Published : 25 Aug 2017 11:25 AM
Last Updated : 25 Aug 2017 11:25 AM

திரை வெளிச்சம்: தவிக்கவிடும் தணிக்கை!

மிழ்த் திரையுலகில் படம் எடுப்பது தற்போது எளிதாகிவிட்டது. ஆனால், அந்தப் படத்தைத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி சான்றிதழ் பெறுவதுதான் பெரும் சவால். கடந்த சில மாதங்களில் மட்டும் ‘விக்ரம் வேதா’, ‘நிபுணன்’, ‘உள்குத்து’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் தணிக்கைச் சான்றிதழ்கள் தொடர்பாக தணிக்கைக் குழு பின்பற்றத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படும் புதிய நடைமுறைகளால் தாமதமாகியுள்ளது என்றும் பட வெளியீட்டுத் தேதிகளையும் பலமுறை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து குமுறல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

புதிய நடைமுறைகள்

முன்பெல்லாம் ஒரு படத்தின் தணிக்கைப் பணிகள் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். ஆனால், தற்போது குறைந்தது ஒரு மாதத்துக்கும்மேல் ஆகிறது. படத்தை முடித்தவர்கள் அதற்குத் தணிக்கைச் சான்றிதழ் வேண்டும் என்றால் இணையம் வழியாகப் பதிவுசெய்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்ற புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இணையம் வழியாக விண்ணப்பிக்கும்போது ஆதார் எண், தொலைபேசி எண், இவற்றுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு ஆகியவை இருந்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் இந்த முறையில் தணிக்கைக்கு விண்ணப்பிக்க முடியும். இதிலும் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு எப்போது தேதி ஒதுக்கப்பட்டது என்ற குறுந்தகவல் அனுப்பப்படும். தணிக்கைக் குழுவினரால் படம் பார்க்கப்பட்டதும் எந்தெந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்ற ‘கட் லிஸ்ட்’ உடனே கிடைப்பதில்லை. எந்தெந்தக் காட்சிகளில் எந்த வசனம், அல்லது சொல் ‘மியூட்’ செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் தணிக்கைத் தரப்பிலிருந்து கிடைக்க, குறைந்தது பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால் படங்களைக் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடிவதில்லை; தாமதத்தைத் தவிர்க்க இயலவில்லை. இப்பிரச்சினையில் சிக்கி வெளியீட்டைத் தள்ளி வைத்துக்கொண்டே வந்த படம். ‘நிபுணன்’. அப்படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதன் தணிக்கையுடனான தனது அனுபவம் பற்றி நம்மிடம்பேசும்போது...

“ ‘நிபுணன்’ படத்துக்கு 20 கட்ஸ், 8 சவுண்ட் மியூட் கொடுத்தார்கள். இந்த முடிவால் அதிர்ச்சியடைந்து தணிக்கை அதிகாரியிடம் பேசச் சென்றேன். இரண்டு வருஷமாகக் கஷ்டப்பட்டு இப்படத்தை எடுத்துள்ளேன் என்று பேசத் தொடங்குவதற்குள், ‘இதுதான் தர முடியும்’ என்று சொன்னார். படத்தின் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்பதற்குக்கூட அவர் தயாராக இல்லை. தணிக்கையில் ஏற்பட்ட சிக்கலால் மட்டுமே ‘நிபுணன்’ வெளியீடு சுமார் நான்கு மாதங்கள் தாமதமானது.

தமிழக சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என்பதை லைவ்வாகக் காட்டுகிறார்கள். அதே போல் தணிக்கையில் என்ன நடக்கிறது என்பதையும் காட்டலாம். ஏனென்றால், 6 உறுப்பினர்கள் ஒரு படத்துக்கான தணிக்கையில் படம் பார்க்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டுமே கருத்தாக எடுத்துரைக்கிறார். மற்றவர்களின் கருத்து என்ன, அவர்கள் என்ன சொல்ல நினைத்தார்கள் என்பது உள்பட எதையுமே தெரிந்துகொள்ள முடிவதில்லை. தணிக்கை அதிகாரியிடம் பேசுவது ஏதோ, கல்லூரி மாணவரும் ஆசிரியரும் பேசுவது போல் உள்ளது. ‘இந்தச் சான்றிதழ்தான் தர முடியும். இஷ்டம் என்றால் எடுத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் மறுதணிக்கைக்குச் செல்லுங்கள்’ என்பதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தணிக்கைச் சான்று பெறுவது மிகக் கசப்பான அனுபவமாகிவருகிறது” என்று கொதித்துவிட்டார்.

‘நிபுணனை’த் தொடர்ந்து பிரச்சினையில் சிக்க மற்றொரு படம் ‘விக்ரம் வேதா’.

இது குறித்து அந்தப் படத்தின் இயக்குநர்களில் ஒருவரான புஷ்கரிடம் கேட்டபோது, “படத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்கு ஒரு மாதம் ஒதுக்குவதுபோல், தணிக்கைக்கும் ஒரு மாதம் ஒதுக்குங்கள் என்கிறார்கள். இணையத்தில் பதிவுசெய்கிறோம், டெல்லியிலிருந்து ஒப்புதல் வந்தவுடன் பார்க்கிறார்கள். அதெல்லாம் சரி. ஆனால், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் இதை வேகப்படுத்த வேண்டும். ஆன்லைன் வசதி என்பதே வேகமாகச் செயல்படத்தானே? ஒரு வருடத்துக்கு எவ்வளவு படங்கள் வெளியாகின்றன என்பது தணிக்கைத் துறைக்கு தெரியாத ரகசியம் அல்ல. அதற்குத் தகுந்தாற்போல் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.

ஒரு மாதம் தணிக்கைப் பணி என்று நினைத்தோம். ஆனால், ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. ‘விக்ரம் வேதா’வுக்கு ’கட் லிஸ்ட்’ கிடைக்கவே தயாரிப்பாளருக்குப் பத்து நாட்களாயின. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வேகப்படுத்தி தணிக்கைச் சான்று வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மறுதணிக்கை எனும் அஸ்திரம்

ஒரு தயாரிப்பாளர் தனது படத்துக்கு அளிக்கப்பட்ட தணிக்கைச் சான்றில் உடன்பாடு இல்லை என்றால், மறுதணிக்கைக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். ‘நாங்கள் பரிந்துரைத்த நீக்கங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதால் உங்கள் படத்தை நீங்கள் மறுதணிக்கைக்குச் சமர்ப்பிக்கலாம்’ என்று இங்குள்ள பிராந்திய தணிக்கை அலுவலகம் மின்னஞ்சல் மூலமாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், இதை அனுப்புவதற்குக் கூடக் கால தாமதம் ஏற்படுவதாகக் கொந்தளிக்கிறார்கள் இயக்குநர்கள்.

தணிக்கை சான்று பெறுவதில் ஏற்பட்ட குளறுபடியால் பெரும் சிக்கலைச் சந்தித்திருக்கிறது ‘உள்குத்து’ திரைப்படம். அதன் இயக்குநர் கார்த்தி ராஜூவிடம் பேசியபோது, “படம் எடுப்பதைவிடத் தணிக்கைப் பணிகளைக் கடப்பது மிகவும் கடினமாகி விட்டது. எதன் அடிப்படையில் யு, யு/ஏ, ஏ சான்றிதழ்கள் வழங்குகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். எனது படத்துக்கு முதலில் யு/ஏ சான்று வழங்கினார்கள். எதற்காக யு/ஏ என்று கேட்டதற்கு, ‘சண்டைக்காட்சிகள் அதிகம்’ என்று காரணம் சொன்னார்கள். குழந்தைகள் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. இந்தப் படம் இளைஞர்களுக்கா பெண்களுக்கா குடும்பப் படமா என்று கேட்டனர். ‘யு’ சான்றிதழ் வாங்கிய ஒரு பெரிய நடிகரின் படத் தலைப்பைக் கூறி எதன் அடிப்படையில் அந்தப் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கினீர்கள், என் படத்தில் உள்ள சண்டைக்காட்சிகளைவிட அதில் பல மடங்கு வன்முறை இருந்ததே, குடும்பத்தினர் அப்படத்தைப் பார்க்கலாம் என்று எதன் அடிப்படையில் முடிவுசெய்தீர்கள்’என்று கேள்வி எழுப்பினேன். ‘உன் படத்தை மறுதணிக்கை செய்து வாங்கிக்கொள்’ என்று தணிக்கை அதிகாரி தன் பேச்சைப் பட்டென்று முடித்துக்கொண்டார். என் நியாயமான கேள்விக்குக்கூட அவர் பதில் தரவில்லை. மறுதணிக்கையில் இரண்டு மாதங்கள் கழித்துத்தான் படத்தைப் பார்த்தார்கள். அதற்காகத் தணிக்கை அலுவலகத்துக்கு இருபது முறைக்கு மேல் அலைந்து வெறுத்துப் போனோம். மறுதணிக்கை என்பதை ஒரு அஸ்திரம்போல் பயன்படுத்துகிறது தணிக்கைக் குழு” என்று வேதனையுடன் பேசினார்.

பாதிக்கப்படும் சிறிய படங்கள்

‘உள்குத்து’ படத்தின் இயக்குநர் கார்த்தி ராஜூ மேலும் தனது அனுபவத்தை விவரிக்கையில் “ ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் நான் இருப்பதால் படங்களின் தணிக்கை தொடர்பான தகவல்களைத் தொடர்ச்சியாகக் கவனித்துவருகிறேன். கடந்த நான்கு மாதங்களில் வெளியான பெரிய படங்கள் யு/ஏ அல்லது ஏ சான்றிதழ் வாங்கியிருந்தால் மறுதணிக்கைக்குச் செல்கிறோம். அடுத்த வாரம் படம் ரீலீஸ் என்று அறிவிக்கிறார்கள். அதேபோல் மறுதணிக்கையில் படம் பார்த்துப் புதிய சான்றிதழ் வாங்கி பெரிய படங்கள் வெளியாகிவிடுகின்றன. எதன் அடிப்படையில் இத்தனை வேகமாக நடக்கிறது. சின்னப் படம் தானே, காத்திருக்கட்டும் என்ற அலட்சியமா இல்லை, பெரிய படம் காத்திருக்கக் கூடாது என்ற ஆர்வமா என்று சத்தியமாகத் தெரியவில்லை. இதையும் தாண்டி தணிக்கைக்குள் என்ன உள்குத்து நடக்கிறது என்று நிறைய சொல்கிறார்.

தயாரிப்பாளர் சங்கம் என்ன செய்கிறது?

இது குறித்துக் கேட்டறிந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், “இப்பிரச்சினை தொடர்பாகத் தணிக்கை அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசியுள்ளோம். ஒரு வாரத்தில் வெளியாகும் படங்கள் தணிக்கைக்கு வரும்போது உடனடியாகப் பார்க்க வகை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதற்காகத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாகக் கடிதமும் கொடுக்கிறோம் என்று கூறியுள்ளோம். சிறு முதலீட்டுப் படங்களை டிவிடி முறையில் பார்ப்பதற்கும் சரி என்று கூறியிருக்கிறார்கள். தணிக்கையில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் பதிவுசெய்ய வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே நாங்களும் தணிக்கையில் பேசி வாங்கித் தர முடியும்” என்று தெரிவித்தார்.

தணிக்கைத் துறைக்கும் அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் திரைப்படக் கலை குறித்த பார்வை இல்லை என்ற விவாதம் எல்லாம் தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு, தணிக்கைச் சான்றிதழை அதனிடமிருந்து பெறுவதே பெரும் பிரச்சினையாக மாறியிருப்பதையே தற்போதைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் அனுபவங்கள் நமக்குக் காட்டுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x