Published : 04 Nov 2014 12:18 PM
Last Updated : 04 Nov 2014 12:18 PM

வெட்டிவேரு வாசம் 8 - ஓவராலிங்!

ஓவராலிங்!

கல்லூரி முடிந்து வேலைக்குப் போக ஆரம்பித்திருந்த நேரம். நண்பன் தெய்வசிகாமணியிடம் இரவல் வாங்கியிருந்த பஜாஜ் எம்-80ஐத் திருப்பிக் கொடுக்க, அவன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சிகாமணி வெளியே வரும்முன் தபால்காரர் அவன் பெயருக்கு வந்திருந்த ஒரு போஸ்ட் கார்டை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

தபால் கார்டில் பிள்ளையார் சுழிக்குப் பதிலாக, ‘ஓம்’! அதன் கீழே ‘சாமான் இடம் மாற்றப்பட்டது' என்ற ஒரு சுருக்கமான வாக்கியம். அதன் கீழே ஒரு முகவரி மட்டும் எழுதப்பட்டிருந்தது.

“எந்த சாமானை இடம் மாத்தியிருக்காங்க? அட்ரஸ் மட்டும் எழுதியிருக்காங்களே…” என்று கேட்டபடி கார்டை அவனிடம் நீட்டினேன்.

அதைப் பார்த்துவிட்டு, “ஓவராலிங் ஒர்க் ஷாப்டா…” என்றான் சிகாமணி. “சாயங்காலம் போறேன். நீயும் வா. கையில ஒரு நூறு ரூபா எடுத்துக்க...”

மாலை சிகாமணியின் பஜாஜ் எம்-80 பட்டாசு வெடித்தபடி விரைந்தது. அவன் சட்டையில் போட்டிருந்த செண்ட் வாசம் நெஞ்சை அடைத்தது.

“இந்த சவுண்டுக்காகத்தான் வண்டியை ஓவராலிங்குக்குக் கொடுக்கப் போறியாடா..?” என்றேன், சதுரமான பில்லியனில் அமர்ந்திருந்த நான்.

சிரித்தான். கிருஷ்ணவேணி தியேட்டருக்கு அருகில் ஒளிந்து கொண்டிருந்த ஒரு குறுகலான தெருவில் நுழைந்தான். மாமரக் கிளைகள் வெளியே நீண்டிருந்த ஒரு காம்பவுண்ட் சுவருக்கு அருகில் வண்டியை நிறுத்தினான்.

“கூடவே வா…” என்று விக்கெட் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். எதிரில் பூட்டிய கதவோடு ஒரு பங்களா. இடது பக்கத்தில் மாடிப் படிகள் வளைந்து மேலேறின. அதில் ஏறி ஒரு சிட் -அவுட்டை அடைந்தோம். மூடிய கதவு வரவேற்றது.

வாசக் காலில் மஞ்சள் தடவி, நடுவே குங்குமப் பொட்டெல்லாம் வைத்திருந்தது. வீட்டுக்குள் சூலமங்கலம் சகோதரிகள் கந்தர் சஷ்டிக் கவசம் பாடிக்கொண்டிருந்தார்கள். சிகாமணி காலிங் பெல்லை அழுத்தினான். காத்திருந்த மாதிரி கதவு திறந்து,

40 வயதில் ஒரு பெண்மணி எதிர்கொண்டாள். முகத்தில் குண்டு மஞ்சளைக் குழைத்துப் பூசியிருந்தாள். நெற்றியில் லட்சணமாகக் குங்குமப் பொட்டு. “சௌக்கியமாக்கா?” என்று சிகாமணி குசலம் விசாரித்தான்.

“வாப்பா. கார்டு கெடைச்சுதா..? எங்களெல்லாம் மறந்திட்டியா? ஆளையே காணும்? கூட யாரு? தோஸ்தா?..”

உள்ளே கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தம் கேட்டது. கொலுசுச் சத்தம் ஒலித்தது.

சற்றே மிரட்சியுடன் அவளைப் பார்த்தேன். “வா, நைனா. கை கால் கழுவிக்கோ... இன்னா சாப்பிடறே? காப்பியா... டீயா? இல்ல வேற எதுனா ஃபவுராவா..?” என்று அன்புடன் என் கையைப் பற்றி உள்ளே அழைத்தாள்.

அந்த ‘ஃபவுராவா' என்ற வார்த்தை புரியவில்லை. ஆனாலும் அந்த அக்காவை மிகவும் பிடித்திருந்தது.

உள்ளே போனதும், ஊதுவத்தி மணம் சூழ்ந்தது.

சோபாவில் உட்கார்ந்த பின் பார்த்தால், அங்கே பதினேழு, பதினெட்டு வயதில் ஏழெட்டு பெண்கள், கொஞ்சம் இசகு பிசகாய் உடுத்தி காய் நறுக்குவது, பூத்தொடுப்பது என்று ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். எல்லோரும் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தார்கள்.

“வேணி இல்ல?” என்றான் சிகாமணி.

“ஆந்திராவுக்குப் போயிருக்குது. புச்சா இவ்ளோ எறக்கியிருக்கேனே... இதெல்லாம் உன் கண்ல படலியா? வேணியவே கட்டிகினு அழுவுற?”

சிகாமணி ஒரு பெண்ணைக் காட்டி, “இது..?” என்று வினவினான்.

“சுந்தரி... நேத்துதான் கேரளாவிலேர்ந்து வந்துது!”

எனக்கு மொத்தமும் புரிந்துவிட்டது. ஐயோ... இந்த மாதிரி விவகாரமெல்லாம் உண்மையிலேயே இருக்கிறதா? அதுவும் நட்ட நடுச் சென்னையில்?

சுந்தரி உதட்டில் சிரிப்புடன் சிகாமணியின் கையைப் பற்றினாள்.

“ஒனக்குடா…?”

“தம்பிக்கு நானே சொல்றேன்…” என்று அக்கா என்னைப் பார்த்துவிட்டு நகச்சாயம் பூசிக்கொண்டிருந்த பெண்ணிடம் திரும்பினாள்.

“மோகினி… தம்பிக்கு என்ன வேணும்னு கேளும்மா.”

தூக்குமேடையில் தள்ளப்பட்டவன் போல் என் கை, கால்கள் நடுங்கின.

“டேய், ஓவராலிங்னு சொன்னே?” என்று சிகாமணியிடம் கேட்பதற்குள் நாக்கு பிசகியது.

பதில் சொல்ல சிகாமணி அங்கே இல்லை.

“புத்சா? பழகிக்கோ நைனா. இல்லன்னா… ஃபர்ஸ்ட் நைட்ல முழிப்பே. பொண்டாட்டி வெறுத்துப் போய் ஒன்னை வுட்டு ஓடிடுவா…” என்று அக்கா சொல்லிவிட்டு, வேறொருத்திக்குத் தலை பின்னப் போய்விட்டாள்.

மல்லிகை மணக்க, மோகினி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். படக்கென்று எழுந்தேன்.

“எனக்கு… எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல. நான் வெளியே வெயிட் பண்றேன்...” என்று கால் தடுக்க, கதவு திறந்து வெளியில் பாய்ந்தேன்.

வெளிக் காற்றை சுவாசித்த பின்புதான் உயிரே வந்தது

“டேய்... இனிமே இந்த மாதிரி வேலைக்காவாத பெல்லக்கா பசங்களை எல்லாம் இட்டாந்தே… அறுத்து காக்காய்க்குப் போட்ருவேன். ஆமா!” என்று சிகாமணியிடம் அக்கா கத்திக் கொண்டிருந்தாள்.

30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது!

சாகும் வரை மறக்க முடியாத இந்த அனுபவம்தான் ‘அயன்’ படத்தில் அப்படியே இடம் பெற்றது. சிட்டி (ஜெகன்), தேவாவை (சூர்யா) இது மாதிரி வீட்டுக்கு அழைத்துப் போவான். வாசக்காலில் மஞ்சள், மாவிலைத் தோரணம். அப்பாவி தேவாவைப் பார்த்து, அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண் ‘பிஞ்சு வெண்டைக்காம்மா' என்று நக்கலடித்தபடி இப்படியும், அப்படியுமாகப் பந்தாடுவாள்.

திரைப்பட அக்கா சிட்டியின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தைப் பிடுங்கிக் கொள்வாள். தேவாவின் சட்டையைப் பற்றி “டேய். நீ பாலு வோணும்னு கேட்டப்பவே நெனைச்சேன்டா…” என்று அவனை குமுறு குமுறுவாள்.

ஒன்றும் அறியாத இளைஞனை, நான்கும் அறிந்த இளம்பெண்கள் சூழ்ந்து நக்கல் அடித்த இந்தக் காட்சியை மக்கள் மிகவும் ரசித்தார்கள்.

- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x