

ஆசிரியர், மருத்துவரையடுத்து நர்ஸ் என்றழைக்கப்படும் தாதியரின் பணியே உலகம் முழுவதும் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருக்கிறது. ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல், அன்னை தெரசா போன்றவர்கள் அப்பணிக்குக் கூடுதல் பெருமையை ஏற்படுத்தியுள்ளனர். மனிதாபிமானம், செய்நேர்த்தி, கலை ஆகிய மூன்று பண்புகளும் தேவைப்படும் மருத்துவச் சேவையாகத் தாதிகளின் பணி கருதப்படுகிறது. இந்தியாவில் மருத்துவமனைகளும் மருத்துவச் சேவைகளும் வேகமாக வளர்ந்துவரும் நிலையில் ஐந்து லட்சம் தாதியருக்கான தேவை உள்ளதாகச் சமீபத்திய ஆய்வு விவரங்கள் சொல்கின்றன. மருத்துவமனைகளும் மருத்துவச் சேவைகளும் வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவில் தாதிகளுக்கான தேவை அதிகரிக்கவே செய்யும்.
தாதியர் பயிற்சியின் வரலாறு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் தாதியருக்கான முறையான பயிற்சி தொடங்கப்பட்டது. பின்னர் க்ரீமியன் யுத்தத்தின்போது பிரிட்டனில் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் முயற்சியால் ராணுவ மருத்துவமனைகளில் தாதியர் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டுமென்று வரையறுக்கப்பட்டது. அறிமுகம் இல்லாத நோயாளிகளிடம் அவர்கள் தரும் சங்கடங்களைப் பொறுத்துக்கொண்டு அவர்களைப் பராமரிக்கும் இயல்பை இயற்கையிலேயே பெற்றவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். இதனால் உலகம் முழுவதும் பெண்களே தாதியர் பணிகளில் அதிகம் இருக்கின்றனர். நோயாளிகளுடன் தொடர்பு மிகவும் குறைந்த தீவிரச் சிகிச்சைப் பிரிவு அறைகளில் மட்டுமே குறைவான ஆண் தாதியர் பணியில் உள்ளனர். ராஜஸ்தான், கேரளத்திலிருந்துதான் அதிக எண்ணிக்கையில் தாதிகள் இந்தியா முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்துவருகின்றனர்.
தாதியருக்கான பணிகள்
மருத்துவமனைகளில் மருத்துவர்களின் நேரடிப் பார்வையிலும் தாதியர் பிரிவுகளிலும் தாதிகள் பணிபுரிகின்றனர். பொதுச் சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை, அவசரப் பிரிவு, பிரசவப் பிரிவு போன்றவற்றில் மூன்றில் இரண்டு பங்கு தாதிகள் பணியாற்றுகின்றனர். ஒரு பங்கினர் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலும் வெளிநோயாளிகள் பிரிவிலும் பணியாற்றுகிறார்கள்.
மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் நோயாளியின் உடல்நிலையைத் தொடர்ந்து கவனித்து அவருக்கான சிகிச்சையை ஒருங்கிணைப்பதுதான் ஒரு மருத்துவத் தாதியின் பொதுவான பணியாகக் கருதப்படுகிறது. நோயாளியின் உடல்வெப்பநிலை, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றைச் சோதிப்பது, மருந்து கொடுப்பது, ஊசி மருந்து செலுத்துவது, நோயாளியிடம் தோன்றும் அறிகுறிகளைக் கவனிப்பது, கட்டுகளைப் புதுப்பிப்பது, உடைமாற்றுவது, அறுவை சிகிச்சைக்கு நோயாளியைத் தயார்படுத்துவது போன்றவை மருத்துவத் தாதியரின் பணிகள். சர்ஜிக்கல் நர்சஸ் என்று அழைக்கப்படுபவர் அறுவை சிகிச்சைக் கருவிகளைத் தூய்மைப்படுத்தும் (sterlising) பணிகளையும் செய்கின்றனர்.
இன்றைய மருத்துவச்சி யார்?
நோயாளிகள் பராமரிப்பு, தொழில்நுட்ப அறிவு இரண்டும் இணைந்தது மிட்வைஃப் (midwife) எனப்படும் மருத்துவச்சியின் பணியாகும். அக்காலத்தில் பிரசவம் தொடங்கிக் குழந்தைப் பராமரிப்பு வரையிலான சேவைகளை வழங்கிவந்தனர். பிரசவம் ஏதாவது நிலையில் சிக்கலாகும் என்பதை முன்னரே உணர்வதற்கான அனுபவமும் மருத்துவச்சிகளிடம் உண்டு. தற்போது மருத்துவச்சிக்கான பயிற்சிகளும் நர்சிங் பயிற்சியில் ஒரு அங்கமாகத் தரப்படுகிறது.
உணர்வும் மனமும் பலமா?
நோயாளிகளுடன் அவர்களது வலி, வாதைகளின்போது தொடர்ந்து இருக்க வேண்டியிருப்பதால் உதவும் மனப்பாங்கும் மனோபலமும் மருத்துவத் தாதிகளுக்கு அவசியம். நடைமுறை விவேகம், அனுதாபம், மருத்துவத்தில் ஈடுபாடு, நுண்ணுணர்வுடன் கூடிய உறுதிப்பாடு, உணர்ச்சிவசப்படாமை, பொறுப்பேற்கும் பண்பு ஆகியவை தாதிகளுக்கு அவசியம்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான நர்சுகளின் தேவை இந்திய அளவில் வளர்ந்துவருகிறது. தகவல் தொழில்நுட்பப் பணிகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் பணியாற்றுவதற்கான வாய்ப்பு தாதிப்பயிற்சி பெற்றவர்களுக்குத்தான் கிடைக்கிறது. வேலைவாய்ப்பின்மை என்பதற்கு வாய்ப்பேயில்லாத தாதியர் படிப்பைத் தேர்வு செய்தால் நல்ல எதிர்காலம் நிச்சயம்.
- சுதா
ஆண்களுக்கும் எதிர்காலம் உண்டு
- முனைவர் சுதா, முதல்வர், எம். ஏ. சிதம்பரம் காலேஜ் ஆஃப் நர்ஸிங்
இன்றைய இந்திய மருத்துவச் சூழலில் நர்ஸுகளின் பணிகள் என்னவாக மாறியிருக்கிறது?
பொது மருத்துவமனைகளில் ஸ்டாஃப் நர்ஸுகளாகப் பணியாற்றும் சூழலே முன்பு இருந்தது. இன்றைய நவீன கால வாழ்க்கை மாறுதலுக்கேற்ப ராணுவ மருத்துவமனைகள் தொடங்கி முதலுதவி மையங்கள்வரை அவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆம்புலன்ஸ் சேவைகளில் நர்ஸ்கள் முக்கிய அங்கமாக இருக்கிறார்கள். சமீபத்தில் இந்தியா முழுவதும் ஆம்புலன்ஸ் பைக் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சரியான கல்வியும் பயிற்சி அனுபவமும் பெற்ற தாதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் அதிகரித்துவருகின்றன.
மேல் நர்ஸ் என்று சொல்லப்படும் ஆண் தாதியர் இன்னும் இத்துறையில் குறைவாக இருப்பதற்குக் காரணங்கள் என்னென்ன?
முதலிலிருந்தே இத்துறையில் பெண்கள்தான் அதிகம். தற்போது ஆண்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இத்துறையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவு. வாழ்க்கை முழுக்க ஒரே பணியில் ஒரு பொறுப்பில் இருப்பதை ஆண்கள் அலுப்பாக உணர்வதும் காரணமாக இருக்கலாம். தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில், எம்.எஸ்சி. நர்ஸிங் படித்தவர்களையே நர்ஸிங் கண்காணிப்பாளர் (nursing superintendent) ஆக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதுபோன்ற நிலைமைகள் ஆண்களை நர்ஸிங் படிப்புக்கு ஊக்குவிக்கலாம்.
மளமளவென முளைத்திருக்கும் நர்ஸிங் பயிற்சி நிலையங்கள், கல்லூரிகளிலிருந்து முறையான பயிற்சி நிலையங்களை மாணவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?
இந்திய அளவில் இந்தியன் நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மெடிக்கல் யுனிவர்சிட்டியின் இணையதளங்களில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களின் பட்டியல் உள்ளது.