Last Updated : 26 Apr, 2014 01:25 PM

 

Published : 26 Apr 2014 01:25 PM
Last Updated : 26 Apr 2014 01:25 PM

வீடு வாங்க தென் சென்னையை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?

நீங்கள் சென்னையில் வீடு ஒன்று வாங்க வேண்டுமென நினைக்கிறீர்களா? தயங்காமல் தென் சென்னைப் பக்கம் தேடுங்கள். ஏனெனில் இங்குதான் குடியிருக்க உகந்த வீடுகள் அடங்கிய குடியிருப்புகள் மிகவும் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் வளர்ந்துவருகின்றன. சென்னையின் வளர்ந்துவரும் குடியிருப்புகளில் முக்கால்வாசி தென் சென்னையின் பல்வேறு பகுதிகளில்தான் உருவாக்கப்படுகின்றன என ரியல் எஸ்டேட் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல கணக்கெடுப்புகள் தெவிரிக் கின்றன.

அந்த ஆய்வை நிரூபிக்கும் விதமாகக் கடந்த இரண்டாண்டுகளில் கேளம் பாக்கம், தாம்பரம், ஓஎம்ஆர், ஈசிஆர், பள்ளிக்கரணை, திருவான்மியூர் போன்ற பகுதிகளில் தான் அதிகப்படியான வீடமைக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தென் சென்னையில் அமைக்கப்படும் வீடுகளைப் பார்ப்போர்க்கும்போது நம் மனத்தில் ஆச்சரியமான சில கேள்விகள் எழும்; தென் சென்னையில் மட்டும் ஏன் இவ்வளவு வீடுகள் கட்டப்படுகின்றன? ஐடி துறை நிறுவனங்கள் இந்தப் பகுதியில் பெருகியதுதான் இதற்கான காரணமா? வேறு ஏதும் பிரத்யேகக் காரணங்கள் உண்டா?

இந்தப் பகுதியில் பெருகி யுள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஐடி துறையினரின் வீட்டுத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக அதிகமான வீடுகள் கட்டப்பட்டன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில் தென் சென்னையின் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஐடி துறைதான் ஊக்குவித்தது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஐடியின் வளர்ச்சிக்குப் பின்னரே அங்கு அதிகப்படியான அடுக்குமாடிகள் தடாலடியாக எழும்பி நின்றன. தனித் தனி வீடுகள் எல்லாம் அபார்ட்மெண்ட்களாக மாறின. ஆனால் தென் சென்னையில் வீடுகள் அதிகரித்தமைக்கு ஐடி துறை தவிர்த்த பிற காரணங்களும் உள்ளன.

சென்னையை நாம் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்த சென்னையை இன்று நாம் வட சென்னை என அழைக்கிறோம். சுதந்திரம் அடைந்து தொழில் வளர்ச்சிக்குப் பிறகு உருவான சென்னையின் புறநகர்தான் இன்று தென் சென்னையாக இருக்கிறது. வட சென்னைப் பகுதியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு வழியே இல்லாதபடி நெருக்கடியாக அநேக வீடுகளைக் கட்டிவிட்டனர். மேலும் வட சென்னை குறித்து மக்கள் மனத்தில் தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. சில சினிமாக்களும் இந்தப் பின்னணியில் உருவாகியுள்ளன என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இது விளங்கும். ஆனால் உண்மையில் குற்றச் செயல்கள் எல்லா இடங்களுக்குப் பொதுவானதுதான். ஆனால் இந்தத் தவறான பிம்பம் புதிதாக வீடு வாங்குவோரைப் பாதித்திருக்கிறது என்பது கசப்பான உண்மை. இந்தக் காரணத்திற்காகவும் மேலும் தென் சென்னையில் வீடு கட்டுவதற்கான நிலம் அதிகமாக உள்ள காரணத்தாலும்தான் தென் சென்னையில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது.

மக்களை வசீகரிக்கும் வீட்டுத் திட்டங்கள்

அதுபோலத் தென் சென்னைப் பகுதியில் வீடு வாங்க விரும்பும் நடுத்தர மக்களைக் கவரும் விதத்தில் பல திட்டங்களும் உள்ளன. கேளம்பாக்கத்திலும் பல குடியிருப்புத் திட்டங்கள் வளர்ந்துவருகின்றன. இவை இந்த ஆண்டின் மத்தியில் குடியேறத் தகுதி பெறும். இந்தக் குடியிருப்புகளைப் பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் உருவாக்கிவருகின்றன. இந்தக் குடியிருப்புகளில் வீட்டின் விலை ரூ. 27 லட்சம் - ரூ. 45 லட்சம் உள்ளன. இவற்றில் சிங்கிள், டபுள். டிரிப்பிள் பெட்ரூம்கள் கொண்ட வீடுகள் விற்பனையாக உள்ளன.

தென் சென்னைப் பகுதியில் புதிய வீடு வாங்க விரும்பினீர்கள் எனில் பள்ளிக்கரணை பகுதியில் ஏராளமான வீடுகள் உருவாகி வருகின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் நிலையில் ஐந்தாறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இப்பகுதியில் உருவாகிவருகின்றன. வீடொன்றின் விலை 35 லட்சத்திலிருந்து 80 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டபுள், டிரிப்பிள் பெட்ரூம்களைக் கொண்ட வீடுகள் இங்கே கிடைக்கும்.

லட்சங்களைத் தாண்டி கோடிக்கணக்கான ரூபாய் பெறுமான வீட்டைத் தேடுகிறீர்களா? நீங்கள் ஈசிஆருக்குச் செல்ல வேண்டும். ஏனெனில் இங்கு இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் தயாராகின்றன. இவை இந்த ஆண்டில் குடியேறத் தயாராகும். வீடொன்றின் விலை ரூ 1.4 கோடி- ரூ 3.6 கோடி. இங்கே மூன்று பெட்ரூம்கள் நான்கு பெட்ரூம்கள் கொண்ட வீடுகளும் வில்லா வகையான தனி வீடுகளும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x