Last Updated : 26 Jul, 2017 10:08 AM

 

Published : 26 Jul 2017 10:08 AM
Last Updated : 26 Jul 2017 10:08 AM

அம்மாவின் சேட்டைகள் 11: பானை முழுவதும் பொம்மை!

"நாங்கள் வளரும்போது, எப்பொழுதும் எதையாவது செய்துகொண்டிருப்போம்டா தம்பி. கடையிலருந்து எங்களுக்கு எதுவும் வாங்கிக் கொடுத்ததில்ல. கடையிலயும் எதுவும் வித்ததில்ல. மிட்டாய் மாமா செஞ்சிதரும் பொம்மமுட்டாய், குச்சிமுட்டாய்ல இருக்கிற உருவங்களைப் பார்த்து பார்த்து ரசிப்போம். பந்து, பலூன் மாதிரி கொஞ்சம் காசுக்கானதை மட்டும்தான் கடையில வாங்கித் தருவாங்க.

ஆனா எல்லா விளையாட்டுக்கும் செட்டு செட்டா விளையாட்டு சாமான் வச்சிருப்போம். விளையாட்டு சாமான்களைச் சேகரிக்கிறதும், செஞ்சு பத்திரப்படுத்துறதும் முக்கியமான வேலையா இருக்கும். ஏன்னா பாட்டி கண்ணுல பட்டா தூக்கி எறிஞ்சிடுவாங்க. அவுங்களுக்கு அதெல்லாம் குப்பை. எங்க இருந்துதான் இவ்வளவு குப்பயைத் தூக்கிட்டு வர்றாளேன்னுவாங்க. அம்மா, அப்பா விளையாட்டுலதான் நாங்க செய்யற பல பொருட்களைப் பயன்படுத்தமுடியும்.

நாங்கள் அரிதினும் அரிதாக வைத்திருக்கும் சினிமா படச்சுருளை வைத்துப் படம் ஓட்டலாம். சந்தை நடத்தலாம். சந்தையில் பானைக்கடை வைக்கணும்னா அவுங்க களிமண்ணுல முன்கூட்டியே அஞ்சு பத்துன்னு பானை, சட்டி செஞ்சி வச்சிருக்கணும். அதுபோலவே பானை வாங்கணும்னா காசு செஞ்சி வச்சிருக்கணும். காசு செய்றது, பணம் செய்றதல்லாம் கவனமா செய்யணும்.

சோடா மூடிய நல்லா சப்பையா ஆக்கி, பிசிறு இல்லாம தேய்க்கணும். பான ஓடை எடுத்து வட்டமா, சதுரமா ஆக்கி வழவழன்னு தேய்ச்சி வைக்கணும். பணத்துக்கு மழமழ பேப்பரத் தேடி அலையணும். ஒரு ரூபா, ரெண்டு ரூபான்னு வித்தியாசப்படுத்திச் செய்யணும். சர்க்கஸ் காட்டுறவங்கதான் ஜாலி. பொருள் இல்லாம அவுங்க உடம்பையே வளைச்சி வளைச்சி ஏதாவது செய்வாங்க.

அம்மா, அப்பா விளையாட்டுலதான் பள்ளிக்கூடம், வாத்தியாரு எல்லாம் வரும். வாத்தியாரா போறவுங்க வரிசையா பெஞ்சு மாதிரி கல்லை அடுக்கி பள்ளிக்கூடம் ரெடி பண்ணணும். எப்டின்னாலும் ஏதாவது செய்யணும்.”

அம்மா அடிக்கடி சொல்லுவதில் இதுவும் ஒன்று. எங்களுக்கு எவ்ளோ பொருள் செய்யத் தெரியும் தெரியுமான்னு கேப்பாங்க. விளையாட்டுச் சாமான் வாங்க அம்மாகூட கடைக்குப் போனா, ஒவ்வொரு சாமானுக்கும் அவுங்க என்ன செஞ்சாங்கன்னு சொல்லுவாங்க. நொங்கு வண்டி செய்ய நொங்கு வாங்குறாங்களா, திங்க வாங்குறாங்களான்னு சந்தேகமா இருக்கும். எனக்கும் எல்லாத்தையும் சொல்லிக்கிட்டே செஞ்சி குடுப்பாங்க. அம்மாவுக்கு விளையாட்டுப் புத்தி போகலைன்னு அப்பா கிண்டலடிப்பாங்க.

“நாங்க தச்சரா இருந்திருக்கோம். சட்டிப் பானை செய்யறவுங்களா வாழ்ந்திருக்கோம். கார் செய்யறவுங்களாவும் காரோட்டியாவும் இருந்திருக்கோம். வீடு கட்டுவோம். கல்லை அடுக்கி, மண்ணைக் கொழைச்சி, மணல் வீடுன்னு விதவிதமா கட்டுவோம். விதவிதமா விளையாட்டுச் சாமான் செய்வோம். பனையோலைல காத்தாடி செய்வோம்.

அதுக்கு ஏத்த முள்ளு தேர்ந்தெடுக்கணும். சரியா ஓடலைன்னா ரிப்பேர் பண்ணணும். அதுக்கு மந்திரமெல்லாம் தெரியணும். காத்தாடிபேப்பர்லயும்செய்யலாம். பட்டம் செய்யறதுதான் இருக்கிறதுலயே ஈஸியாம். ஆனா மேல வானத்துல பறக்குற பட்டம் செய்யணும்னா ஈஸி இல்லையாம். பெரிய அண்ணாதான் யாராவது சரிபண்ணித் தருவாங்களாம். தாயக்கட்டை, கோலாட்டக் குச்சி செய்யறதும் அப்படிதானாம்.

கார முள்ளு கையில குத்தாம நல்லா குச்சியா பாத்து வெட்டிக்கிட்டு வரணுமாம். குச்சி மேல இருக்கிற தோலைச் சீவி அப்புறம் அதைச் செதுக்கிச் செதுக்கி கட்டமா ஆக்கணும். அப்புறம் அதுல கோடு போடணும். கோடு தெரியறதுக்காக மை வச்சி அடையாளப்படுத்தணும்.

“கஷ்டமான வேலை எல்லோருக்கும் வராது. சரியா செஞ்சிட்டா எவ்வளவு பெருமையா இருக்கும் தெரியுமா? இது செய்ய முடியாதவுங்க புளியங்கொட்டையைத் தேய்ச்சி, சோழியில விளையாடுற மாதிரி விளையாடுவாங்க. காகிதத்தை ஊறவைச்சு உரல்ல ஆட்டி, பல்லாங்குழி செய்யணும். பெரியவுங்க உதவி இல்லாம அழகா செய்யறது கஷ்டம். சிலபேர் வீட்லதான் அதெல்லாம் முடியும். கிட்டிப்புல்லு செய்யறதும் கஷ்டமில்லை.

நல்லா எம்பி ஓடுற மாதிரி புல்லை முடிக்கிறதுதான் கஷ்டமான வேலை. சோடா மூடியில ட்வைன் நூலைக் கட்டி, அதுல காஜா பட்டனைத் தொங்கவுடணும். அதுக்குக் கீழ சரியான அளவுல முடிச்சி போடணும். முடிச்சிய இழுத்துவிட்டா அழகா ஒரு இசை வரும். ஒருத்தர் செய்ய ஆரம்பிச்சா போதும். வரிசையா எல்லார் கையிலயும் அது இருக்கும். தீப்பெட்டி, சிகரட் அட்டை சேர்ப்போம். தீப்பெட்டியில ரயில் செஞ்சி நூல் கட்டி ரயிலை இழுத்துக்கிட்டுப் போவோம். டானிக் வாங்குன அட்டைப் பெட்டியைக் கீழ கெடந்து எடுப்போம்.

அப்பல்லாம் அது கெடைக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல. அதை எடுத்துக்கிட்டுப் போய் கார் செய்யணும். சோடா மூடிதான் சக்கரம். சன்னல் செஞ்சி அதுக்குள்ள ஆள் உட்கார்ந்து தலை தெரியிற மாதிரி நுணா காயையோ, அத்திக்காயையோ குச்சியில குத்தி செட் பண்ணணும். அதுல நூலைக் கட்டி சமமான தரையில பஸ்ஸை ஓட்டணும். நாங்களே செஞ்ச அந்த பஸ்ஸையும் ரயிலையும் எவ்வளவு பத்திரமா வச்சிக்குவோம் தெரியுமா?

டெய்லர் கடைக்குப் போவோம். வெட்டிக் கீழ போட்ட கலர் கலர் துணியை எல்லாம் எடுத்துட்டு வருவோம். துணிக்கேத்த அட்டைப் பெட்டி ரெடி பண்ணி மடிச்சி பத்திரமா வைக்கணும். துணிக்கடை வைக்கப் பயன்படும். ஒடஞ்ச வளையல்களைப் பொறுக்கி கலர் கலரா வச்சிருப்போம். அதை வைக்கிறதுக்கு பேப்பர்ல பொட்டி (கூடை) செய்வோம்.

பேப்பர்ல சிலேட்டுக்குச்சி போட்டு வச்சிக்க பர்ஸ் செய்வோம். கொட்டஞ்சியில என்னல்லாம் செய்யலாம் தெரியுமா? என்னோட விளையாட்டுச் சாமான் பத்திரமா இருக்கிறதுக்காக, ஒரு ஓட்டைப் பானைய வச்சிருந்தேன். அதுக்குள்ள எல்லாம் இருக்கும். டெய்லர் கடையில பொறுக்குனதுல செஞ்சது, மண்ணுல செஞ்சது, மரத்துல செஞ்சதுன்னு விதவிதமா இருக்கும். அந்தப் பானையிலேயேதான் என் நினைப்பெல்லாம் இருக்கும்.

சைக்கிள் ட்யூப்ல ரப்பர் பேண்டு செய்யணும். அதை வச்சி துப்பாக்கிச் செய்யணும். அடுத்த பொருள் கிடைக்கிறவரை அதைப் பத்திரமா வைக்கணும். இடம் மாத்தி வைப்பேன். இல்லைன்னா பானையில இருந்து பைக்கு மாத்துவேன். நுங்கு சீசன்ல நுங்கு வண்டி செய்ய கவட்ட குச்சியும் அதை முடுக்கிவிட நல்ல கம்பியையும் ஒன்பது மாசம் பத்திரப்படுத்தியிருக்கேன். தென்னை ஓலைல மோதிரம் செஞ்சிப் போட்டுக்கிட்டு இருக்கேன். ஒண்ணொண்ணும் செய்யக் கத்துக்கிறது அவ்வளவு சுலபமான வேலையில்ல. சிலது டக்குன்னு வந்துடும். சிலது நூறு தடவ செஞ்சாதான் வரும். அப்பாடான்னு இருக்கும்.

ஆனாலும் விடமாட்டேன். மோதிரம் செஞ்சி வந்துடுச்சின்னு வச்சிக்கோ குட்டிப் பசங்களுக்கு எல்லாம் மோதிரம் போட்டுவிடுவேன். கிழிக்க, உடைக்க, நசுக்கன்னு சில ஆயுதங்கள் வேற எங்ககிட்ட இருக்கும். அரச இலைல கண்ணாடி செஞ்சி போட்டுக்குறது, குட்டிப் புள்ளையா இருந்தா அதுல பீப்பி செஞ்சு ஊதுவாங்க. இன்னும் கொஞ்சம் பெரிய புள்ளையா ஆனதும் ராத்திரி ஊதிட்டு வச்ச பீப்பி காலைல வதங்கிப் போயிடுசின்னு அழுகையா வரும்” - இப்படி அம்மா நிறைய சொல்லுவாங்க.

பூவரச மரத்தை, அரச மரத்தைப் பார்த்தா இலையைப் பறிச்சி பீப்பி செஞ்சி, பிள்ளைகள ஊதிப் பழக்கிவிட்டுட்டு போவாங்க அம்மா. எனக்கும் செய்யத் தெரியும், ஊதத் தெரியும்.

(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
ஓவியங்கள்: வி.எஸ்.செல்வன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x