Last Updated : 28 Jul, 2017 10:16 AM

 

Published : 28 Jul 2017 10:16 AM
Last Updated : 28 Jul 2017 10:16 AM

பீட்பாக்ஸ் இசை: அசத்தும் இளைஞர்!

ஒரு இசைக் கச்சேரியை நடத்த எத்தனை பேர் தேவை? இசைக் கருவிகளைப் பொறுத்து குறைந்தது ஐந்து முதல் எட்டுக் கலைஞர்கள் தேவைப்படுவர்கள் அல்லவா? ஆனால், சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல் கிருஷ்ணன் என்னும் இளைஞர், எந்த இசைக் கருவியோ கலைஞரோ இல்லாமல், வெறும் வாயாலேயே ஒரே ஆளாக ‘பீட்பாக்ஸிங்’ எனும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி ஆச்சரியமூட்டுகிறார்.

வாய், நாக்கு, உதடுகள் கொண்டு குரலில் ஒலி அல்லது அதிர்வுகளை ஏற்படுத்தி, இசைக் கருவிகளின் ஒலிகளை எழுப்புவதே பீட்பாக்ஸிங். இன்னும் எளிதாகச் சொல்லவேண்டும் என்றால், ஒரு பாட்டைக் கேட்கும்போது, அதிலிருந்து பாடலின் வரிகளையும் பாடியவரையும் நீக்கிவிட்டால், இசை மட்டுமே மிஞ்சும். அதை ‘கரோக்கி’ இசை என்றும் சொல்வார்கள். ஆனால், ஒரு பீட்பாக்ஸர், எந்தக் கருவியும் இல்லாமலேயே, பாடலுக்குரிய இசையைத் தன் வாய் மூலமாக இசைத்துக் காட்டுவார். இதில்தான் கோகுல் கிருஷ்ணன் வெளுத்துக்கட்டுகிறார்.

முதன்முதலாக சூர்யா நடித்த கஜினி படத்தின் ‘சுட்டும் விழிச் சுடரே’ பாடலைத்தான், இந்தப் பாணியில் செய்துபார்த்திருக்கிறார். அதை ஆர்வமாகக் கேட்ட அவருடைய நண்பர்கள் ஊக்குவித்ததால், அந்தப் பாடலுக்குத் தாளம் சேர்த்துப் பயிற்சி செய்து வந்திருக்கிறார். பின்னர் படிப்படியாகப் பல சினிமா பாடல்களையும் பீட்பாக்ஸிங் செய்யத் தொடங்கியிருக்கிறார் இந்த இளைஞர்.

gokul (2)

இந்தத் திறமையைக் கண்ட புகழ்பெற்ற கடம் வித்வான் விக்கு விநாயக்ராம், இசை நிகழ்ச்சிகளில் பீட்பாக்ஸிங் செய்ய கோகுலுக்கு வாய்ப்பளித்தார். கல்லூரியில் தன்னுடைய பீட்பாக்ஸிங் திறமையை நிரூபித்து, கல்லூரியின் கடைசி ஆண்டுக்குள் தானாகவே இசை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார் கோகுல்.

“என்னுடைய பீட்பாக்ஸிங் இசையைக் கேள்விப்பட்ட பலரும் இசைக் கச்சேரிக்கு அழைக்க ஆரம்பித்தார்கள். அழைப்புகள் தொடர்ந்து வரவே, இந்தியாவின் பல மாநிலங்களில் பிரபலமான தாண்டியா, பாங்கரா, தமிழ்நாட்டின் நாட்டுப்புற இசைகள், மைக்கேல் ஜாக்சனின் இசை எனப் பலவற்றையும் பீட்பாக்ஸிங் மூலம் நேர்த்தியாகக் கற்க வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது இந்த இசையையும் நிகழ்ச்சிகளில் செய்து காட்டி வருகிறேன்” என்கிறார் கோகுல்.

இவரது இசை நிகழ்ச்சிகளை யூடியூபில் பார்க்கும் பல இளைஞர்கள் தற்போது பீட்பாக்ஸிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சியும் அளித்தும் வருகிறார். “பீட்பாக்ஸிங் இசையைப் பற்றி பயிற்சி அளிக்க எனக்கு யாரும் இருக்கவில்லை. ஆனால், ஊக்குவிக்க நிறைய பேர் இருந்தார்கள். இதில் எனக்குள்ள ஒரே குறை, மற்ற இசைக் கலைஞர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள்போல பீட்பாக்ஸிங் கலைஞர்களுக்குக் கிடைப்பதில்லை. பயிற்சி அளிக்கக்கூட முறையான மையங்கள் இல்லை” என்று ஆதங்கப்படுகிறார் கோகுல்.

இசைக் கருவிகளே இல்லாமல், பாடகர்களையும் பீட்பாக்ஸிங் கலைஞர்களையும் கொண்டு ‘அகபெல்லா’ (Acabella) என்றழைக்கப்படும் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தி, ‘இந்திய பீட்பாக்ஸிங் கலைஞர்’ என்ற பாராட்டைப் பெறுவதே கோகுலின் ஒரே ஆசை. அதற்கான முயற்சிகளில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x