Last Updated : 18 Jul, 2017 11:02 AM

 

Published : 18 Jul 2017 11:02 AM
Last Updated : 18 Jul 2017 11:02 AM

நாடு விட்டு நாடு நீளும் வேலை!

மெக்கானிகல் பொறியியல் பட்டதாரிகளுக்கு, பைப்பிங் பொறியியல்போல பைப்லைன் பொறியியலும் (Pipeline Engineering) நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குகிறது. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? வீட்டு மொட்டைமாடி தொட்டியிலிருந்து நம் வீட்டுக்குள் தண்ணீர் கொண்டுவரும் குழாய் பைப்பிங். நகராட்சி தொட்டியிலிருந்து நம் வீட்டுக்குத் தண்ணீர் கொண்டுவரும் குழாய் பைப்லைன். அதாவது ஓர் ஆலைக்குள் திரவத்தைக் கடத்தும் குழாய் பைப்பிங். ஒரு ஆலையிலிருந்து மற்றொரு ஆலைக்குத் திரவத்தைக் கடத்தும் குழாய் பைப்லைன்.

பைப்லைனின் கதை

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு இப்படி ஏதோ ஒரு வடிவில் பெட்ரோலியப் பொருட்களை நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். ஆனால், பெரும்பாலான பெட்ரோலியக் கிணறுகள் இருப்பதோ அரேபிய வளைகுடா நாடுகளில்தான். இந்தியாவைப் பொறுத்தவரை அசாம், குஜராத்தின் மிகச் சில பகுதிகளில் மட்டுமே எண்ணெய் வளம் உள்ளது. சுத்திகரிப்பு ஆலைகளோ விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களில் மட்டுமே உள்ளன.

இந்நிலையில், கச்சா எண்ணெய் கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்படுகிறது. பின்பு இங்குள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கப்பட்டு, வெவ்வேறு வடிவங்களில், நாடெங்கும் ரயில், டேங்கர் லாரி ஆகியவை மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் இந்த முறையில், எடுத்துச் செல்லும் செலவே உற்பத்திச் செலவுக்கு நிகராக உள்ளது. அது தவிர விபத்து, கலப்படம், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பலவிதமான பிரச்சினைகள் வேறு.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, 40 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா ராட்சதக் குழாய்களைப் பதித்து, அதன் மூலம் பெட்ரோலியப் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டுசென்றது. அது சிறப்பாகச் செயல்பட்டதால், உலகெங்கும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பைப்லைன்களைப் பதிப்பதற்கு ஆரம்பச் செலவு அதிகம்தான்.

ஆனால், இதன் வாழ்நாள் 30 முதல் 40 வருடங்கள் என்பதால் பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்லும் செலவு வெகுவாகக் குறைந்துவிடுகிறது. இதனால், ஆரம்பத்தில் ஊர்விட்டு ஊர் சென்ற பைப்லைன்கள் இப்போது நாடு விட்டு நாடு நீள்கின்றன. இந்தியா முழுவதையும் பைப்லைனால் இணைக்கும் திட்டம் வெகுவேகமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

என்னென்ன வேலைகள்?

பைப்லைன் வடிவமைப்புப் பொறியாளர் (Pipeline Design Engineer), பைப்லைன் ஸ்ட்ரெஸ் பொறியாளர் (Pipeline Stress Engineer), பைப்லைன் மெடீரியல் பொறியாளர் (Pipeline Material Engineer), பைப்லைன் வழிவமைப்புப் பொறியாளர் (Pipeline Routing Engineer) மற்றும் பைப்லைன் சீரமைப்புப் படம் வரைபவர் (Pipeline Alignment Engineer) உள்ளிட்ட பல வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளன.

பைப்லைன் வடிவமைப்புப் பொறியாளரின் பணி குழாய் அளவு மற்றும் தடிமனை, குழாயினுள் செலுத்தப்படும் திரவம் அல்லது வாயு, அதன் வெப்பம், அழுத்தம், சூழலின் தட்பவெட்ப ஆகியவற்றைப் பொறுத்து வடிவமைப்பதாகும். பைப்லைன் ஸ்ட்ரெஸ் பொறியாளரின் பணி குழாயின் வளைவின் ஆரம், குழாய் தாங்கி (Pipe Support), குழாய் தாங்கியின் வகை (Type of Pipe Support) ஆகியவற்றைத் தீர்மானிப்பதாகும்.

பைப்லைன் வழிவமைப்புப் பொறியாளரின் பணி குழாய் செல்லும் பாதையில் உள்ள மேடு பள்ளம், சாலைகள், ரயில் தண்டவாளங்கள், மலைகள், ஆறுகள், விவசாய நிலங்கள், மக்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வழித்தடத்தை வடிவமைப்பதாகும். பைப்லைன் மெடீரியல் பொறியாளரின் பணி எந்த வகை உலோகத்தைப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பதாகும்.

பைப்லைன் சீரமைப்புப் பொறியாளரின் பணி, சர்வேயர் கொடுக்கும் வரைபடத்தில் மேலே சொல்லப்பட்ட மற்ற பொறியாளர்கள் கொடுக்கும் தகவல்களைச் சேர்த்துக் குழாய் சீரமைப்பு வரைபடம் (Pipeline Alignment Sheets) வரைந்து அதைக் கட்டுமானப் பணிக்குக் கொடுப்பதாகும்.

எங்கே படிக்கலாம்?

உத்தரகாண்டின் தலைநகரமான டேராடூனில் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி படிப்புக்கான பல்கலைக்கழகம் (University of Petroleum and Energy Studies (UPES)) உள்ளது. இப்பல்கலைக்கழகம் ஆசியாவின் முதல் அடிப்படைக் கல்வி நிறுவனம் என்ற பெருமைக்குரியது. 1,527 பணியிடங்களை நிரப்புவதற்காகக் கடந்த வாரம் இங்கு நடைபெற்ற பிரம்மாண்ட வளாக நேர்காணலில் இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1, 447 மாணவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. அதுவும் வருடம் 30 லட்சம் ரூபாய் சம்பளம்வரை அளிக்கப்பட்டது.

இந்நிறுவனத்தில் பைப்லைனில் எம்.டெக். ( M.Tech) படிக்கலாம். இது இரண்டு வருடப் படிப்பாகும். படித்து முடித்தால் நல்ல வேலைக்கு முழு உத்தரவாதம் உண்டு. இது தவிர மும்பை ஐ.ஐ.டி., பூனேயில் உள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Maharashtra Institute of Technolgy -MIT), சுவித்யா தொழில்நுட்பப் பயிலகம், ஷ்ரத்தா தொழில்நுட்பப் பயிலகம் (Shradda Institute of Technology) ஆகியவற்றில் பயிற்சி பெற்றுச் சான்றிதழ் பெறலாம். ASTS Global -ல் ஆன்லைன் மூலமாக ஆறு மதங்களில் PG Diploma படிக்கலாம், ஆனால் இதற்கு 3.5 லட்சம்வரை செலவாகும். ASTS Global-ன் பிரிவு சென்னையிலும் உள்ளது. நொய்டா மற்றும் ஜெய்பூரில் உள்ள கெய்ல் பயிற்சியகமும் (GAIL Training Institute) இத்துறையில் பயிற்சி அளிக்கிறது.

மனதளவில் தயாராக வேண்டும்

“UPES-ல் M.Tech படித்தால் வேலை நிச்சயம். அதைத் தவிர சான்றிதழ் பெற்று இத்துறையில் எளிதாக நுழையலாம். இத்துறையைப் பொறுத்தவரை பட்டதாரிகள் பெரிய நிறுவனங்களில் மட்டுமே வேலைக்குச் செல்ல நினைக்காமல் சிறிய நிறுவனங்களிலும் வேலைக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், இத்துறையைப் பொறுத்தவரை அனுபவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதை என்னுடைய அனுபவத்திலிருந்தே சொல்கிறேன்.

ஐ.டி.ஐ. வரைபட வரைவில் (ITI Drafting) தேர்ச்சி பெற்று, பின் ஒரு சிறிய நிறுவனத்தில் வரைவாளராக (Draftsman) 30 ஆண்டுகளுக்கு முன்பு வேலைசெய்யத் தொடங்கினேன். அதன்பின்னர் பகுதிநேரப் படிப்பாக டிப்ளோமா மற்றும் பொறியியலில் பட்டம் பெற்றேன். பின்னர் எம்.டெக். முடித்தேன். பல்வேறு பெரும் நிறுவனங்களில், பல்வேறு நாடுகளில் பணியாற்றினேன். இப்போது பைப்லைன் துறையின் தலைவராக வளர்ந்திருக்கிறேன்” என்கிறார் சென்னையில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றின் பைப்லைன் துறையின் தலைவரான பார்த்திபன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x