Published : 14 Aug 2017 11:14 AM
Last Updated : 14 Aug 2017 11:14 AM

சூப்பர் பைக் வாங்க கடன்

சூ

ப்பர் பைக், அதாவது அதிக சிசி கொண்ட மோட்டார் சைக்கிளுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த பிரிவில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கின்றன. ஆனால் இதுபோன்ற பைக்குகளின் விலை லட்ச ரூபாய்க்கு மேல்தான் ஆரம்பிக்கும். சூப்பர் பைக் மீது ஆசை இருந்தாலும், அதன் விலை காரணமாக வாங்குபவர்களுக்கு தயக்கம் இருக்கும். ஆனால் சில வங்கிகள் சூப்பர் பைக் வாங்குவதற்கு கடன் வழங்குகின்றன. ஹெச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகிய வங்கிகள் கடந்த சில காலமாகவே இந்த வகையான கடன்களை வழங்குகின்றன. இந்த பட்டியலில் ஆக்ஸிஸ் வங்கி சமீபத்தில் இணைந்திருக்கிறது.

தகுதி என்ன?

பொதுவாக மாத சம்பளம் பெறுபவர்கள் மற்றும் தனியாக தொழில் புரிபவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா விவசாயிகளுக்கும் கடன் வழங்குகிறது. ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை வைத்திருக்கிறது. நீங்கள் விவசாயி அல்லது சம்பளம் வாங்குபவராக இருந்தால், உங்களது நிகர வருமானம் 6 லட்ச ரூபாயாக இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவராக இருந்தால் உங்களது நிகர லாபம் 6 லட்ச ரூபாய் அல்லது உங்களுடைய வரி செலுத்தும் வருமானம் ரூ.6 லட்சமாக இருக்க வேண்டும்.

ஆக்ஸிஸ் வங்கி விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பை நிர்ணயம் செய்திருக்கிறது. ஆக்ஸிஸ் வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால் 21 வயது முதல் 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பெரும்பாலான வங்கிகள் வாகனத்தின் மொத்த விலையில் 85 சதவீதம் வரை கடன் வழங்குகின்றன. தவிர, உதிரி பாகங்களுக்கு கூடுதல் நிதி உதவியும் வழங்குகின்றன. உதாரணத்துக்கு ஹெச்டிஎப்சி வங்கி உதிரி பாகங்களுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் வழங்குகிறது. ஆக்ஸிஸ் வங்கி வாகனத்தின் மொத்த தொகை மற்றும் உதிரி பாகங்களையும் சேர்த்து மொத்த விலையில் 95 சதவீதம் வரை கடன் வழங்குகிறது. அதிக பட்சம் 5 ஆண்டுகளுக்குள் இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

ஆவணங்கள்?

வழக்கமான அடிப்படை ஆவணங்களான அடையாள சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்று ( படிவம் 16, சம்பள தகவல்), வங்கி தகவல்கள் உள்ளிட்டவை சமர்ப்பிக்க வேண்டும். சொந்த தொழில் புரிபவர்கள், தங்களது தொழில் குறித்த சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளில் சமர்பித்த வருமான வரி சான்று தேவை. விவசாயியாக இருந்தால் கூட வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும்.

வட்டி விகிதம்

பெரும்பாலான வட்டி விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் தொடங்குகின்றன, எஸ்பிஐ வங்கி 11.65 சதவீத வட்டி வசூலிக்கிறது. ஆக்ஸிஸ் வங்கி 10.5 சதவீதத்திலும், ஐசிஐசிஐ வங்கி 11 சதவீத வட்டியில் கடன் வழங்குகின்றன. ஆனால் ஹெச்டிஎப்சி வங்கி சூப்பர் பைக்குகளுக்கு 8.85 சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது. வட்டி தவிர பரிசீலனை கட்டணம் மற்றும் இதர கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு ஐசிஐசிஐ வங்கி கடன் தொகையில் 1 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5,000 திருப்பி அளிக்கப்படாத பரிசீலனைக் கட்டணமாக வசூலிக்கிறது.எஸ்பிஐ 2 சதவீதம் பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கிறது. உதாரணத்துக்கு ரூ.5,400 முதல் அதிகபட்சம் ரூ.17,800 வரை கட்டணம் வசூலிக்கிறது.

முன்கூட்டியே கடனை முடிப்பது, அல்லது முன்கூட்டியே கடனை செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்தும் பட்சத்தில், நிலுவையில் இருக்கும் கடன் தொகையில் 5 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல ஒரு ஆண்டில் இரு முறை மட்டுமே கூடுதலாக தவணைத் தொகையை செலுத்த முடியும். கூடுதல் தொகையை செலுத்துவது என்பது ஒரு மாத இஎம்ஐ தொகை அல்லது நிலுவையில் இருக்கும் தொகையில் அதிகபட்சம் 25 சதவீதம் செலுத்தலாம்.

சாதகங்கள்?

தனிநபர் கடன் அல்லது வழக்கமான இரு சக்கர வாகன கடன் வாங்குவதை விட் சூப்பர் பைக் கடன் இரு வகைகளில் சிறந்தது. முதலாவது மேலே கூறிய இரு வகை கடனை விட சூப்பர் பைக் கடனில் வட்டி குறைவு. உதாரணத்துக்கு ஹெச்டிஎப்சி வங்கியில் சூப்பர் பைக் கடன் 8.85 சதவீதம். ஆனால் இதே வங்கியில் தனிநபர் மற்றும் வழக்கமான இரு சக்கர வாகன கடனுக்கு 9.5 சதவீதம் செலுத்த வேண்டும்.

அடுத்த சாதகம் கடன் தொகை. உதாரணத்துக்கு 5 லட்ச ரூபாய் வாகனத்துக்கு 85 சதவீதம் வரை கடன் கிடைக்கும். அதாவது ரூ. 4.25 லட்சம் வரை கடன் கிடைக்கும். (குறைந்த பட்ச வருமானம் ரூ.6 லட்சம் தேவை) ஆனால் சாதாரண இரு சக்கர வாகன கடனில் ஆறு மாத சம்பளத்துக்கு (ரூ.3 லட்சம்) மேல் கடன் வாங்க முடியாது.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x