

அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்குத் தமிழக மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு 54,000 கேள்விகள் அடங்கிய சி.டி. வழங்கப்படும் என்று தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். “நீட் தேர்வுக்குத் தயாராக ரூ. 1.5 லட்சம்வரை சில மாணவர்கள் செலவுசெய்திருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலை ஏற்படுவதைத் தடுக்கவே இந்த சி.டி.யைத் தயாரித்திருக்கிறோம்.
54,000 கேள்விகளை உள்ளடக்கிய இந்த சி.டி. முப்பது மணி நேரம் ஓடும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். மற்ற மாநிலங்களில் கேட்கப்பட்டிருக்கும் மாதிரிக் கேள்விகளை ஆய்வுசெய்து இந்தக் கேள்விகளைத் தயார்செய்திருக்கிறது இதற்காக அமைக்கப்பட்ட குழு” என்றார். இன்னும் மூன்று மாதங்களில் புதிய கல்வி சீர்திருத்தங்களைத் தமிழக அரசு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா!
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை ஆகஸ்ட் 8-ம் தேதி மத்திய அரசு நியமித்திருக்கிறது. ஆகஸ்ட் 27 அன்று, ஓய்வுபெறவிருக்கும் ஜே.எஸ். கேஹருக்கு அடுத்து தலைமை நீதிபதியாக இவர் பொறுப்பேற்கவுள்ளார். கேஹர்தான் தீப மிஸ்ராவின் பெயரை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரைத்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டின் 45-வது தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவுக்கு ஆகஸ்ட் 27 அன்று பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில், கேஹருக்கு அடுத்த மூத்த நீதிபதியாக 63 வயதில் இவர் இருக்கிறார். ரங்கநாத் மிஸ்ரா, ஜி.பி. பட்நாயக் போன்றோரைத் தொடர்ந்து ஒடிசாவிலிருந்து நாட்டின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் மூன்றாவது நீதிபதி இவர். நீதிபதி தீபக் மிஸ்ரா 2018 அக்டோபர் 2 அன்று ஓய்வுபெறுவார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
இந்தியாவின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக எம். வெங்கையா நாயுடு ஆகஸ்ட் 11 அன்று பொறுப்பேற்றார். ஆகஸ்ட் 5 அன்று நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக வெங்கையா நாயுடுவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 771 வாக்குகளில், 516 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் வெங்கையா நாயுடு.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகளைப் பெற்றார். இரண்டு அவைகளிலும் சேர்த்து 785 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், அதில் 14 உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. 11 வாக்குகள் செல்லாதவை.“விவசாயப் பின்னணியைக் கொண்ட நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இந்திய அரசியலில் விவசாயத்துக்காக முறையான குரல் இன்னும் எழுப்பப்படாமல் இருக்கிறது. இந்தப் பதவியை மேலவையின் கண்ணியத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்துவேன்” என்று சொல்லியிருக்கிறார் வெங்கையா நாயுடு.
மூட்டுகளின் இயக்கத்தைக் கண்காணிக்கும் கரு
ஐஐடி-மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு அணியக்கூடிய கருவி ஒன்றைத் தயாரித்திருக்கின்றனர். கைகளின் மூட்டுகள், விரல்கள், விரல்மூட்டுகள், மணிக்கட்டு போன்ற பகுதிகளின் இயக்கத்தைக் கண்காணிக்கும்படி இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. மெல்லியதாக, கைகளில் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவி கைகளில் இரண்டாவது தோல் போலச் செயல்படும்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிசியோதெரபி பயிற்சி அளிக்கவும், தனிப்பட்ட நலன் கண்காணிப்பு அமைப்புக்கும், ரோபோடிக்ஸ் போன்றவற்றில் இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். “இந்தக் கருவியைத் தோலிலும், கையுறைகளிலும், ரோபோட்களின் மீது நேரடியாகப் பொருத்தமுடியும். இதைக் கைகளின் மூன்று மூட்டுகளில் நாங்கள் பரிசோதனை செய்திருந்தாலும், உடலின் எந்த மூட்டுப் பகுதியின் இயக்கத்தையும் இந்தக் கருவியால் கண்காணிக்கமுடியும்” என்கிறார் ஐஐடி-மும்பையின் வேதியல் துறைப் பேராசிரியர் சந்திரமவுலி சுப்பிரமணியம்.
இந்தக் கருவியால் மூட்டுகளின் இயக்கத்தைத் துல்லியமாகக் கண்காணிக்கமுடியும். வெப்பநிலை, ஈரப்பதத்தால் பாதிக்காதவகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகத் தடகளச் சேம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் தேவிந்தர் சிங் சாதனை
லண்டனில் நடைபெற்றுவரும் உலகத் தடகளச் சேம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் தேவிந்தர் சிங் கங். இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இதுவரை பெரிதும் கவனிக்கப்படாத தேவிந்தர் சிங் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.
இறுதிச் சுற்றில் நுழையக் குறைந்தபட்சம் 83 மீ., தூரம் எறிய வேண்டிய நிலையில், ‘ஏ’ பிரிவில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்குச் செல்ல வேண்டிய வாய்ப்பை இழந்தார். இந்நிலையில், ‘பி’ பிரிவில் களமிறங்கிய தேவிந்தர் சிங், தன்னுடைய மூன்றாவது, கடைசி வாய்ப்பில் 84.22மீ. தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றார். “நீரஜ் தகுதி பெறவில்லை என்று தெரிந்தவுடன், நான் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவது என முடிவெடுத்து ஆடினேன். அந்த முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார் தேவிந்தர் சிங்.
1.3 கோடி ஆண்டுகளான குரங்கின் மண்டையோடு கண்டுபிடிப்பு
கென்யாவைச் சேர்ந்த மானுடவியலாளர்கள், 1.3 கோடி ஆண்டுகள் பழமையான ஓர் குழந்தை குரங்கின் மண்டைஓட்டை 2014-ம் ஆண்டு கண்டுபிடித்திருக்கின்றனர். வட கென்யாவில் துர்க்கானா ஏரிக்கு அருகிலிருக்கும் ‘நபுடெட்’ (Napudet) என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் குரங்கின் மண்டைஓடு, மத்திய மியோசின்(Miocene) காலத்தைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எலுமிச்சை பழத்தின் அளவில் இருக்கும் இந்தக் குரங்கின் மண்டைஓட்டைப் பற்றிய ஆய்வு முடிவுகள், ஆகஸ்ட் 10-ம் தேதி. ‘நெச்சர்’ (Nature) இதழில் வெளியாகியிருக்கின்றன.
இந்தக் குரங்குக்குத் துர்க்கானா மொழியில் மூதாதையர் எனப் பொருள்படும் ‘அலேசி’ என்ற பெயரை ஆராய்ச்சியாளர் சூட்டியிருக்கின்றனர். “‘நயான்ஸாபிதிகஸ்’ (Nyanzapithecus) இனத்தைச் சேர்ந்த இந்த ‘அலேசி’ குரங்கு ஆப்ரிக்காவில் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவகை மனிதக் குரங்கினத்தைச் சேர்ந்தது. அலேசியை ஆராய்ச்சி செய்ததில், இந்த இனம், மனிதக் குரங்குகள், மனிதர்களின் தோற்றத்துக்கு நெருக்கமாகவிருப்பது தெரியவந்திருக்கிறது. அத்துடன், அந்தத் தோற்றம் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது” என்கிறார் துர்க்கானா பேசின் மையத்தின் மானுடவியல் பேராசிரியர் இசையா நெங்கோ (Isaiah Nengo).