Published : 24 Jul 2017 09:56 AM
Last Updated : 24 Jul 2017 09:56 AM

அமெரிக்க சாலைகளில் சீறிப் பாயும் 10-வது தலைமுறை ஹோண்டா அக்கார்ட்!

ஜப்பானின் ஹோண்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது 10-வது தலைமுறை ஹோண்டா அக்கார்ட் காரை அமெரிக்காவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஆட்டோமொபைல் சந்தையில் கோலோச்சும் எஸ்யுவி-க்கள், கிராஸ்ஓவர்கள் மற்றும் பிக்-அப் டிரக்குகள் ஆகியவற்றுக்குப் போட்டியாக இந்தக் காரை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

இம்மாத இறுதியில் டொயோடா நிறுவனம் புதிய கேம்ரியை அமெரிக்காவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காருக்குப் போட்டியாக ஹோண்டா முன்கூட்டியே அக்கார்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிக பாதுகாப்பு அம்சங்கள், மோதல் தவிர்ப்பு பிரேக்கிங் வசதி, அழகிய வடிவமைப்பு ஆகியன ஜெர்மன் தயாரிப்புகளுக்கு சவால் விடும் வகையில் சிறப்பாக ஹோண்டா அக்கார்டில் உள்ளன. அனைத்துக்கும் மேலாக எரிபொருள் சிக்கனம் இதன் சிறப்பம்சமாகும். ஆட்டோ ஷிஃப்ட் கியர் கொண்ட சில மாடல்கள் 10 கியர்களுடன் வெளி வந்துள்ளது.

அனைத்திலும் முதன்மையானதாக முன்புற சக்கர சுழற்சி (Front Wheel Drive) எனும் புதிய நுட்பத்தைக் கொண்டதாக இந்தக் கார்கள் வந்துள்ளன. மேலும் இதில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் பகுதி வைஃபை-யுடன் இணைக்கப்பட்டதாக வந்துள்ளது.

அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் டொயோடா காம்ரி மற்றும் ஹோண்டா அக்கார்ட் ஆகும். விரைவிலேயே நிசான் மோட்டார் நிறுவனமும் அல்டிமா எனும் புதிய ரகக் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அனைத்து நிறுவனங்களின் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் சோனட்டாவின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்தடுத்து இவை அனைத்துமே அமெரிக்க சாலைகளில் சீறிப் பாய உள்ளன.

புதிய அறிமுகம் மூலம் நடப்பாண்டில் 3.5 லட்சம் கார்களை நிறுவனம் விற்பனை செய்யும் என்று ஹோண்டா நிறுவன மூத்த துணைத் தலைவர் ஜெஃப் கான்ராட் தெரிவித்துள்ளார். செடான் கார்களின் சந்தை சரிந்துள்ள போதிலும் இந்த அளவுக்கு விற்பனை இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் செடான் கார்கள் விற்பனை சரிந்து வருகிறது. இதனால் அமெரிக்க நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு மோட்டார் கார்ப்பரேஷன் ஆகியன செடான் ரக உற்பத்தியை நிறுத்தி விட்டன. ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனம் செடான் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் பிரபலமானது சிவிக் மற்றும் அக்கார்டு மாடல்கள். சமீபத்தில்தான் சிவிக் மாடல் காரின் மேம்படுத்தப்பட்ட ரகம் அறிமுகமானது. அக்கார்டு மாடல் கார் முற்றிலுமாக மாற்றப்பட்டு 10-வது தலைமுறை காராக அறிமுகமாகியுள்ளது. முந்தைய மாடலை விட இதன் சக்கர அடிப்பரப்பு அதிகம். அதேபோல பல்வேறு மாறுதல்கள் இதில் செய்யப்பட்டுள்ளன. ஐந்து பேர் (டிரைவர் உள்பட) மிகவும் சவுகர்யமாக பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கால்களை நீட்டி வைத்து பயணிக்கும் வகையில் தலைப் பகுதி இடிக்காத வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் மூன்று வெவ்வேறு இன்ஜின்களை கொண்ட கார்கள் சந்தைக்கு வந்துள்ளன. இதில் ஒன்று மட்டுமே ஹைபிரிட் மாடலாகும். மற்றவற்றில் டர்போ சார்ஜ்டு வசதி உள்ளது. ஓட்டுநருக்கு உதவும் வகையில் பல மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இதில் உள்ளன. பிளைண்ட் ஸ்பாட் தகவல், முன்புற மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார், குறுக்கு சாலை கடக்கும்போது கவனிக்கும் வசதி மற்றும் டிரைவரை விழிப்புடன் வைத்திருக்கும் கண்காணிப்பான் ஆகியன இதில் உள்ளன.

இது தவிர காரில் டிராக்ஷன் கண்ட்ரோல், ஆன்டி-லாக் பிரேக் வசதி, எலெக்ட்ரானிக் பவர் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன், டயரின் காற்றழுத்தம் காட்டும் கருவி, பன்முக பரிமாணங்களை வெளிப்படுத்தும் பின்புற கேமிரா மற்றும் சிறப்பான வழிகாட்டும் வசதி ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். அமெரிக்க சந்தைக்கு ஏற்ப இடது புற ஸ்டீரிங் வீல் இதில் உள்ளது.

அடுத்த ஆண்டில் இந்தியச் சந்தைக்கு இந்த கார் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x