Last Updated : 20 Aug, 2017 01:53 PM

 

Published : 20 Aug 2017 01:53 PM
Last Updated : 20 Aug 2017 01:53 PM

இதுதான் இப்போ பேச்சு: பெண்கள் பாதுகாப்புக்கு என்ன செய்தீர்கள்?

பி

ரபல இந்தி டிவி நடிகை திவ்யாங்காவின் ட்விட்டர் பதிவு கடந்த வாரம் வைரலானது. இது வழக்கமான பதிவல்ல. பிரதமர் மோடியிடம் ‘பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்ட’த்தின் நோக்கத்தைப் பற்றி தன் ட்விட்டர் பதிவில் அவர் கேள்வியெழுப்பியதே அந்த ட்வீட் வைரலானதற்குக் காரணம்.

சண்டிகரைச் சேர்ந்த பன்னிரண்டு வயதுச் சிறுமி, நாட்டின் 71-வது சுதந்திர தினத்தைப் பள்ளியில் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் . அவள் கத்திமுனையில் மிரட்டப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறாள். சண்டிகரில் அமைந்துள்ள சிறுவர் போக்குவரத்துப் பூங்காவில் காலை எட்டு மணிக்கு நடைபெற்ற இந்தச் சம்பவம், நாட்டில் பல தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

20chgow_divyanka திவ்யாங்கா

பலரும் தங்கள் அதிர்ச்சியையும் பயத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டனர். இந்தச் சம்பவம் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பைத்தான் இந்தித் தொலைக்காட்சி நடிகை திவ்யாங்கா ட்விட்டரில் பகிர்ந்துகொண்டிருந்தார் . “இப்போது பெண் குழந்தையின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள். எனக்கு மகன் பிறக்க வேண்டுமென்று எப்போதும் ஆசைப்பட்டதில்லை. ஆனால், இப்போது மகளைப் பெற்றெடுத்ததற்காகப் பயப்படுகிறேன்.

அவளை ஏன் இந்த நரகத்துக்குக் கொண்டு வந்தேன்? அவளிடம் என்ன சொல்லப் போகிறேன்? நாம் பயத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

குற்றவாளிகள் பயமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். என் மகளுக்குச் சிறந்த விஷயங்களை என்னால் கற்றுகொடுக்க முடியும். ஆனால், இந்தச் சூழ்நிலையில் என்னால் அவளது சுதந்திரமான வாழ்க்கையை உறுதிசெய்ய முடியாது” என்று தன் பதிவில் எழுதியிருக்கிறார் திவ்யாங்கா.

இது பெண்களுக்கான நாடா?

தற்போது ‘யே ஹை மொஹபத்தேன்’ என்கிற இந்தித் தொலைக்காட்சித் தொடரில் நடித்துவரும் இவர், இந்தச் சம்பவத்துக்கான கண்டனத்தைப் பல ட்வீட்களில் பதிவுசெய்திருந்தார்.

“பெண்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது. ஏனென்றால், அவர்கள் இந்த நாட்டுக்கு முக்கியத்துவமற்றவர்களாக இருக்கிறார்கள். இது பெண்களுக்கான நாடு இல்லை. பாலியல் வல்லுறவில் ஈடுபடுபவர்களின் சொர்க்கத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கொடூரமான குற்றங்களுக்குக் கொடூரமான தண்டனைகளை நாம் ஏன் கொடுக்க மறுக்கிறோம்? இதோ மற்றுமொரு பாலியல் வல்லுறவு. இத்தனைக்கும் நடுவே நாம் என்ன மாதிரியான சுதந்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் அவர்.

அத்துடன், பிரதமர் மோடியிடம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

நாட்டில் பெரும்பான்மையானவர்களின் மனதைப் பிரதிபலிக்கும்படியாக அவரது ட்விட்டர் கருத்துகள் அமைந்திருந்தன. பெண்கள் பாதுகாப்பை உடனடியாக உறுதிசெய்ய வேண்டிய அவசியத்தை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. திவ்யாங்காவின் ட்விட்டர் கருத்துகள் பிரதமர் மோடியின் செவிகளை எட்டியிருக்கிறதா என்பதற்குக் காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x