Published : 22 Jul 2017 10:38 AM
Last Updated : 22 Jul 2017 10:38 AM

மூழ்கவே மூழ்காத படகு

கடல், ரயில், யானை - இம்மூன்றும் நமக்குச் சலிப்பூட்டுவதில்லை. போர்க் கப்பல், சரக்குக் கப்பல் (Bulk cargo vessel), சரக்குப் பெட்டகக் கப்பல் (Container vessel), கச்சா எண்ணெய்க் கப்பல், அதிவிரைவுக் கண்காணிப்புப் படகு - இவை எதுவும் ஏற்படுத்தாத பிரமிப்பைக் கட்டுமரத்தில் நின்று என் தந்தையார் அநாயசமாகத் துடுப்புத் துழையும் காட்சி எனக்குத் தருகிறது.

அலையைக் கடத்தல் என்னும் பழங்குடி சாகசம், எனக்குள் அச்சத்தையும் பரவசத்தையும் ஒருசேரத் தூண்டும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தின மேற்குக் கடற்கரை பொதுவாக ஆழமும் அலைச்சீற்றமும் இணைந்த கடல் பகுதி. ஆனி - ஆடி மாதங்களில் நான்கைந்து மரம்பிடி- சாகச வீரர்கள் விடியலில் ஒரு கட்டுமரத்தைக் கடலுக்குள் செலுத்தப் போராடும் காட்சி இங்கே வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பனைபோல் எழும் அலையிடம் தோற்றுக் கரைக்குக் கட்டுமரம் அடித்துவரப்படும். இப்படியாக, நீரோட்டத்தின் போக்கில் ஓரிரு கிலோமீட்டர் தொலைவுக்கு கரைநெடுகக் கட்டுமரத்தை கரைநீரோட்டம் இழுத்துச் சென்றுவிடும்.

இரண்டு மணி நேரப் போராட்டத்தில் மரம் பிடிப்பவர்கள் தளர்ந்துபோக, கரையில் சேல் பார்த்துக்கொண்டிருக்கும் மூத்தவர்கள் கட்டுமரத்தை விலக்கிப் போடுவார்கள். கடலலை சற்று ஓயும்போது கட்டுமரத்துடன் தயார் நிலையில் காத்திருக்கும் எல்லோரும் கடலுக்குள் ஒரே நேரத்தில் தள்ளிக்கொண்டு போக, அலைவாய்க் கரையிலிருந்து `தள்ளப்போ, துழையப்போ’ என்று எல்லோரும் பெருங்குரலில் கூவி ஊக்கப்படுத்துவார்கள்.

சாகச உணர்வு

அலையைக் கடப்பது மட்டுமல்ல, கடற்பரப்பின்மேல் உயிர்மீந்து கிடப்பதே சாகசம்தான். `ஒத்தனாமரம்’ துழைந்து (ஒற்றையாள் இயக்கும் சிறு கட்டுமரம்) அலைகளைக் கடந்து, அணியத்தில் பருமல் கட்டி, பாயேற்றி, வேகப்பாய்ச்சலில் மீண்டும் கடைமரம் வந்து, சுக்கான் பிடித்துக் கம்பீரமாய் நிற்கும் கட்டியக்காரன் என்னும் குள்ளமான என் ஊர்க் கடலோடி நினைவில் வந்துபோகிறான்; விரையும் புரவிகளைத் தட்டிக்கொடுக்கும் தேரோட்டி போல “மரமே! மாரியா மேல எளும்பிப் போ மரமே!” என்று அவன் கம்பீரக் கர்ஜனை செய்கிறான்.

கடலை ஒட்டுமொத்தமாக நான் விட்டுப் பிரிந்துவிட்ட காலத்தில், ஒரு கிறிஸ்துமஸ் நாளில் என் தொடக்கப்பள்ளி வகுப்புத் தோழர்களான இரண்டு கடலோடிகள் கட்டுமரத்தில் என்னை ஏற்றிச் சென்று பாய்வைத்து, கிழக்கே விவேகானந்தர் பாறைவரை சென்று திரும்பிய பயணம் இன்றும் நினைவில் நிற்கிறது. பாய் புடைத்துக் காற்றில் பறப்பதுபோல் மாரியாவின்மேல் குதித்துப் பாய்ந்தவாறும் மாரியாவைக் கிழித்தவாறும் வேகமெடுத்துப் போகும் கட்டுமரத்தின் இடது ஓரத்தில் நடுக்கத்துடன் உட்கார்ந்திருந்தேன். வருகிற மாரியா எல்லாம் என் முகத்தில் கடல்நீரை அறைந்துகொண்டிருந்தன. 'எப்போது கரை சேர்வோம்' என்று மனது ஏங்கத் தொடங்கியது. அதேநேரம், கடைமரத்தில் அநாயசமாக சுக்கான் பிடித்தபடி கம்பீரமாய்க் கடலைப் பார்வையிடும் என் நண்பனின் முகத்தில் அரும்பி நின்ற சாகச உணர்வைக் கவனித்தேன்.

நெகிழ்வான மரம்

கட்டுமரம் என்பது வெறும் மரக்கட்டைகளின் தொகுப்பல்ல; மூன்று லட்சம் கிலோமீட்டர் நீண்டுகிடக்கும் உலகக் கடற்கரை நெடுக பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கடல் பழங்குடிகள் செதுக்கிச் செதுக்கி மெருகேற்றிய அற்புதக் கலைப்படைப்பு.

உலோகத் தனிமங்களின் பண்புகளில் முக்கியமானது அவற்றின் நெகிழ்தன்மை: தகடாக அடிக்கலாம், கம்பியாக நீட்டலாம். கட்டுமரத்தின் தனித்தன்மையும் இந்த நெகிழ்தன்மைதான்! மரக்கட்டைகளின் நீளத்தையும் எண்ணிக்கையையும் மாற்றிக்கொள்வதன் மூலம் அதை ஒற்றையாள் மரம், மடிவலை, கடல் தங்கல் ஓட்டுக்கான மரம் என்பதாகப் பல்வேறு பரிமாணங்களில் வடிவமைத்துக் கொள்ளலாம். எளிதாகப் பிரித்து உலர்த்தி, மீண்டும் சேர்வை செய்துவிடலாம். நடுக்கடலில் கவிழ்ந்தால் புரட்டிப் போடலாம். கடல் நீர் வெளியேற இடைவெளிகள் அதில் இருப்பதால் கட்டுமரம் மூழ்கவே மூழ்காது.

(அடுத்த வாரம்:

காலத்தை வென்ற கட்டுமரம்)

கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும்

கடல் சூழலியல்

- வள அரசியல் ஆய்வாளர்

தொடர்புக்கு: vareeth59@gmail.com

சொல் புதிது

சேல் பார்த்தல்

- கடலின் போக்கை அவதானித்தல்

பருமல் - பாய்மரத்தைக் கட்டும் குறுந்தடி

அணியம் - கட்டுமரம் / படகின் முன்பகுதி

மாரியா - உட்கடல் பரப்பில் உருவாகும் அலை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x