்த ஆன்ட்டி மாதிரி வளர்ந்த பின் புரியும்”

“ஏன் புரியாது? நீங்கள் சொன்னால் எனக்குப் புரியும்” 

“என் மகள் என் மேல் கொண்ட அன்புக்காக அவ்வாறு செய்தேன்” 

“அன்புக்காக ஏன் பிடிக்காததைச் செய்ய வேண்டும்?”

“எனக்கு வயசாயிடுத்து இல்லையா, எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயமும் என்னைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவளை எப்பொழுதும் அழுத்திக்கொண்டேயிருக்கும். நான் தூங்கினேன் என்றால், அந்தப் பாரத்தைச் சற்று இறக்கிவைத்துவிட்டு அவளும் கொஞ்ச நேரம் தூங்குவாள். அதனால்தான் அப்படிச் செய்தேன். இப்ப புரிந்ததாடி?”

என் மகள் புரிந்த மாதிரி தலையாட்ட, சிரித்தபடி மூதாட்டி மீண்டும் வெளியே பார்க்க ஆரம்பித்தார்.

சிறிது நேரம் கழித்து என் மகளிடம், ‘நான் எங்கே போய்ட்டு வர்ரேன் தெரியுமா’ என்று கேட்டார். ‘எங்கே’ என்று அவள் கேட்கும்முன்னே, ‘கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குப் போய்ட்டு வர்ரேன்’ என்றார். கும்பகோணத்திலிருந்து திருச்சிக்கு காரில் வந்து, அங்கிருந்து மங்களூருக்கு ரயிலில் வந்தோம். பின் பஸ்ஸில் கொல்லூர் சென்று, அம்மனைப் பார்த்துவிட்டுத் திரும்பி வருகிறேனாக்கும் என்று குதூகலமாகச் சொன்னார். ‘உங்களுக்கு டயர்டா இல்லையா’ என்று சற்று மலைப்பாகக் கேட்டாள் மகள். ‘கார்ட்டூன் சேனல் பார்த்தால் உனக்கு டயர்ட் ஆகுமா’ என்று பாட்டி கேட்க, இரண்டு பேரும் சேர்ந்து சிரித்துக்கொண்டனர்.

கீழே இறங்கி வந்த அவர் மகள் சாப்பிட்டுவிட்டு, துணை இருப்பதால் இப்பொழுது சற்று நிம்மதியுடன் மீண்டும் மேல் படுக்கைக்குச் சென்றார். இவர் முடிந்தவரை சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ள சாப்பாட்டை ஒரு யாசகரிடம் கொடுத்த பிறகுதான், சற்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவராக, மகளை எழுப்பினார். “மா, வெயில் ரொம்ப அடிக்குது, வீட்டில் காயத்ரிக்கு போன் பண்ணி செடிக்குத் தண்ணீர் ஊற்றச் சொல்லும்மா. செடி வாடிப் போய்டும்” என்றார். ‘சரிம்மா’ என்று சொல்லி மகள் மீண்டும் தூங்கிவிட்டார். மகளை மீண்டும் எழுப்ப மனமில்லாமல், கவலையுடன் அமர்ந்து இருந்தார். “நமக்குத் தாகம் என்றால் தண்ணீர் வாங்கிக் குடிக்கிறோம், பசி என்றால் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுகிறோம். ஆனால் செடி யாரிடம் கேட்கும்? அது பாவம்தானே?” என்று என் மகளிடம் புலம்பினார். அவளும் சோகமாகத் தலையை ஆட்டினாள். இருவரும் சோகமாகச் சிறிது நேரம் பேசாமல் இருந்தார்கள். 

பக்கத்துப் பெட்டியில் இருந்து அவரைப் பார்க்க மகன் வந்தவுடன், துள்ளி எழாத குறைதான். “ஏம்பா, காயத்ரிக்கு போன் பண்ணி செடிக்குத் தண்ணி ஊத்தச் சொல்லுப்பா” என்றார். “நம்ம ஊரில் மழை பெய்கிறதாம் அம்மா” என்று மகன் சொன்னதைக் கேட்டவுடன், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

சிறிது நேரம் கழித்து என் மகளை அழைத்து, அருகில் அமரவைத்துக் கொண்டார். அவள் தலையைக் கோதி விட்டபடியே, “அப்பாவை உனக்கு ரொம்பப் பிடிக்குமோ?” என்று கேட்டார். “ஆமாம், உங்களுக்கு?” என்று அவள் கேட்டாள். மூதாட்டி விழியோரம் ததும்பிய நீர்த்துளிகளில், அவருடைய தந்தையின் உருவம் தோன்றி மறைந்தது போல  இருந்தது. “ஆமாம், எனக்கும் ரொம்பப் பிடிக்கும். என்னைத் திட்டவே மாட்டார் தெரியுமா. நான் கடைசிவரை அவர் செல்லப் பிள்ளையாக்கும்” என்று சொன்னவர், சிந்தனையில் ஆழ்ந்து போனார். அதன் பிறகு அவர் பேசவில்லை, கொஞ்ச நேரத்தில் தூங்கியும் போனார்.

இரவில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, யாரோ என்னை எழுப்புவதுபோல் இருந்தது. விழித்து, கண்ணைக் கசக்கிப் பார்த்தால், மூதாட்டி இறங்கத் தயாராக இருந்தார். “திருச்சி வந்துட்டுது, நான் போய்ட்டு வர்றேன். பிள்ளையை நல்லா, செல்லமா பார்த்துக்கோம்மா” என்று என்னிடம் சற்றுக் கெஞ்சலாகச் சொல்லிவிட்டு, அவள் தலையை வருடி, முத்தமிட்டு, விழித்துப் பார்த்த என் கணவரிடமும் விடைபெற்று, தன் குடும்பத்துடன் இறங்கிச் சென்றார். அதன் பின், சென்னை வரும்வரை என்னால் தூங்க முடியவில்லை. 

முதியவர்களின் உலகம்தான் எவ்வளவு விசித்திரமானது! கவலைகொள்வதற்குக்கூட நேரமில்லாமல், வலுவற்ற உடலை மனதால் சுமந்துகொண்டு ஒரு குழந்தையைப் போல், தாங்கள் விரும்பியதைக் காலம் தாழ்த்தாமல், அக்கணமே அடைய முயல்கிறார்கள். எதையோ எதிர்பார்த்து நம்பிக்கையுடன் கடந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள். நமது சிறு புன்னகையுடன் கூடிய ஒன்றிரண்டு ஆறுதலான வார்த்தைகள் போதும் அவர்களின் மகிழ்ச்சிக்கு.

நிஷா, சென்னை.

உங்கள் அனுபவம் என்ன?

 நெருங்கிய நண்பர்களிடம்கூடப் பகிர்ந்துகொள்ள முடியாமல் இப்படி எத்தனையோ விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்து இருக்கலாம். அவற்றையெல்லாம் இறக்கிவைக்கத் தோள் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். அவற்றை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உற்ற தோழியிடம் மனச் சுமையை இறக்கிவைத்த நிம்மதி உங்களுக்கும், உங்கள் அனுபவத்தில் இருந்து பாடம் கற்கும் வாய்ப்பு அடுத்தவர்களுக்கும் கிடைக்கும் அல்லவா? தயங்காமல் எழுதுங்கள், அனைத்தையும் பேசுவோம்.

மின்னஞ்சல்: penindru@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x