Last Updated : 24 Nov, 2014 11:49 AM

 

Published : 24 Nov 2014 11:49 AM
Last Updated : 24 Nov 2014 11:49 AM

ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்க்க ஒரு சங்கம்!

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், ஆங்கிலப் பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் சங்கம் ஆரம்பித்திருக்கிறார்கள்.

மதுரை அண்ணாநகரில் வாரந்தோறும் சனிக்கிழமை சங்கம் கூடுகிறது. புதியவர் ஒருவர் மற்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஏதாவது தலைப்பில் பேசுவார். பதற்றமின்றி, ரொம்ப ஜாலியாக அவரைப் பேச வைக்கிறார்கள் மற்றவர்கள். டி.வி. ஷோக்களில் குழந்தைகளையும், இளைஞர்களையும், “என்னடா பண்ற நீ?” என்று திட்டுவார்களே, அப்படியெல்லாம் செய்யாமல் தட்டிக் கொடுத்து தவறு இருந்தால் ரொம்ப பக்குவமாகத் திருத்துகிறார்கள். இந்த நட்புச் சூழல் காரணமாக விளையாட்டாகப் பேச ஆரம்பித்தவர்கள் கூட, நாளடைவில் விவரமான பேச்சாளராகிவிடுகிறார்கள்.

உலகளாவிய சங்கம்

இது போதாதா? ஐந்தே ஐந்து இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கத்தில் இப்போது 22 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதைப் பற்றி மதுரையில் அதைத் தொடங்கியவர்களில் ஒருவரான சச்சினிடம் பேசினோம்.

“நான் பி.பார்ம் கடைசி வருஷம் படிச்சிக்கிட்டு இருந்தப்ப, பயிற்சி மையம் ஒன்றில் பெங்களூரில் ஐ.டி. துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். பெங்களூரில் டோஸ்ட்மாஸ்டர் (toastmasters) கிளப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அதன் மூலம் தன்னுடைய ஆங்கிலப் பேச்சுத் திறனையும், தலைமைப் பண்பையும் வளர்த்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

அதைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்காக நண்பர்களுடன் இணையத்தில் மேய்ந்தபோது, அது ரோட்டரி கிளப்பை போன்ற உலகளாவிய அமைப்பு என்றும், 130 நாடுகளில் சுமார் 14,700 கிளப்கள் இருப்பதாகவும் தெரிந்து கொண்டேன். தென்தமிழகத்தில் தூத்துக்குடியில் மட்டும் இதுபோன்ற கிளப் இருப்பதை அறிந்து, நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தோம். மதுரையிலும் அதைப்போல ஒரு கிளப்பை ஆரம்பித்தால், ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்றவற்றுக்கு அலையத் தேவையிருக்காதே என்று தோன்றியது. இப்படித்தான் மதுரை கிளப் பிறந்தது.

பரவும் சங்கம்

பொதுவாகப் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும்போது இருக்கிற ஆர்வம், நாளடைவில் குறைந்து போய்விடும். ஆனால், இந்த கிளப் நடவடிக்கைகள் எங்களுக்குள் ஏற்படுத்தியுள்ள மாற்றம் காரணமாக ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எப்படி உடை அணிவது, எவ்வாறு பேசுவது, கூட்டத்தை எவ்வாறு நடத்துவது என்று எல்லாவற்றுக்கும் விதிகள் இருக்கின்றன. அதனை முழுமையாகக் கடைபிடிக்கிறோம்.

முதன் முதலாக ஒருவர் பேசப் போகிறார் என்றால், கிளப் உறுப்பினர்கள் எல்லாம் எழுந்து நின்று அவருக்கு ஊக்கம் கொடுப்போம். தொடர்ந்து 10 கூட்டங்களில் பேசிவிட்டால், நல்ல ஆங்கிலப் பேச்சாளர் என்று சான்றிதழே கொடுத்துவிடுவார்கள். எங்கள் கிளப்பின் வெற்றியைத் தொடர்ந்து இப்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், விருதுநகர் போன்ற இடங்களிலும் இந்த கிளப் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x