Last Updated : 05 Aug, 2017 11:14 AM

 

Published : 05 Aug 2017 11:14 AM
Last Updated : 05 Aug 2017 11:14 AM

உயிர் வளர்த்தேனே 47: நிஜமாகவே ஊட்டம் தருமா சிக்கன் 65?

ருத்தறியாக் காலத்துக்கு முன்பிருந்தே மனித இனம் விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை உண்டு வந்திருக்கிறது. மரத்தில் பழுத்துத் தொங்கும் கனிகள் கிடைக்காத காலத்தில், நிலத்தை அகழ்ந்து கிழங்குகளைத் தோண்டி உண்டது. அதுவும் கிடைக்காத காலத்தில் விலங்குகளைப் பிடித்து அறுத்து, அவற்றின் இறைச்சியை உண்டது.

இதில் புனிதம், புனிதமற்றது என்ற பேச்சுக்கு இடமில்லை. வரலாற்றுக்குப் பிந்தைய காலத்தில் எத்தனையோ மதங்களும் இலக்கியங்களும் உயிர்ப் பாதுகாப்பின் பேரால் தொடர்ந்து வலியுறுத்தி வரும்போதும் இறைச்சி உண்பதை, கொல்லாமையை மனித இனம் கைவிடவில்லை. இன்றும் உலகில் பெரும்பாலானவர்கள் ஊண் உண்ணிகளே.

என்னைப் பொறுத்தமட்டில் வாய் உண்ண அனுமதிக்கிற பொருட்கள் எதையும் மனிதர்களின் செரிமான மண்டலம் செரித்துவிடும். செரிக்கத் தகுதியான உணவு வகைகள் யாவும், அவனது உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாறும். அந்த வகையில் இறைச்சி உண்போரைக் கணக்கில் கொண்டு இறைச்சி பற்றிக் கதைப்போம்.

யார் சாப்பிடலாம்?

விருப்பம் உடையவர்களும் செரிக்கும் திறனுள்ளவர்களும் இறைச்சியை உண்ணலாம். ஆனால், பயத்துடன் இறைச்சியை உண்டால் நேர்மறை விளைவுகளைவிட எதிர்மறை விளைவுகளே அதிகம் நேரும்.

என்னைப் பொறுத்தவரையில் முதல் பால் பல் விழுந்து இரண்டாம் பல் முளைத்து அது ஈற்றில் ஆழப் பற்றிய ஏழு வயதுக்குப் பின்னர்தான் இறைச்சி உண்ணப் பொருத்தமான பருவம்.

அதற்கு முந்தைய பருவத்தில் இறைச்சியின் நீர்த்த சாற்றை (சூப்பு) நேரடியாக அருந்தச் செய்யலாம். அல்லது சோறு, இட்லி போன்ற ஆதார உணவுடன் கலந்து உண்ணச் செய்யலாம்.

எல்லை தாண்டக் கூடாது

தற்காலத்தில் குழந்தைகளை வலுவாக வளர்க்கிறேன் என்று இரண்டரை, மூன்று வயது முதற்கொண்டே வறுத்த, எண்ணெயில் பொரித்த கோழி போன்ற உணவு வகைகளை உண்ணப் பழக்குவது, அவர்களது மென்மையான செரிமான மண்டலத்தைத் தளர்த்திவிடும். ஆகையால் மீண்டும் மீண்டும் ஒரே வகையான உணவு உண்ணும் முறைக்கு அடிமைப்பட்டு விடுகிறார்கள்.

ஏழெட்டு வயதுக்குள்ளேயே நடக்கச் சோம்பல்படும் அளவுக்கு மிகை எடையோடு உப்பிவிடுபவர்களைப் பரவலாகக் காண முடிகிறது. எடை மிகுந்திருப்பதோடு மலச்சிக்கல் தொல்லையும் ஆரம்பமாகிவிடுகிறது.

மலச்சிக்கல் நோய் ஒன்றே போதும் மூச்சிரைப்பு தொடங்கி ஒவ்வாமை, தோலரிப்பு, சதைக்கட்டி என மற்றெல்லா நோய்களையும் ஒவ்வொன்றாக ஒரு கண்ணசைவில் அழைத்து வந்து சேர்த்துவிடும்.

தற்காலப் பெற்றோர் தமது குழந்தைகளை இயல்பான வளர்ச்சிக்கு அனுமதிப்பதில்லை. பருவம் மீறிய வளர்ச்சி பிற்கால வாழ்க்கைக்குத் தடையாக மாறும் என்கிற எளிய உண்மையை அவர்கள் உணர்வதில்லை. குழந்தைகள் வளர்ப்பில் அக்கறை உடைய பெற்றோரின் அதீத ஆர்வம், குழந்தைகளின் உடல் கட்டுமானத்தைச் சிதைக்கும் எல்லையைத் தாண்டிவிடக் கூடாது.

செக்கச் செவேல் இறைச்சி

ஒரு நண்பரின் வீட்டுக்கு மதிய விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தேன். சாப்பாட்டு நேரத்துக்குச் சரியாகப் போனால், நாகரிகம் இல்லை அல்லவா. பதினோரு மணி சுமாருக்கே போய் விட்டேன்.

உள்ளறையில் இருந்த அவருடைய குழந்தைகளும் உறவினர் குழந்தைகளும் கணினி விளையாட்டில் தீவிரப்பட்டிருந்தனர். அவர்களை வலிய இழுத்து வந்து எனக்கு முகமன் கூறும்படி நண்பர் பணித்தார்.

சம்பிரதாயங்கள் முடிந்து கூடத்தில் அமர்ந்து நண்பருடன் பேசிக்கொண்டிருக்க, அவருடைய துணைவியார் உடைத்த செங்கல் கட்டிகளை ஒத்த செக்கச் செவேல் நிறத்தில் (செயற்கை நிறமிகள் குறித்து ஏற்கெனவே இத்தொடரில் பேசியிருக்கிறோம்) கோழி இறைச்சித் துண்டங்களைப் பெரிய தட்டில் வைத்து எடுத்துச் சென்றார். உணவுப் பொருள் என்றாலே எவ்வித லஜ்ஜையும் இன்றி எனது பார்வை அந்தப் பக்கம் திரும்பிவிடும்.

அதேபடிக்கு எனது பார்வை கோழித் துண்டங்கள் ஏந்திய தட்டுடனே சென்றது. எனது சலனம் நண்பரின் மனைவியைப் பின்னடையச் செய்து விட்டது. திரும்பி டூ ஸ்டெப் பேக்வேர்டு வந்து, தட்டை என்னிடம் நீட்டி “டேஸ்ட் பாக்குறீங்களா?” என்றார்.

எச்சிலை விழுங்கிக்கொண்டு “இல்லே, என்னான்னு பார்த்தேன்” என்றேன். “பசங்களுக்கு... இது அங்க போகலைன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல அதுங்க கிச்சனுக்குள்ள புகுந்திருங்க... அதான் கொஞ்சம் போன்லெஸ் சிக்ஸ்டி பைவ் போட்டேன்” என்றார்.

அவர் சொன்னதில் விஞ்சி நின்றது தனது சமையலின் புலமையா... அல்லது தற்காலக் குழந்தைகளின் கோழி இறைச்சி மீதான பேரார்வமா என்ற பட்டி மன்றம் ஒருபுறம் இருக்கட்டும்.

சிக்கன் 65

கோழியை நாம் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறோம். ஓடத் திராணியற்ற கோழியின் லெக் பீஸ் நமது கால்களுக்கு வலுச் சேர்க்குமா..? எப்போதும் பிராய்லர் கோழியை மட்டுமே இறைச்சிக்காகச் சார்ந்திருப்பது சரிதானா? அதன் பிரபல சமையல் முறை பற்றிப் பார்த்துவிடுவோம்.

கோழிப் பிரியர்களுக்கு சிக்கன் சிக்ஸ்டி பைவ் போல மரக்கறிப் பிரியர்களுக்கு காலிஃபிளவர் சிக்ஸ்டி பைவ் என்று உணவகங்களில் ஒரு வகை பரிமாறப்படுகிறது. சிவப்பு சாயத்தில் முக்கி எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரிப்பது அத்தனையும் சிக்ஸ்டி பைவ் என்று எப்படியோ ஒரு படிமம் உருவாகிவிட்டது. எத்தனையோ பொருளற்ற படிமங்களில் இதுவும் ஒன்று.

நாம் கோழி பற்றிப் பேசுவதால் இந்த அறுபத்தைந்துக்கான (Sixty five) அர்த்தத்தைப் புரிந்துகொள்வது நல்லது. நமது தமிழ் சினிமா நான்கைந்து வருடங்களுக்கு முன்னர்வரை பெரிதும் அறுந்துபோன கிராமத்துப் பாரம்பரியம் குறித்தே பேசிக்கொண்டிருந்தது.

அதிலே அடிக்கடி “வெடக்கோழி அடிச்சி மாமனுக்குக் கொழம்பு வைச்சிருக்கேன்”' பாட்டு, வசனம், கண் சிமிட்டல் வருவதைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த வெடக் கோழி என்றால் விடலை என்று பொருள். அதாவது இளம் பருவத்தைத் தாண்டி முதிர்வை நோக்கி நகரும் பருவம். குஞ்சுக் கோழி முட்டையிடத் தயாராகும் கன்னிப் பருவம். குஞ்சு முட்டையில் இருந்து வெளிப்பட்டு அறுபதில் இருந்து எழுபது வரையிலான நாள். இந்த வெடக் கோழியைத்தான் ‘சிக்ஸ்டி பைவ்’ என்கிறார்கள்.

ஆற்றல் சிதையாமல் சமைக்க…

கடந்த வாரங்களில் பார்த்தோமே ஒரு பயறு முளை கட்டுகிறபோது அதன் ஆற்றல் முழுமையாக வெளிப்படும் என்று. அதுபோல முட்டையிடத் தயாராகும் கோழியின் ஆற்றல் விடலைப் பருவத்தில் முழு அளவுக்கு வெளிப்படும். அதேபோல கோழியுடன் இணையச் சேவலும் அந்த நாட்களில்தான் தயாராகும்.

அதற்கு முந்தைய நிலையில் கோழி (அ) சேவலை அறுத்துச் சமைத்தால் போதிய அளவு சத்துக்கூறுகள் இன்றி நீர்த்த தன்மையில் இருக்கும். முட்டையிட்டுச் சில மாதங்கள் ஆகிவிட்டாலோ கோழியைப் புணர்ந்து தனது ஆற்றலை இழந்த சேவலோ மிகுந்த நார் தன்மையுடன் இருக்கும். சதைப்பற்றே இருக்காது.

பருவம் கடந்த கோழி இறைச்சியைச் செரிக்கக் கூடுதலான ஆற்றல் தேவைப்படும். வெடக் கோழி குறைவான செரிமான ஆற்றலை நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டு, நிறைய உயிர்ச் சத்துக்களை வழங்க வல்லது.

குழந்தை பெற்ற தாய்க்கான பத்திய உணவு முறைகள் முடிந்து உடல் வலுப்பெற்ற பின்னர், கோழியடித்து நீர்க்கக் குழம்பு வைத்துத் தரும் பழக்கம் இன்றளவும் கிராமப்புறங்களில் உண்டு. இந்தக் குழம்பு தாய்க்கு ஆற்றலை வழங்குவதோடு, தாய்ப்பால் சுரப்புக்கும் உதவியாக இருக்கும்.

கோழிக்கறியின் ஆற்றல் சிதையாமல் சுவையுடன் சமைக்கும் முறையை வரும் வாரத்தில் பார்க்கலாம்.

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x