Last Updated : 10 Jul, 2017 10:56 AM

 

Published : 10 Jul 2017 10:56 AM
Last Updated : 10 Jul 2017 10:56 AM

பயணிகள், பாதசாரிகளின் பாதுகாப்புக்கான கார் தயாராவது எப்படி?

கார் உற்பத்தித் துறையில் சமீப காலமாக மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வதற்காக மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட கார்களை தயாரிக்கும் பணிகளை இங்குள்ள நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள் சோதனை செய்வதற்கான கருவிகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து வருகின்றன.

ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேர் உயிரிழப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். இந்த எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும். இதற்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் 2020 ஆகும். இந்த இலக்கை எட்ட வேண்டுமெனில் பாதுகாப்பான பயணம், சாலை விழிப்புணர்வு, ஓட்டுவதற்கு சிறந்த பயிற்சி, சாலைகளின் வடிவமைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கார் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் பாதசாரிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது.

பயணிகள் பாதுகாப்பு என்றாலே வெறுமனே கார்களினுள் உயிர் காக்கும் ஏர் பேக் வைப்பது மட்டுமே போதுமானதல்ல. ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை உருவாக்குவது மட்டும் பிரச்சினை அல்ல. ஒரு காரில் ஒரு பொருளை அதிகரிப்பதன் மூலம் அதன் எடை கூடும். இதை ஏற்றுக் கொண்டால் காரின் எரிபொருள் திறன் குறையும். அதேபோல வாகனத்தின் செயல்பாடு, சொகுசுத் தன்மை குறைந்துபோகும். இவை அனைத்தையும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் புத்தாக்க முயற்சிகள் மூலம் அனைத்து மாடல்களிலும் புதுமைகளை புகுத்தி வருகிறது மாருதி சுஸுகி.

வாகனத்தின் எடையைக் குறைக்க மேம்பட்ட உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை கடினமான சூழலையும் தாக்குப்பிடித்து பாதுகாப்பான பயணத்தை அளிக்க வல்லவை. வாகனத்தின் எடையைக் குறைத்து எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்குத்தான் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. இதில் முக்கிய அம்சம் பயணிகளின் பாதுகாப்பும் ஆகும்.ஒரு பாதுகாப்பான கார் உருவாக்கம் என்பது அதை தொடர் மோதல் சோதனைக்கு உள்ளாக்குவதாகும். மாதிரி சோதனை (சிமுலேஷன்) மற்றும் உண்மையான சோதனைக்குள்ளாக்குவதும் இதில் அடங்கும்.

சோதனைகளின் போது விபத்து ஏற்பட்டால் காரில் பயணிக்கும் மனிதர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை ரப்பரால் ஆன மனித பொம்மைகள் மூலம் அளவீடு செய்யப்படுகிறது. இதற்காக ஆண், பெண், குழந்தைகள் வடிவிலான மாதிரி பொம்மைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தவிர, பாதசாரிகளுக்கான ரப்பர் பொம்மைகளும் உருவாக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதிரி பொம்மையும் 35 முதல் 40 முறை சோதிக்கப்படுகின்றன. இத்தகைய சோதனை ஹரியாணா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கார் வடிவமைப்பில் உயிர் பலி நிகழா வண்ணம் தடுப்பது மட்டுமின்றி அனைத்து விதமான அசம்பாவிதங்களையும் எதிர்கொள்ளும் வகையில் கார்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்காக சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்காக கார்கள் தயாரிக்கப்படுவதில்லை. வாகனங்கள் ஓட்டுபவர்கள் அதற்குரிய சாலை விதிகளை கடை பிடிக்க வேண்டியதும் கட்டாயமாகிறது. குறிப்பாக காரின் முன்னிருக்கையில் அமர்ந்து பயணிப்பவர், காரை ஓட்டுபவர் இருவருமே சீட் பெல்ட் போட வேண்டியது கட்டாயமாகும். பின்னிருக்கையில் அமர்வோரும் சீட் பெல்ட் அணிந்தால் அது கூடுதல் பாதுகாப்பு.

அனைத்துக்கும் மேலாக காரை ஓட்டுபவர்களுக்கு உரிய பயிற்சியை தரமாக அளிக்க வேண்டும். கார் ஓட்டுபவர்களின் பாதுகாப்பு சீட் பெல்டிலும் உள்ளது என்பதை உணர்த்த வேண்டும். பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் சீட் பெல்ட் அணிந்திருந்தால் விபத்தின் போது பயணிகளைக் காக்கும் ஏர் பேக் மிகச் சிறப்பாக செயல்பட்டு உயிரைக் காக்கும். சீட் பெல்ட் அணியாவிட்டால் ஏர் பேக் விரிவதால் உரிய பாதுகாப்பு கிடைக்காது. காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பாதுகாப்பான கார் உருவாக்கம் என்பது அதி நவீன ஆய்வகங்களிலும் சோதனை மையங்களிலும் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. அனைத்துக்கும் மேலாக மிகத் திறமையான பொறியாளர்கள் பாதுகாப்பான கார் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர். மாருதி சுஸுகி நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் பொறியாளர்களின் நிபுணத்துவத்தால் பாதுகாப்பான கார்கள் பயணிகள் மட்டுமின்றி பாதசாரிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

இதன் மூலம் சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கையைக் குறைக்கும் இந்திய அரசின் இலக்கை நிறைவேற்றுவதில் கணிசமான பங்களிப்பை மாருதி சுஸுகி மட்டுமின்றி பிற நிறுவனங்களும் அளிக்கின்றன.

(கட்டுரையாளர் மாருதி சுஸுகி இன்ஜினீயரிங் பிரிவின் செயல் இயக்குநர்)
- cv. raman@maruti. co. in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x