Published : 17 Dec 2013 17:45 pm

Updated : 17 Dec 2013 17:55 pm

 

Published : 17 Dec 2013 05:45 PM
Last Updated : 17 Dec 2013 05:55 PM

“தாக்கங்களின்றி படைப்பு இல்லை” : மூடர் கூடம் படைத்த நவீனுடன் ஒரு கலந்துரையாடல்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 'போட்டிப் பிரிவில்' இடம்பெற்றுள்ள 'மூடர் கூடம்', ராணி சீதை ஹாலில் திரையிடப்பட்டது.

சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள், வசனங்கள் வரும் முன்பே சிரிப்பலை எழத் தொடங்கியதில் இருந்தே பெரும்பாலானோர் ஏற்கெனவே படத்தை ரசித்தவர்கள் என்பதை உணர முடிந்தது.


தனது படக் குழுவினரோடு வந்திருந்த நடிகர் - இயக்குனர் - தயாரிப்பாளர் நவீன், படம் முடிந்தும் பார்வையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தெளிவாக பதிலளித்தார்.

அந்தக் கலந்துரையாடலின் சில பகுதிகள்...

"இந்தப் பட விழாவில் மூடர் கூடம் படத்தைப் பார்த்து, ரசித்து அவ்வப்போது கைதட்டல்கள் மூலம் பாராட்டுகளைத் தெரிவித்ததற்கு நன்றி. இது ஒரு டீம் ஒர்க். நவீன் என்ற தனிப்பட்ட ஒருவரின் படைப்பு அல்ல. எல்லாரும் தங்கள் வியர்வை சிந்தி, அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால்தான் இது சாத்தியமானது."'மூடர் கூடம்' கதை, இயக்குனர் கே.பாலச்சந்தரின் 'நாணல்' படத்தை நினைவுபடுத்துகிறதே?

"எந்த ஒரு படைப்பும், மற்ற சில படைப்புகளை நினைவூட்டுவது இயல்பானது. என்னைப் பொருத்தவரையில், சினிமா என்பது ஒரு படைப்பாளியின் தாக்கங்களில் இருந்துதான் உருவாகிறது. எனது சிறு வயது முதல் நான் கண்ட சமூகம், சமூகத்தின் மீதுள்ள எனது கோபம், நான் ரசித்த சினிமா, நான் ரசித்த இசை, என்னைப் பாதித்த சம்பவங்கள்... இப்படி எல்லாவிதமான தாக்கங்களின் காரணமாகவே என் படைப்பைத் தந்திருக்கிறேன்.

நான் மதிக்கும் மிகச் சிறந்த படைப்பாளிகளில் கே.பாலச்சந்தரும் ஒருவர். அவரது பல படங்களைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், நாணல் படத்தை இதுவரை பார்க்கவில்லை. மூடர் கூடத்தில் நான் சொல்லியிருப்பது புதிய கதை அல்ல. ஏற்கெனவே நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் கையாளப்பட்ட கதைதான். தமிழில் வெளிவந்த 'கோல்மால்' என்ற திரைப்படமும் இதுபோன்றதுதான் என்றார்கள். நான் கடந்துவந்த படங்களின் பாதிப்பும், படித்த புத்தகங்களின் தாக்கங்களும் இதில் இருக்கிறது. ஆனால், நான் கதை சொன்ன விதம், சினிமாவைக் கையாண்ட விதம்தான் நவீன் என்ற படைப்பாளியைத் தனித்துவப்படுத்துகிறது."நீங்களே நடித்தது ஏன்? ஹீரோ யாரையும் அணுகவில்லையா?

"நவீன் கதாப்பாத்திரத்தில் நான் நடிப்பதற்கு திட்டமிடவில்லை. அது தானாக அமைந்த ஒன்று. தமிழ் சினிமாவில் மூன்று, நான்கு படங்கள் நடித்த ஹீரோ ஒருவரைத்தான் அணுகினேன். அவரிடம் கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அவரிடம் முழு ஸ்கிரிப்டையும் கொடுத்து ரிகர்சலுக்கு வரச் சொன்னேன். அவரிடம் இருந்து பதிலே இல்லை. தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். பிறகு, அவருடைய அப்பாவிடம் பேசியபோது, 'ஃபைட் சீன், கிஸ்ஸிங் சீன், டூயட் இல்லாமல் எப்படி? அதையெல்லாம் சேருங்கள்'. நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். கடைசியில் நானே நவீனாக நடிக்க வேண்டியதாகிவிட்டது."

இந்தப் படத்துக்கு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள்... உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் தரும் விதத்தில் இதைப் பார்க்கிறோம்.

"தமிழ் தொன்மையான மொழி. நம் தாய்மொழிக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்பதையே பதிவு செய்திருக்கிறேன். இதில் மிகை எதுவும் இல்லை. உலக அரங்கில் தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் எப்போது நல்ல மதிப்பு உண்டு. ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் தமிழ் சினிமாவைக் கொண்டாடுகிறார்கள்."பிளாக் காமெடி ஜானரில் படம் எடுக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

"நான் கதை, திரைக்கதையை தயார் செய்துவிட்டு, படத்தை எடுத்து முடித்துவிட்டுப் பார்க்கும் வரையில் இந்த ஜானர் பற்றியெல்லாம் எந்தக் கவலையும்படவில்லை. இந்த ஜானர் பிரித்துப் பார்க்கும் வழக்கம் எல்லாம் இப்போதுதான் வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ஆதிகாலத்தில் இருந்து பல பிளாக் காமெடி படங்கள் வந்திருக்கின்றன. பேசும்படம், அபூர்வ சகோதரர்கள் என எத்தனையோ இருக்கின்றன. சினிமாவை ஜானர் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த நோக்கத்துடனும் நான் சினிமாவை அணுகுவது இல்லை."

மூடர் கூடம் படத்தை எடுத்து முடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாக செய்திகளில் படித்திருக்கிறேன். அதுபற்றி

சொல்லுங்கள்.

"2011-ல் பட வேலைகளைத் துவக்கினோம். படப்பிடிப்பின்போது பணம் இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறோம். அக்கவுன்டில் காசு இல்லை என்று தெரிந்தே ஏ.டி.எம்.மில் கார்டை நுழைத்து ஜீரோ பேலன்ஸ் இருப்பதை உறுதி செய்வதும் உண்டு.

எங்கள் படக்குழு இந்தக் கதை மீதும், என் மீதும் நம்பிக்கைக் கொண்டிருந்தது. கலைஞர்கள் பலரும் சம்பளம் வாங்காமல் உழைத்தனர். காஸ்ட்யூம் டிசைனர் உள்ளிட்ட கலைஞர்களும் எதையும் எதிர்பார்க்காமல் முழு ஒத்துழைப்பைத் தந்தனர். அவர்கள் எல்லாம் இல்லையென்றால், இப்படம் எடுப்பது சாத்தியமே ஆகியிருக்காது. இந்த அனுபவத்தின்மூலம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான்... 'எப்படியும் ஒரு சினிமாவை எடுத்துவிட முடியும்' என்பதுதான் அது. மூடர் கூடம் வர்த்தக ரீதியிலும் வெற்றிப் படமான கூடுதல் மகிழ்ச்சி."உங்களது பெர்சனல் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

"நான் படித்து வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில்தான். எனது பள்ளி வயதிலேயே அப்பாவை இழந்தேன். வீட்டில் எனது பொறுப்பு கூடியது. பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, படித்து சில நல்ல இடங்களில் பணிபுரிந்தேன். அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்துவிட்டு, பிறகுதான் எனது கனவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினேன்.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது முளைத்த அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் சினிமாவில் நுழைந்தேன். அதுவரையிலான எனது அனுபவங்களும், நான் கண்டு வியந்த படைப்புகளுமே என் படைப்பாற்றலுக்கு முக்கியப் பங்காற்றுகின்றன."

திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற லட்சியம் உள்ளவர்கள் நிறைய கதைகளை மனத்துக்குள் போட்டு புதைத்து வைத்திருப்பார்கள். அதில் கனவுப் படங்களும் இருக்கும். அதுபோன்ற ஒரு படம்தானா இது?

"இல்லை. படத்துக்கான பொருளாதாரத் தேவையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி, நான்கு சுவர்களுக்குள் கதை நகரும்படியான கதையைத் தேர்ந்தெடுத்தேன்."

படம் முழுவதும் கம்யூனிஸ்ட் வசனங்கள் இடம்பெற்றுள்ளதே... நீங்கள் கம்யூனிஸ்டா?

"நம் சமூகத்தில் எது தவறு எது சரி என்று குத்திக்காட்டுவதற்கு கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சமூக அக்கறை இருந்தாலே போதும். எனது சமூகத்தில் நான் பார்த்ததை, எது சரியாக இருக்கும் எனப் பட்டதை, சமத்துவத்தின் அவசியத்தை வசனங்களில் சொல்லியிருக்கிறேன். இதற்கு கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லையே?"

கம்யூனிஸ்ட் அடையாளம் ஏற்பட்டுவிடும் என்று பயப்படாதீர்கள். நாங்கள் இருக்கிறோம். நீங்கள் தைரியமாக கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளலாமே!

நான் பயப்படவில்லை தோழரே. கம்யூனிசத்தை நான் முழுமையாக படித்ததில்லை. மார்க்சிஸம் பற்றியெல்லாம் கற்கவில்லை. அவற்றை முழுமையாக கற்றுக்கொண்ட பிறகு, அதைத் தழுவிக்கொள்ளலாமா? என் எண்ணத்துடன் ஒத்துப்போகிறதா? அதிலுள்ள கோட்பாடுகளில் உள்ள சாதக, பாதகங்களை அலசி முடிவு செய்துகொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

படத்தில் ஒரு சிறுமி கதாப்பாத்திரம், உங்கள் கேரக்டர் மீது ஈர்ப்புக்கொள்வது போல் காட்டியிருக்கிறீர்கள். அதன் பின்னணி?

ஆம். படத்தில் பப்பி லவ்-வை பதிவு செய்திருக்கிறேன். உண்மையில், அதுவும் நான் கடந்து வந்த அனுபவத்தில் இருந்து சொன்னதுதான். ஒரு ஓவியத்தை வரைவது ஓவியனின் வேலை. அதில் இருந்து அர்த்தங்களைப் புரிந்துகொள்வது பார்வையாளர்கள் தத்தமது எண்ணங்களைப் பொறுத்தது. இதுவும் அப்படித்தான், இதை பப்பி லவ் என்றோ, இன்ஃபாக்ட்சுவேஷன் என்றோ எப்படி வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

உங்களோடு ஃபேஸ்புக்கில் நட்புகொண்டுள்ளேன். உங்களது முழுப் பெயர் நவீன் ஷேக் தாவூத். தமிழ்த் திரையுலகிலுள்ள சிலரைப் போலவே நீங்களும் உங்களது இஸ்லாமிய அடையாளத்தை மறைப்பது ஏன்?

"இல்லை. எனக்கு அப்படி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. என் அம்மா நாவல்கள் படிப்பார். அவருக்குப் பிடித்த நாவல் கதாப்பத்திரத்தின் பெயர் நவீன். அந்தப் பெயரிலேயே என்னையும் அழைக்க ஆரம்பித்தார். எல்லாருமே அப்படித்தான் என்னை அழைப்பார்கள். என் ஊரில் நவீன் என்றால்தான் என்னைத் தெரியும். ஷேக் தாவுத் என்றால் யாருக்கும் தெரியாது. அப்படித்தான் நவீனையே நீடிக்க வைத்துவிட்டேன். இன்னொரு தகவல்... நான் ஒரு நாத்திகன்."


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x