Published : 08 Jul 2017 10:20 AM
Last Updated : 08 Jul 2017 10:20 AM

கடலம்மா பேசறங் கண்ணு 10: ஜி.பி.எஸ். பிதாமகன் யார்?

கடலோடிகளின் இடம் கணிக்கும் உத்திக்கு முத்தாய்ப்பாக நிற்பது தாழ்த்துவலை என்னும் பழந்தொழில்நுட்பம். தனி அடையாளம் ஏதுமற்ற கடல் பெருவெளி நீர்ப்பரப்பில், வலையை விரித்துவிட்டு (அமிழ்த்தி வைத்தல்) கரை திரும்பிவிடுவது; ஓரிரு நாட்களுக்குப் பிறகு கடலுக்குள்ளே வலை விரித்த இடத்துக்குச் சென்று குறிப்பிட்ட இடத்தில் துல்லியமாக நங்கூரமிட்டு வலையை இழுத்து மீன்களைக் கழித்துவிட்டு, வலையை மீண்டும் கடலில் அமிழ்த்திவைத்துவிட்டு அறுவடை மீனுடன் கரை திரும்புவது. தூண்டில் மீன்பிடித் தொழிலிலும் மீன் அறுவடைக்களங்களைக் குறிப்புணர்ந்து கணித்துப் போடுவது உண்டு. இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிறது?

ஒரே அறிவியல்

நிலத்தில்கூட இடங்களை அடையாளம் காண்பது சிக்கலானது. பெரிதும் திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட சண்டிகர் நகரின் வீதிகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கண்டடைய நானும் திணறிப் போயிருக்கிறேன். கடலில் நேற்று போன இடத்தைச் சரியாகத் தடம்பிடித்து இன்றும் போய்ச் சேர்வது சாத்தியம்தானா? மீனவர்களுக்கு அது சாத்தியமே. இன்று உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஜி.பி.எஸ். என்னும் இடங்கணிப்பான் தொழில்நுட்பத்தின் பிதாமகன் கடலோடிதான்.

ஜி.பி.எஸ். தொழில்நுட்பமும் கடலோடிகளின் இடங்கணிப்பு (கணியம்) நுட்பமும் செயல்படுவது ஒரே அறிவியல் கருதுகோளின் அடிப்படையில்தான்: அது முக்கோணக் கணிப்பு முறை (Triangulation). மலைமுகடுகள், உயர்ந்த மரங்கள் போன்று கரையில் புலப்படும் ஏதேனும் மூன்று எல்லைகளைக் கணக்கிட்டு, கடலில் தாங்கள் இருக்குமிடம் எது என்று கடலோடிகள் கணித்துக்கொள்கிறார்கள்: நேர்க் கணியம், மேற்குக் கணியம், கிழக்குக் கணியம். புழங்குகின்ற கடல்வெளியின் திசையைப் பொறுத்து இது வேறுபடுகிறது.

சுறாப் பார்கள் (பாறை), கப்பல் பார்கள், இயற்கைப் பார்கள், மடை (சேறு மிகுந்த, மீன்கள் இனப்பெருக்கம் செய்கிற பகுதிகள்) – இப்படிப் பல்வேறு அறுவடைக் களங்களை ஒவ்வொரு புழங்கு மண்டலத்திலும் அப்பகுதியின் மூத்த மீனவர்கள் கணித்திருப்பார்கள். வாய்மொழியாக, மரபறிவாக இந்தத் தகவல்கள் இளைய தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன.

அறிவியல் முன்னோடி

ஜி.பி.எஸ். கருவி இடங்களைக் கணிப்பது எப்படி? பூமிக் கோளத்தைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்கள் இரண்டு வகையானவை: வட– தென் திசையில் சுற்றிவரும் துருவக் கோள்கள் (Polar satellites), பூமியின் சுழற்சிக்குத் துல்லியமாக நகர்ந்து குறிப்பிட்ட புவிப்பரப்பைப் படம்பிடித்து பூமிக்கு அனுப்பும் நில-நிலைப்புக் கோள்கள் (Geo-stationary satellites). இந்த இரண்டாம் வகையில் மட்டும் 24-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் உண்டு. ஒரு ஜி.பி.எஸ். கருவி ஏதேனும் மூன்று செயற்கைக்கோள்களிலிருந்து சமிக்ஞை (Signal) பெற்றுவிட்டால் போதும், புவியிடத்தைத் துல்லியமாய்க் கணித்துவிடலாம். மூன்று கோள்களிலிருந்து சமிக்ஞை வந்துசேரும் கால அவகாசம்தான் இக்கணிப்பின் சூட்சுமம். நேரம் இங்கே அணுவியல் கடிகாரத்தால் (Atomic Clock) கணிக்கப்படுகிறது.

ஒரு நானோ செகண்ட் (ஒரு நொடியில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு) பிழையானால்கூட கணிப்பில் சில நூறு மீட்டர் பிழை நேர்ந்துவிடும். அமெரிக்க செயற்கைக்கோள்கள் பெரும்பான்மையும் பாதுகாப்பு-போர்த் தந்திரக் காரணங்களை முன்னிட்டு சுமார் 200 மீட்டர் பிழையைப் புகுத்தியுள்ளன என்பது இன்னொரு சுவாரஸ்யமான தகவல்.

நீர், நில, வான்வெளிப் பயணங்கள், போர் வியூகங்கள், குற்றத்தடுப்பு, நிலவள ஆய்வு, பேரிடர் முன்கணிப்பு, மேலாண்மை உள்ளிட்ட ஏராளமான களங்களில் தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாகிவிட்ட இந்த ஜி.பி.எஸ். கருவியின் முன்னோடிகள், சந்தேகமின்றி கடலோடிகளே.

(அடுத்த வாரம்: விரல் நுனியில் இருக்கும் கண்)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x