

அமெரிக்க ராப் பாடகர் எமினெம்மின் பாடலை, கர்னாடக இசை ராகங்களோடு இணைத்து 2016-ல் சிறுவன் ஸ்பர்ஷ் ஷா பாடியபோது, கேட்டவர்கள் அனைவரும் அசந்துபோனார்கள். ஏதோ ஒரு பாடலை மட்டுமல்ல; அவர் ‘ராகா-ராப்’என்ற புதுப் பாணி இசை வடிவத்தையே நிகழ்த்திக்காட்டினார்.
ஸ்பர்ஷ் ஷா, பிறக்கும்போதே, 30-40 எலும்புகள் உடைந்த நிலையில் பிறந்தார். பிறவியிலேயே ஆஸ்டியோஜெனிஸிஸ் இம்பெர்ஃபக்டா (Osteogenesis imperfecta) என்ற குணப்படுத்த முடியாத நோய் அவருக்கு இருந்தது. பிறந்து 6 மாதங்கள் கடந்த பிறகே, அவருடைய பெற்றோர் ஸ்பர்ஷை முதன்முதலில் கையில் ஏந்தினார்கள். அந்த அளவுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இதுவரை அவருக்கு 135 முறை எலும்பு முறிவுகள் ஏற்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார்.
பல இரும்புக் கம்பிகள், திருகுகள் அவர் உடலில் பொருத்தப்பட்டுள்ளன. எவ்வளவு முறை தனது எலும்புகள் உடைந்தாலும் மனம் உடையாமல், 7 ஆண்டுகளுக்கு மேலாக இந்துஸ்தானி இசையையும் 3 ஆண்டுகளாக மேற்கத்திய இசையையும் பாடக் கற்றுவருகிறார். 13 வயதில் 12 பாடல்களை இயற்றியுள்ளார்.
18 நொடிக்குள் ஆங்கிலத்தின் கடினமான வார்த்தைகளை ‘மளமள’வெனச் சொல்கிறார். கணிதத்தில் ‘பை’ எனப்படும் விதியின் 250 இலக்கங்களை மனப்பாடமாகச் சொல்கிறார். சிறந்த பேச்சாளர், அற்புதமான பாடகர், மற்றவர்களை ஊக்குவிப்பதில் சிறந்தவர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். ஆனால், இவையெல்லாம் பெரிய விஷயமே அல்ல. உண்மையில் ஸ்பர்ஷின் தனித்துவம் அவருடைய தன்னம்பிக்கைதான்.
இவரது இந்தத் திறமையைக் கண்டு வியந்த டெட் அமைப்பினர், இவரைப் பேச அழைத்தனர். அந்த மேடையில், ‘சாத்தியமற்ற ஒன்றைச் சாத்தியமாக்குதல்’ என்ற தலைப்பில் நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து பேசினார் ஸ்பர்ஷ். தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து ஸ்பர்ஷ் சொல்லும் நான்கு விஷயங்கள் இவைதான்: “உங்களுக்கு எதில் பேரார்வம் உள்ளது என்பதை முதலில் கண்டறியுங்கள். எத்தனைத் தடைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் அதிலிருந்து பின்வாங்காதீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் நல்ல விஷயங்களை பிறருக்கும் கொடுத்து உதவுங்கள். பெரிய கனவு காணுங்கள்.”
சக்கர நாற்காலியில் இருந்தபடியே அத்தனை உற்சாகத்தோடும் ஆங்கிலப் புலமையோடும் அவர் உரையாற்றுவதையும் பாடுவதையும் பார்த்தால், வாழ்க்கையில் பெருநம்பிக்கை பிறக்கிறது. தன்னம்பிக்கைக்கான உரைவீச்சை இதைவிடச் சிறப்பாக ஒருவரால் தன்னுடைய வாழ்க்கையிலிருந்தே எடுத்துச்சொல்ல முடியாது.
ஸ்பர்ஷின் உரை
</p>