Last Updated : 25 Jul, 2017 10:10 AM

 

Published : 25 Jul 2017 10:10 AM
Last Updated : 25 Jul 2017 10:10 AM

கல்விக் கடன் பெறுவது எப்படி?

பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன. ஆனால், கல்விக்கான செலவு மலைப்பு ஏற்படுத்துகிறது. கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தால் மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டுவிலகும் நிலை மிகவும் துயரமானது. இந்த நிலையை மாற்றவே வங்கிகள் மூலம் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்திவருகிறது. இது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், கல்விக் கடனை எப்படிப் பெறுவது என்பது பலருக்கும் புரியாத புதிர்.

மாணவரும் பெற்றோரும் வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெறுவது எப்படி, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சென்று பயில எங்கெல்லாம் கடனுதவி வழங்கப்படுகிறது? இவற்றைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உள்ளடக்கியது ‘How to get Educational Loans to Study in India and Abroad’புத்தகம்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவி, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் கல்வி உதவித்தொகைகள் என்னென்ன, மத்திய அரசின் நிதி அமைப்புகள் வழங்கும் கடனுதவித் திட்டங்கள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள், தொடர்பு முகவரி, தகுந்த காரணங்கள் இன்றி கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பது உள்படப் பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய இப்புத்தகத்தைத் திருப்பூரை அடுத்த அம்மாபாளையத்தைச் சேர்ந்த ந.குமரன் எழுதியுள்ளார். அவருடன் உரையாடியதலிருந்து...

எந்தெந்தப் படிப்புகளில் சேருவதற்குக் கல்விக் கடன் வழங்கப்படுகிறது?

பல்கலைக்கழக மானியக் குழுவான யூ.ஜி.சி.யின் அங்கீகாரம் பெற்ற அனைத்துப் படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு படித்துவிட்டுத் தொழில் பயிற்சியிலும் தொழில்நுட்பப் படிப்புகளிலும் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்குமா?

நிச்சயமாகக் கிடைக்கும். ‘ஸ்கில் லோன் ஸ்கீம்’, ‘வொகேஷனல் லோன் ஸ்கீம்’ என இரு பிரிவுகளாக வழங்கப்படுகிறது. ஐ.டி.ஐ.யில் 40 வயது வரையிலும் சேர முடியும்.

கல்விக் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி?

கல்விக் கடனை ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பெறலாம். ஒரே வங்கியிலும் பெறலாம். குடும்பத்தில் உள்ள வேறு எந்தக் கடனும் இதைப் பாதிக்காது. இதற்காகவே மத்திய அரசின் ‘வித்யாலட்சுமி போர்டல்’ 40 வங்கிகளுடன் இயங்கிவருகிறது. அதில் 70-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் உள்ளன. அதில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். நம்முடைய விண்ணப்பத்தின் நிலை குறித்தும் அதில் தெரிந்துகொள்ளலாம்.

என்னுடைய நூலில் 134 வங்கிகளுடைய திட்டங்களும் கடன் உதவிகளும் தொகுக்கப்பட்டுள்ளன. இதைப் பெற வங்கிகளுடைய இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அளிக்கப்படும் விண்ணப்பங்களை எக்காரணம் கொண்டும் கிளை மேலாளர்கள் நிராகரிக்க முடியாது. பிராந்திய மேலாளர் தகுதியில் உள்ளவர்கள் அதுவும் தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே நிராகரிக்க முடியும். 30 நாள் காலவரையறைக்குள் விண்ணப்பதாரருக்குக் கடன் அளிக்க வேண்டும் அல்லது நிராகரிப்புக்கான தகுந்த பதில் சொல்ல வேண்டும்.

கல்வி கடனாக எவ்வளவு வழங்கப்படும்?

இதில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் ரூ. 4 லட்சம் வரை கடன் தொகை பெறலாம். பெற்றோர் மாணவர் கையெழுத்திட வேண்டும். மைனராக இருந்தால் இணைக் கடன் தாரராவார். திருமணமாகியிருந்தால் பெற்றோர் அல்லது மாமனார் அல்லது மாமியார் கையெழுத்து இடலாம். பங்குத்தொகை கிடையாது. எந்தப் பிணையும் தேவையில்லை.

இரண்டாவதாக, ரூ. 4- ரூ. 7.5 லட்சம் வரையான கடனுக்கு மாணவர், பெற்றோர், மூன்றாம் நபர் ஜாமீன்தாரர் பிணைக் கையெழுத்திட வேண்டும். அடமானம் தேவையில்லை.

மூன்றாவதாக, ரூ.7.5 லட்சம் முதல் எவ்வளவு கடன் தொகை தேவைப்படுகிறதோ அந்தக் கடன் தொகைக்கு அடமானம் தேவை. அவை, இடமாகவோ கட்டிடங்களாகவோ இருக்கலாம். அரசுக் கடன் பத்திரங்கள், தேசியப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவையாகவும் இருக்கலாம்.

கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளில் முன் பணம் செலுத்த வேண்டுமா?

ரூ. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கடனுக்கு 5 சதவீதம் பயனாளி பங்குத்தொகை செலுத்த வேண்டும். இதை உடனடி ரொக்கமாகவே செலுத்த வேண்டும் என்பதில்லை. அரசு அல்லது தனியாரால் கிடைக்கும் கல்வி உதவித் தொகை மூலமும் இதை ஈடு செய்யலாம். வெளிநாட்டில் பயில 15 சதவீதம் பங்குத்தொகை செலுத்த வேண்டும்.

கல்விக் கடனுக்கு வட்டி எவ்வளவு வசூலிக்கப்படும்?

ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதங்கள் மாறுபடும். ஆண்டுக்கு 15 முதல் 16 சதவீதம்வரை வட்டி வசூலிக்கின்றனர்.

கல்விக் கடனை எவ்வளவு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்?

படிப்பு முடித்தவுடன் ஓராண்டு அல்லது வேலை கிடைத்த 6 மாதங்களுக்குப் பின்னர் கடன்தொகையைத் தவணையாகச் செலுத்த வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்குமா?

நிச்சயமாகக் கிடைக்கும்.

வட்டி மானியம் கிடைக்குமா?

மத்திய அரசு வட்டி மானியம் அளிக்கிறது. ஆண்டுக்கு 4 லட்சம் வருமானம் பெறுவோர் இப்பலனை அனுபவிக்க முடியும். அனைத்துச் சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களும் இதைப் பெறத் தகுதியானவர்கள். கடனுக்கு விண்ணப்பிக்கும்போதே வருமானச் சான்றையும் இணைத்து வழங்க வேண்டும்.

தவணைக்காலம் எவ்வளவு?

ரூ.7.5 லட்சம் வரையான கடனை 4 முதல் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

7.5 லட்சத்துக்கும் மேலான கடன் தொகையை 15 ஆண்டுகள்வரை கட்டலாம்.

எதுக்கெல்லாம் கடன் வாங்கலாம்?

பொறியியல் படிப்புக்கு 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒரே கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். கல்லூரி, விடுதி, தேர்வு, நூலகம், ஆய்வுக் கூடம், வெளிநாட்டுக்கான பயணச் செலவு, காப்பீட்டுத்தொகை (திருப்பித்தரத்தக்க காப்புத்தொகைக்கான ரசீதுகளை இணைக்க வேண்டும்), உபகரணங்கள், சீருடை, படிப்புக்குக் கட்டாயம் தேவையெனில் கணினி அல்லது மடிக் கணினிக்குரிய தொகை, புராஜெக்ட், அதற்கான பயணச் செலவு ஆகியவற்றையும் சேர்த்துக் கடன் கேட்கலாம்.

கல்விக் கடன் மாணவர்களுக்கு மட்டுமின்றி வாழ்வின் பலதரப்பட்ட மக்களுக்கும் கிடைக்கும். ஆடிட்டிங் படிக்க விரும்புவருக்கு 50 வயது வரை கடன் கிடைக்கும். சில வங்கிகள் நர்சரி தொடங்கி பிளஸ் டூவரை வழங்குகின்றன.

மனு தள்ளுபடி செய்யப்பட்டால் என்ன செய்வது?

தகுந்த காரணமின்றி நிராகரிக்கப்பட்டால் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கலாம். அதை அவர் அந்த வங்கிக்கு அனுப்புவார். அதிலும் பலன் கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட வங்கித் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அதுவும் தகுந்த காரணங்களின்றி நிராகரிக்கப்பட்டால், Chief general manager, RPCD , இந்திய ரிசர்வ் வங்கி, சென்ட்ரல் ஆபீஸ் பில்டிங், 10-வது தளம், சாகித் பகத்சிங் மார்க், மும்பை - 400001. போன்: 022-22610261 என்ற முகவரிக்குப் புகார் அனுப்பி நிவாரணம் தேடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x