Last Updated : 04 Jul, 2017 10:45 AM

 

Published : 04 Jul 2017 10:45 AM
Last Updated : 04 Jul 2017 10:45 AM

தகுதிக்குக் கிடைத்த வெற்றி!

தேர்வு நடைபெறுமா, இல்லையா என்பதில் தொடங்கித் தேர்வு அறைக்குள் நுழைவதற்கான விதிமுறைகள், கேள்வித்தாள் அமைக்கப்பட்ட விதம் என ஒவ்வொரு கட்டத்திலும் தமிழக மாணவர்களை உலுக்கியெடுத்துவிட்டது நீட் தேர்வு. இரு வாரங்களுக்கு முன்பு அதன் முடிவும் வெளியானது. அதில் நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் 38.84 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

ஏற்றமும் இறக்கமும்

பிளஸ் டூ தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்களைக் குவித்த தமிழக மாணவர்கள்கூட, நீட் தேர்வின் முதல் 25 ரேங்குக்கான அகில இந்தியத் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 313 பேர் பெண்கள். இதில் எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் 6 ஆயிரத்து 18 பேர்.தேர்ச்சிபெற்றவர்கள் பட்டியலில் தன்னுடைய பெயரும் இருப்பதைக் கண்டார் பி. சவுமியா. ஆனாலும் அவரால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை.

காரணம் பிளஸ் டூவில் 1200-க்கு 1187 மதிப்பெண்கள் பெற்றுத் தர்மபுரி மாவட்டத்திலேயே இரண்டாவது மாணவியாக ஜொலித்தவரால், நீட் தேர்வில் 720-க்கு 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்கிற கனவோடு இரவுபகலுமாகத் தேர்வுக்குத் தயாரான தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்ற பதைபதைப்போடு இருக்கிறார். இந்நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளார் சவுமியா.

இடஒதுக்கீட்டை பயன்படுத்தித்தான் பெரும்பாலான மாணவ- மாணவிகள் மேற்படிப்பு படிக்க வருகிறார்கள். தகுதியால் அல்ல என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகக் கூறப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவப் படிப்புத் தரவரிசையிலும் பொதுத் தேர்விலும் முழு மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் சவுமியா அதை மறுதலித்திருக்கிறார். ஆனால் இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டிய தருணத்தில்தான் சோர்வோடு காணப்படுகிறார் சவுமியா.

டியூஷன் இல்லை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் இவர். சிறுபிராயத்திலிருந்து மருத்துவராகும் கனவுடன் வளர்ந்த அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற கிராமத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் அவருடைய பெற்றோர் படிக்க வைத்தனர். அவருடைய தந்தை பாரதி, திருவண்ணாமலை மாவட்டம் இளங்குண்ணி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், தாய் சித்திரைச்செல்வி சேலம் அரசுக் கல்லூரி தமிழ் துறை உதவிப் பேராசிரியர். இருவரும்தான் தனக்குச் சிறந்த வழிகாட்டிகள் என்கிறார் சவுமியா.

இத்தனை ஆண்டு காலப் பள்ளி படிப்பில் ஒரு முறைகூட தனிப்பயிற்சி வகுப்புகள் எதிலும் சவுமியா படித்ததில்லை. தன்னுடைய முனைப்பால் பிளஸ் டூவில் மொழி பாடங்கள் தவிர்த்த அத்தனை பாடங்களிலும் சதம் அடித்திருக்கிறார். உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் என அனைத்திலும் முழு மதிப்பெண் குவிக்க முடிந்தவரால், ஏன் நீட் தேர்வில் சாதிக்க முடியவில்லை?

“போன வருடமும் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது என் அண்ணன் மெனக்கெட்டுப் படித்தார். ஆனால், 2016-ல் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்தது. இந்த ஆண்டும் கடைசிவரை தேர்வு நடக்காது என்றே சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதனால் தேர்வுக்கு 20 நாட்கள் முன்னதாக நீட் தேர்வுக்குத் தயாரானேன்.

நீட் தேர்வில் பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டிலுமிருந்து சமமான எண்ணிக்கையில் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், எங்களுக்கோ இரண்டு ஆண்டுகளும் பிளஸ் டூ பாடம் மட்டுமே கற்றுத் தரப்பட்டது. அதனால் பாதிக் கேள்விகளுக்கு என்னால் விடையளிக்க முடியவில்லை. உயிரியல் என்னுடைய விருப்பப் பாடம் என்பதால், அதன் பிளஸ் 1 பாடப் பகுதிகளிலும் சிறப்பாகத் தயாராகி இருந்தேன். அது தொடர்பான 90 கேள்விகளுக்கு எளிதாக விடையளித்ததால் மட்டுமே 174 மதிப்பெண்கள் பெற்றேன்” என்கிறார்.

பிளஸ் 1 பாடம் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் தன்னால் எம்.பி.பி.எஸ். படிப்பை எளிதாக எட்டிப் பிடித்திருக்க முடியும் என்கிற ஏக்கம் அவரிடம் மேலோங்குகிறது. அதனால் எப்படியாவது இந்த ஆண்டும் நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கிவிடாதா எனக் காத்திருக்கிறார்.

இனி என்னவாகும்?

சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களால் நீட், ஜே.இ.இ. போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளைச் சிறப்பாக எதிர்கொள்ள முடியவில்லை. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிளஸ் 1 பாடம் சரியாகக் கற்றுத் தரப்படுவதில்லை என்பதே இதற்கான அடிப்படைக் காரணம் என்பது சவுமியாவின் மூலம் நிறுவப்படுகிறது.

பிளஸ் 1-க்கும் இனிப் பொதுத்தேர்வு எனத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு, இதற்கான விடிவு பிறப்பதற்கு உள்ள பிரகாசமான வாய்ப்பை சுட்டிக்காட்டுகிறது. பிளஸ் 1-க்கான பாடத் திட்டம், பாடம் கற்பிக்கும் முறை, தேர்வுக்கான விதிகள் உள்ளிட்ட அனைத்தையும் மாற்றி அமைப்பதற்கான கூட்டம் நடந்துமுடிந்திருக்கிறது. இந்தச் சூழலில் அது எவ்வாறு அமல்படுத்தப்படப்போகிறது என்பதில்தான் இனிப் படிக்கவிருக்கும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

ஒடுக்குமுறையை வென்று நுழைந்தவர்!

சவால் மிகுந்த தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜே.இ.இ. (மெயின்ஸ்) நுழைவுத் தேர்வில் இதுவரை யாரும் சதம் அடித்ததில்லை. ஆனால் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த கல்பி வீர்வால் இந்த ஆண்டு தேர்வில் 360-க்கு 360 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். 2017 ஆண்டுக்கான அகில இந்திய முதல் ரேங்க் பெற்ற மாணவர் என்கிற பெருமையைப் பெற்றார். இவருடைய தந்தை கம்பவுண்டர், தாய் பள்ளி ஆசிரியை. ஜே.இ.இ. தேர்வு மட்டுமல்ல 2013-ல் இந்திய ஜூனியர் அறிவியல் ஒலிம்பியட், 2014-ல் நேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன் உள்ளிட்ட பல கடினமான தேர்வுகளில், தன்னுடைய அறிவாற்றலை ஏற்கெனவே இவர் நிரூபித்துள்ளார். சமூகப் படிநிலையில் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு உரிய இடம் அளிக்க தேசியத் தொழில்நுட்ப நிறுவனங்களும், இந்தியத் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களும் காத்துக் கிடக்கின்றன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x