Published : 01 Jul 2017 11:14 AM
Last Updated : 01 Jul 2017 11:14 AM

சொந்த வீடு அவசியம் ஏன்?

மணல் தட்டுப்பாடு, மனை விலை உயர்வு போன்ற பல காரணங்களால் கட்டுமானத் துறை தேக்கம் கண்டாலும் சொந்த வீடு என்னும் கனவு குறைந்தபாடில்லை. ஏனெனில் சொந்த வீடு என்பது அந்தஸ்துக்கான குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் தனது சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் குறைந்தபட்ச சொத்தாக வீட்டையே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் வாடகை வீட்டில் வசிப்பவர்களின் கஷ்டங்கள் சொல்லி மாளாது. சொந்தக்காரர்கள் வந்து தங்கினால் பிரச்சினைகள் வரும். சுதந்திரமாக நம் வீட்டைப் புழங்கக்கூட முடியாது. வீட்டு உரிமையாளர்களின் தலையீடு எல்லா நிலைகளிலும் இருக்கும். இதுமட்டுமல்ல ஓவ்வொரு முறையும் வீடு மாறும் போது, ரேஷன் கார்டு விலாசம் மாற்றுவது முதல் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது வரை பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதற்காக தனியாக மெனக்கெட வேண்டும். அடிக்கடி வீடு மாறும்போது தேவைப்படும் உழைப்பு, செலவு, பொருட்களின் தேய்மானங்கள்கூட சொந்த வீடு வாங்க பலரைத் தூண்டுகிறது.

இப்போதெல்லாம் வீட்டு வாடகை சொந்த வீட்டின் மாதத் தவணை அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதனால் சென்னை போன்ற பெருநகரங்களில், வாடகை வீட்டில் குடியிருப்பதற்காகச் செய்யப்படும் செலவைவிட சொந்த வீடு வாங்குவது மேல் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. சில வாடகை வீடுகளில்தான் மின்சாரம் தனி இணைப்பாக இருக்கும். பல வீடுகளில் துணை மின் இணைப்பாக இருக்கும். அதற்கு ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கும் வீட்டுக்காரர்களும் உண்டு. அதுமட்டுமல்லாமல் தண்ணீருக்கு தனிக் கட்டணம், வீட்டு பராமரிப்புக்கு தனிக்கட்டணம் என வாடகைக்குக் குடியிருப்பவர்கள் செலவிடும் தொகை ஏராளம். இதற்கு ஆகும் செலவை வீட்டுக் கடனுக்குச் செலுத்தி விடலாம் என்று நினைக்கும் வாடகைதாரர்கள், சொந்த வீட்டை நோக்கிச் செல்கிறார்கள்.

நகரங்கள் விரிவடைந்திருப்பதுகூட வீடு வாங்கும் ஆசையின் மற்றொரு விளைவே. இருக்கும் விலைவாசியில் நகரின் மையப்பகுதியில் வீடு வாங்குவது நடுத்தர குடும்பத்தினருக்கு கனவுதான். எனவே புறநகர்ப் பகுதியிலாவது வீடு வாங்கி தங்கள் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக்கொள்கின்றனர். மண்ணில் போட்ட காசு வீணாகாது என்பது இன்றையச் சூழலில் நூற்றுக்கு நூறு உண்மை. வீடு, நிலம் வாங்குவது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல, வீடு வாங்குவதற்கான சக்தி இருக்கும் போதே, குறிப்பாக நல்ல வேலையில் வருவாய் ஈட்டும் போதே, அதை வாங்குவது புத்திசாலிதனம். கட்டுமானப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தச் சூழலில், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து வீடு கட்டுவது நடுத்தர மக்களுக்கு பெரும் சிரமமாக இருக்கலாம். எனவே இப்போதே வீடு வாங்குவது சாலச்சிறந்தது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள்.

மேலும் இப்போது இயற்றப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் சட்டம் முன்பைவிட வீடு வாங்குபவர்களுக்குச் சாதகமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. கட்டுமானத்தில் ஏற்படும் குறைகளைக்கூட சரிசெய்து கொடுக்க வேண்டியது கட்டுநர்களின் பொறுப்பு என்ற அம்சமும் இந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் எனப் பல காரணங்களால் கட்டுமானத் துறை தேக்கத்தில் உள்ளது. இந்தச் சமயத்தில் வீடு வாங்குவது சரியானதாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x