Last Updated : 07 Jul, 2017 10:58 AM

 

Published : 07 Jul 2017 10:58 AM
Last Updated : 07 Jul 2017 10:58 AM

சினிமாஸ்கோப் 39: உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

நகரம் சூதுவாதுகளில் கைதேர்ந்தது, அதன் மனிதர்கள் மனிதநேயத்தை மறந்தவர்கள். இப்படியான நம்பிக்கை விதைப்பில் திரைப்படங்கள் பிரதானப் பங்களிக்கின்றன. திரைப்படங்களில் நகரம் குறித்துக் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் ஏராளம். இவை முழுவதும் உண்மையில்லை அதேநேரம் இவற்றில் உண்மையில்லாமலும் இல்லை. ஏதேதோ கற்பனைகளில் நகரங்களில் கால்பதித்தவர் பலருக்கும் ஏதோவொரு பெருங்கனவிருக்கும். பெரும்பாலும் அந்தக் கனவு ஈடேறுவதேயில்லை.

நகரங்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று பளபளப்பானது; மற்றது பரிதாபமானது. ஒன்றில் வளமை தூக்கலாயிருக்கும்; மற்றதில் வறுமை நிறைந்திருக்கும். வளமைக்கு ஆசைப்பட்டு வறுமையில் உழல்பவரே அநேகர். நகரத்தின் பெரும்பசிக்கு இரையாகும் மனிதர்களைப் பற்றிய யதார்த்தப் படமெடுப்பது இயக்குநர்களின் படைப்புத் திறனுக்குச் சவாலானது. கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதுபெற்ற, முதன்மையான லத்தீன் அமெரிக்கப் படங்களில் ஒன்றான ‘லொஸ் ஒல்விதாதோஸ்’ (Los Olvidados), இத்தாலிய இயக்குநர்கள் ரோபார்த்தோ ரொஸ்ஸெல்லினியின் ‘ஜெர்மனி இயர் ஸீரோ’, வித்தாரியோ தெ சிகாவின் ‘ஷூஷைன்’ (கவுரவ ஆஸ்கர் விருது பெற்றது), பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்ஷுவா த்ரூஃபோவின் ‘த 400 ப்ளோஸ்’ உள்ளிட்ட பல படங்கள் இந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றவை.

நகரின் அவலம்

‘லொஸ் ஒல்விதாதோஸ்’ (1950) திரைப்படத்தில் மெக்ஸிகோ நகரின் குடிசைப் பகுதிகளில் வாழும் சிறார்களின் அவல வாழ்க்கைச் சம்பவங்கள் வழியே மனிதர்களின் குரூரத்தைப் படம்பிடித்திருக்கிறார் இயக்குநர் லூயிஸ் புனுவெல். சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தப்பிவந்த எல் கைபோதான் படத்தின் பிரதானக் கதாபாத்திரம். அவன் சிறார்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு தீய வழிகளில் நடப்பவன். கண் பார்வை தெரியாத வீதிப்பாடகர், கால்களை இழந்து அமர்ந்த நிலையிலேயே தள்ளுவண்டியில் நகரை வலம்வரும் பிச்சைக்காரர் போன்றவர்களிடம்கூட ஈவு இரக்கமின்றி நடந்துகொள்கிறார்கள் இவர்கள். எல் கைபோவின் கூட்டாளி பெத்ரோவின் தீய நடவடிக்கைகளால் அவன் மீது அன்பு செலுத்தாமல் ஒதுக்குகிறாள் அவனுடைய தாய்.

எல் கைபோ, ஜூலியன் என்னும் சிறுவனைக் கொல்கிறான். ஜூலியன் உழைப்பில்தான் குடும்பம் பசியாறிக்கொண்டிருந்தது. ஜூலியனின் தந்தை ஒரு குடிகாரர். செய்யாத தவறொன்றுக்காக பெத்ரோவைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறாள் அவனுடைய தாய். சீர்திருத்தப் பள்ளியின் தலைவர். பெத்ரோவைப் புரிந்துகொள்கிறார். தன் மீது யாராவது நம்பிக்கையும் அன்பும் வைக்க வேண்டுமென அவன் ஏங்குகிறான் என்பதை அறிந்து அவனிடம் பரிவுடன் நடந்துகொள்கிறார்.

ஆனால், பெத்ரோவை வாழ்க்கை அலைக்கழிக்கிறது. இறுதியில் பெத்ரோவை அவனுடைய தாய் புரிந்துகொண்ட நேரத்தில், பெத்ரோ எல் கைபோவால் கொல்லப்படுகிறான். இதை அறியாத அவனுடைய தாய் அவனைத் தேடிக்கொண்டேயிருக்கிறாள். படத்தில் தன் தந்தைக்காகக் காத்திருக்கும் சிறுவன் கதாபாத்திரம் ஒன்றுண்டு. இறந்தவர்களின் பல் தீமையை அகற்றும் என்னும் நம்பிக்கையில் அதை வைத்திருக்கும் அந்தச் சிறுவன், இறுதிவரை தன் தந்தையைக் கண்டடைவதேயில்லை. வறுமையில் வாடுவோரின் இழி செயல்களைப் பழித்துப் பேசுபவர்களை வறுமையின் வேருக்கருகே அழைத்துச் சொல்லும் இந்தப் படம்.

வாழ்வின் குரூரம்

‘ஷூஷைன் ’(1946) திரைப்படத்தில் வீதியோரம் ஷூ பாலிஷ் போடும் இரு சிறுவர்கள் பணம் சேர்த்துக் குதிரை ஒன்று வாங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால், ரோம் நகரில் அவர்கள் வாழ்க்கை சிக்கி சின்னாபின்னமாக்கப்படும்.

ஊழல்மிக்க அந்நகரம் அவர்களைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்துவிடும். இயக்குநர் ரொஸ்ஸெல்லினி, தன் மகன் ரமனோ நினைவுக்கு சமர்ப்பித்திருந்த ‘ஜெர்மனி இயர் ஸீரோ’ (1948) படத்தில் ,பெர்லின் நகரைச் சேர்ந்த ஒரு சிறுவன் நோயால் படுத்த படுக்கையாகிவிட்ட தன் தகப்பனுக்கு விடுதலை தர அவருக்கு விஷம் கொடுத்து நிரந்தரமாக உறங்கவைப்பான். இந்தச் செயலின் குற்றவுணர்வு உந்தித் தள்ள உயரமான கட்டிடத்திலிருந்து கீழே குதித்துத் தந்தை சென்ற இடத்துக்கே செல்வான். படத்தின் ஒரு காட்சியில் வீராவேசமான ஹிட்லரின் உரை ஒன்று காற்றில் தவழ்ந்துவரும்.

இவற்றைப் போன்றே பம்பாய் வீதிகளில் அலைந்து திரியும் சிறார்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு மீரா நாயரின் இயக்கத்தில் உருவான படம் ‘சலாம் பாம்பே’ (1988). சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது இந்தியப் படம். ஆனால், பரிசுவென்ற படம் டச்சு மொழியில் உருவான ‘பெல் த கான்க்யுரர்’. பம்பாயின் வறுமையைக் காட்சிப்படுத்திய ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ (2008) அளவுக்குக் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளாவிட்டாலும் ‘சலாம் பாம்பே’யும் சில எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்ளவே செய்தது.

‘சலாம் பாம்பே’யில் பிழைப்புக்காகக் கிருஷ்ணா தனது பூர்வீகக் கிராமமான பெங்களூர் அருகே உள்ள பிஜாபூரிலிருந்து பம்பாய் செல்கிறான். டச்சுப் படத்தில் பிரதானக் கதாபாத்திரங்களான லஸ்ஸேவும் அவருடைய மகனான பெல்லும் அதே பிழைப்புக்காக சுவீடனிலிருந்து டென்மார்க் செல்கிறார்கள். ‘சலாம் பாம்பே’ பொழுதுபோக்குப் படமல்ல; மாநகரத்தின் வீதியோரம் வீசப்பட்ட சிறார்களின் சிதிலமடைந்த வாழ்க்கையின் பக்கங்களைக் கலாபூர்வமாக வெளிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி. இயல்பாகப் படமாக்கப்பட்ட மாநகரின் துயரம் தொனிக்கும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் இசைக் கலைஞரான டாக்டர் எல்.சுப்ரமணியத்தின் இசை இந்தப் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது.

நிறைவேறாக் கனவு

அண்ணனின் இருசக்கர வாகனத்தை எரித்ததன் காரணமாக சர்க்கஸில் பணிக்குச் சேர்த்துவிடப்பட்ட கிருஷ்ணா, 500 ரூபாய் சேர்த்திருந்தால் மீண்டும் தன் ஊருக்கு திரும்பி வந்திருக்கலாம். ஆனால், இறுதிவரை அவன் சொந்த ஊருக்குத் திரும்பாமலேயே அந்த மாநகரத்திலேயே அல்லல்படுகிறான். ஒரு கிருஷ்ணா படும் பாட்டைக் காட்டியதன் வழியே உலகெங்கும் மாநகரங்களில் தங்கள் வாழ்வைத் தேடி தட்டழியும் பல கிருஷ்ணாக்களின் வாழ்வையும் பற்றி யோசிக்க வைக்கிறார் மீரா நாயர்.

பெண்களைப் பாலியல் தொழிலில் தள்ளும் பாபா, பாலியல் தொழிலில் ஈடுபடும் அவனுடைய மனைவி, இந்தச் சூழலிலேயே வளரும் மஞ்சு என்னும் குழந்தை, பாபாவின் போதைப் பொருளை விற்பவனான சில்லிம், பாபா மூலமாக பாலியல் விடுதிக்கு வந்து சேரும் 16 வயதுப் பெண் போன்ற படத்தின் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் ஒரு சோற்றுப் பதங்கள். இப்படத்தின் பாலியல் விடுதிக் காட்சிகளைப் பார்க்கும்போது, கமல் ஹாசன் திரைக்கதையில் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான ‘மகாநதி’யில் தன் மகளை மீட்கச் சென்ற சோனார் கஞ்ச் காட்சிகளும் ‘சாப் ஜான்’ திரைக்கதையில் சந்தான பாரதி இயக்கிய ‘குணா’ படத்தில் கதை நாயகன் குணா வசிக்கும் வீட்டின் சூழலும் மனதில் நிழலாடுகின்றன.

அன்றாடப் பாட்டுக்கே அனுதினமும் படும் அவஸ்தை காரணமாகப் பல மனிதர்களின் நல்லுணர்வுகளை உறிஞ்சி எடுத்துவிடுகிறது மாநகரம். அங்கே வறுமை எனும் நெருப்பில் அன்பு, பாசம், நட்பு, காதல், தியாகம் போன்ற விழுமியங்கள் கருகுகின்றன. அவர்களது வறுமையைப் போக்காது அறவுணர்வை அவர்கள் மீது ஊற்றுவது கற்சிலையின் மீது பாலூற்றுவது போன்றது என்பதையே இந்தப் படங்கள் எல்லாம் சொல்கின்றன.

ஆனால், கொலைபுரிந்துவிட்டு பம்பாய் சென்ற சிறுவன், பெரும் நாயகனாவது போன்ற மகத்தான கற்பனை சிலருக்குத் தோன்றுகிறது. ‘சலாம் பாம்பே’யின் தாக்கத்தில் தமிழில் உருவான படம் ‘மெரினா’ என்பது உண்மையிலேயே வியப்பான தகவலே. இந்தப் படம் நல்லுணர்வின் புதைகுழியில் ஆண்டுக்கணக்காக மூழ்கியிருந்த முடை நாற்றத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இது தவிர ‘கோலிசோடா’, ‘அங்காடித் தெரு’போன்ற படங்களைத்தான் தமிழில் தர முடிகிறது.

தொடர்புக்கு:chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x